Last Updated : 05 Jul, 2017 01:38 PM

 

Published : 05 Jul 2017 01:38 PM
Last Updated : 05 Jul 2017 01:38 PM

உலகின் முதல் விவசாயி!

# எறும்பு ஃபார்மிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவரை 12,500 எறும்பு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அண்டார்டிகாவைத் தவிர உலகம் முழுவதும் எறும்புகள் வாழ்கின்றன. பெரும்பாலான எறும்புகள் சிவப்பு, கறுப்பு நிறங்களில் காணப்படுகின்றன. சில வகை எறும்புகள் பொன் நிறத்திலும் இருப்பதுண்டு. எறும்பு தன் எடையைப் போல 20 மடங்கு எடையைத் தூக்கும் சக்தி கொண்டது.

# ஓர் எறும்புக் கூட்டத்தில் 100 எறும்புகளில் இருந்து லட்சக்கணக்கான எறும்புகள் வரை இருக்கின்றன. ராணி எறும்பு, ஆண் எறும்பு, வேலைக்கார எறும்புகள் என்று மூன்று பிரிவுகள் ஒரு கூட்டத்தில் உண்டு.

# ராணி எறும்புக்கும் ஆண் எறும்புக்கும் இறக்கைகள் உள்ளன. ராணி எறும்பு உருவத்தில் சற்றுப் பெரியது. ஆண் எறும்புடன் குடும்பம் நடத்திய பிறகு ராணி எறும்பு முட்டைகள் இடுகிறது. இனப்பெருக்கம் செய்வது, வேலைக்கார எறும்புகளை வழிநடத்துவது போன்ற பணிகளை ராணி எறும்பு செய்கிறது. வேலைக்கார எறும்புகள் உணவு சேகரிப்பது, கூட்டைச் சுத்தம் செய்வது, புழுக்களுக்கு உணவூட்டுவது போன்ற பணிகளைச் செய்கின்றன.

# வேலைக்கார எறும்புகள் கூட்டிலிருந்து 200 மீட்டர் தூரம் வரை சென்று உணவு சேகரிக்கின்றன. ஒவ்வோர் எறும்பும் ரசாயனத் திரவத்தைச் சுரந்தபடியே செல்வதால், அதைப் பின்பற்றி மற்ற எறும்புகள் வரிசையாக அணிவகுக்கின்றன. ராணி எறும்பு 30 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. வேலைக்கார எறும்புகள் ஓராண்டிலிருந்து 3 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. ஆண் எறும்புகள் இனப்பெருக்கம் செய்த சில வாரங்களில் மடிந்துவிடுகின்றன. ராணி எறும்பு இறந்துவிட்டால், சில மாதங்கள் வரையே அந்த எறும்புக் கூட்டம் வாழும்.

# இலைவெட்டி எறும்பு, உலகின் முதல் விவசாயி என்று அழைக்கப்படுகிறது. இது தனக்குத் தேவையான உணவைத் தானே உருவாக்கிக்கொள்கிறது. சிவப்பு நெருப்பு எறும்பு உறுதியான கொடுக்கைப் பெற்றிருக்கிறது. கொட்டினால் வலி அதிகமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x