Published : 19 Jul 2017 10:20 AM
Last Updated : 19 Jul 2017 10:20 AM
கூடைப்பந்து விளையாட்டில் தரையிலிருந்து எவ்வளவு உயரத்தில் கூடை பொருத்தப்பட்டிருக்கும் தெரியுமா? 10 அடி. அத்தனை உயரத்தில் இருக்கும் கூடைக்குள் பந்தைப் போட வேண்டுமென்றால் எம்பிக் குதிக்காமல் வேலைக்கு ஆகாது. ஆனால், சன் மிங் மிங்குக்கு அந்தக் கவலை இல்லை. எம்பவே வேண்டாம். கையை உயர்த்திப் பந்தைக் கூடைக்குள் தள்ளினால் போதும். அவரது உயரம் அப்படி. 7 அடி 9 அங்குலம்.
1983-ல் சீனாவில் பிறந்தவர். பதினைந்து வயது வரை கூடைப் பந்தைத் தொட்டதில்லை. அப்போதே அவரது உயரம் 6 அடி 7 அங்குலம். அந்த உயரம்தான் சன் மிங் மிங்கை, கூடைப்பந்து விளையாட்டை நோக்கி ஈர்த்தது. 2005-ல் அமெரிக்காவுக்கு வந்தார். முதன்மையான கூடைப்பந்து சங்கமான ‘நேஷனல் பாஸ்கட்பால் அசோஸியேஷன்’ (NBA), வருடந்தோறும் புதிய, திறமையான கூடைப் பந்து வீரர்களைத் தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தும். அதில் கலந்துகொண்ட சன் மிங் மிங்கை, சங்கத்தில் உள்ள முப்பது அணிகளில் ஒன்றுகூடத் தேர்ந்தெடுக்கவில்லை.
கூடவே இன்னோர் அதிர்ச்சியும் காத்திருந்தது. சன் மிங் மிங்கின் மூளையில் பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகில் ஒரு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அதை அகற்ற ஒரு லட்சம் டாலர் தேவை என்றார்கள். சன் மிங் மிங் திகைத்து நின்றபோது, அவரது ஏஜெண்ட் சார்லஸ், மருத்துவச் செலவுக்காக நிதி திரட்டி உதவினார். கட்டி அகற்றப்பட்டது.
சன் மிங் மிங்குக்குச் சிறிய அணிகளில் கூடைப் பந்து விளையாடும் வாய்ப்புகள் கிட்டின. அந்த உயரமான மனிதரின் உற்சாக ஆட்டத்தைப் பார்க்கவே ரசிகர்கள் கூடினார்கள். ஜாக்கி சான் தனது ‘ரஷ் ஹவர் 3’ படத்தில் ‘ஜெயண்ட்’ என்ற கதாபாத்திரத்தில் சன் மிங் மிங்கை ஒரு முக்கியமான சண்டைக் காட்சியில் நடிக்கவைத்தார். உலகமெங்கும் அவர் புகழ் பரவியது. மேலும் சில படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. இன்னொரு புறம் கூடைப் பந்தாட்டக் களத்தின் அதிசய ஹீரோவாகவும் சன் மிங் மிங்கின் அறியப்பட்டார்.
உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரர் என்ற கின்னஸ் சாதனை தற்போது சன் மிங் மிங் வசமே உள்ளது. இவருடைய மனைவி ஷு யானும் உயரமானவரே. இருவரது உயரமும் சேர்த்து 13 அடி 10.72 அங்குலம். இன்றைக்கு உலகில் வாழும் உயரமான தம்பதி இவர்களே என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.
சரி, இதுவரை வாழ்ந்ததிலேயே மிக உயரமான மனிதன் என்ற சாதனையை வைத்திருப்பவர் யார்?
ராபர்ட் வால்டோ. 1918-ல் அமெரிக்காவின் அல்டான் நகரத்தில் பிறந்தவர். 10 அடி 9 அங்குலம் வரை வளர்ந்தவர். 22 வயதில் ஒரு விபத்தில் இறந்து போனார். உலகத்திலேயே உயரமான மனிதருக்கு உலகத்திலேயே நீளமான சவப்பெட்டி செய்யப்பட்டது.
ராபர்ட்டுக்கு முன்பே அவரைவிட உயரமானவர்கள் இருந்திருக்கலாம், வாழ்ந்து மறைந்திருக்கலாம். ஆனால், ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டவர்களில் ராபர்ட்டே உயரமானவர். அதேபோல பெண்களில் உயரமானவர் என்ற பெருமையை அதிகாரபூர்வமாகத் தக்க வைத்திருப்பவர், சீனாவில் வாழ்ந்த ஸெங் ஜின்லியான். 8 அடி 1.75 அங்குலம் வரை வளர்ந்த ஸெங், பதினேழு வயதிலேயே இறந்துபோனார்.
சரி, இப்போது வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் உயரமான ஆணும் பெண்ணும் எங்கே இருக்கிறார்கள்?
உலகில் வாழும் உயரமான ஆண் துருக்கியில் இருக்கிறார். அவரது பெயர் சுல்தான் கோஸன். உயரம் 8 அடி 3 அங்குலம். கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரரான சுல்தான், தற்போது சர்க்கஸ் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ‘பல்பு மாட்ட, உயரத்தில் இருந்து எதையாவது எடுத்துக் கொடுக்க எங்கள் வீட்டில் ஏணியையே பயன்படுத்தியதில்லை. என்னைத்தான் பயன்படுத்துவார்கள். உயரத்தால் எப்போதும் எனக்குள்ள பிரச்சினை உடைகள் வாங்குவதும், காருக்குள் உட்கார முடியாமல் தவிப்பதும்தான்’ என்கிறார் சுல்தான்.
சன் ஃபாங். சீனாவில் வாழும் 7 அடி 3 அங்குலம் வளர்ந்த இந்த 30 வயதுப் பெண்ணே தற்போது உலகின் வாழும் உயரமான பெண். இப்படி உயரமாக இருப்பவர்கள் ஒவ்வொருவருமே மற்றவர்களால் அதிசயமாகப் பார்க்கப்படுவதும் கவனிக்கப்படுவதும் இயல்பானது. ஆனால், வாழ்க்கைக்கான தேவைகளுக்காக உயரமான மனிதர்கள் தங்களையே காட்சிப் பொருளாக வைத்துப் பணம் சம்பாதித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதும் தொடர்கிறது.
உயரம்தான் அவர்களுக்கு தனித்துவ அடையாளத்தை வழங்கியிருக்கிறது என்றாலும், அந்த உயரத்தால் அவர்கள் தனிப்பட்ட சங்கடங்களையும் வலிகளையும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் மறக்கக் கூடாது.
வாழும் இந்தியர்களில் உயரமான மனிதர் உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறார். தர்மேந்திர பிரதாப் சிங் என்ற 8 அடி 1 அங்குல உயரம் கொண்ட இந்த மனிதரும் பல்வேறு உடல் உபாதைகளால், மருத்துவச் செலவுக்கு வழியின்றி அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். சிலருக்கு உயரம்கூடத் துயரம்தான்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT