Last Updated : 22 Mar, 2017 09:28 AM

 

Published : 22 Mar 2017 09:28 AM
Last Updated : 22 Mar 2017 09:28 AM

வகுப்பறைக்கு வெளியே: பண்டைய இந்திய விஞ்ஞானிகள்

ஆரியபட்டா

பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த கணித, வானியல் அறிஞர் ஆரியபட்டா. பூமியின் விட்டத்தை 99.8 சதவீதம் துல்லியமாகக் கணக்கிட்டவர். பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டு கணித மதிப்புகளை இவர் பயன்படுத்தியுள்ளார். பை-க்கு (π) இன்று சொல்லப்படும் மதிப்புக்கு நெருக்கமான மதிப்பை அந்தக் காலத்திலேயே சொன்னவர்.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம், தன் சுற்றுப்பாதையில் பூமி சுற்றுதல், ஒளியை நிலவு பிரதிபலிக்கும் தன்மை உள்ளிட்டவை பற்றி விளக்கி எழுதியுள்ளார். 23 வயதிலேயே ‘ஆரியபட்டியா’ என்ற நூலையும், பின்னர் 'ஆரியச் சித்தாந்தா' என்ற நூலையும் எழுதியவர்.

பிரம்மகுப்தர்

ராஜஸ்தானில் உள்ள பின்மால் பகுதியைச் சேர்ந்த கணிதவியல், வானியல் அறிஞர் பிரம்மகுப்தர். கணித வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றிவரும் பூஜ்ஜியத்தை உலகுக்கு அளித்தது இந்தியா. அதை பூஜ்ஜியத்தைக் கணக்கிடுவதற்கான கணிதச் சூத்திரங்களை முதன்முதலில் வகுத்தவர் பிரம்மகுப்தர். கணிதம், வானியலில் இரண்டு முதன்மை நூல்களான ‘பிரம்மாஸ்புதசித்தாந்தா’, ‘கண்டகாத்யகா’ ஆகிய இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார்.

வராகமிஹிரர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியைச் சேர்ந்த வானியலாளர், கணிதவியலாளர் வராகமிஹிரர். ‘பிரஹத் சம்ஹிதை’ என்ற கலைக்களஞ்சியம் போன்ற விரிவான நூலை எழுதியதற்காகப் புகழ்பெற்றவர். சம இரவு-பகல் நாளில் இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளி 50.32 விநாடிகள் என்பதை முதலில் கணித்துக் கூறியவர். மால்வா பகுதியின் மன்னர் யசோதர்மனின் அமைச்சரவை நவரத்தினங்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் வராகமிஹிரர். இவருடைய தந்தை ஆதித்யதாசரும் ஒரு வானியலாளரே.

சுஸ்ருதர்

உலகில் முதன்முதலில் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் சுஸ்ருதர். கண்புரை நீக்க அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சை உட்படப் பல்வேறு அறுவை சிகிச்சை முறைகளைப் பற்றி அவர் விவரித்த ‘சுஸ்ருத சம்ஹிதை’ நூலின் மூல வடிவம் தற்போது கிடைக்கவில்லை. இந்த நூல் ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில் இந்த நூல் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சரகர்

ஆயுர்வேத மருத்துவத்தின் இரண்டு அடிப்படை நூல்களுள் ஒன்றான ‘சரஹ சம்ஹிதை’யை எழுதியவர் சரகர். 2000-க்கும் மேற்பட்ட மருந்து செய்முறைகளைக் கொண்டது இந்நூல். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் இவர், காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். சரகர் என்ற பெயருக்கு நாடோடி அறிஞர், நாடோடி மருத்துவர் என்று அர்த்தம். வாழ்க்கை முறை, மனித முயற்சிகள் மூலம் நோய்களுக்குச் சிகிச்சை அளித்து உடல்நலனைப் பாதுகாக்கலாம் என்ற கோட்பாட்டை முன்வைத்துச் செயல்பட்டவர். அத்துடன் நோய்க்குச் சிகிச்சை அளிப்பதைவிட, முன்கூட்டியே தடுப்பதுதான் சிறந்தது என்பதையும் வலியுறுத்தியவர் சரகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x