Last Updated : 08 Mar, 2017 11:30 AM

 

Published : 08 Mar 2017 11:30 AM
Last Updated : 08 Mar 2017 11:30 AM

வாங்க, நிலவுக்குப் போகலாம்: பூமி பக்கத்திலிருந்த நிலா!

நிலவை இவ்வளவு கிட்டே பார்க்கிறதே ரொம்ப அற்புதமாக இருக்கு, இல்லையா? நெருங்க நெருங்க நிலவிலே நிறையக் கடல்களும், ஏரிகளும் இருக்கிறமாதிரி தோணுதா? செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்திருக்கணும்னு சொல்றாங்க. வேறு எந்தக் கிரகத்திலும் தண்ணீர் கிடையாது. பூமிக்கும், நிலவுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கு. அவை எதனால் ஆகியுள்ளன என்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் என்கிறார்கள்.

சொல்லப்போனால் ஒரு காலத்தில் நிலவு நம்ம பூமியோட ஒட்டிதான் இருந்துச்சாம். சூரியக் குடும்பம் உருவான ஒன்பதரைக் கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிலவு பூமியிலிருந்து பிரிஞ்சு தனியா போயிடுச்சாம்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலே நிலவு ரொம்ப வெப்பத்தோட இருந்திருக்கு. அங்கே இருந்த கற்கள் எல்லாம் உருகிவிட்டன. பிறகு அவை குளிர்ந்தபோது இறுகிவிட்டன. அவற்றை ‘லாவா’என்று கூறுவார்கள்.

நிலவு முழுவதும் இந்த லாவா சிதறிக் கிடப்பதை உங்களாலே கொஞ்சம் தூரத்திலிருந்தே பார்க்க முடியுதா? நீங்கள் நினைச்ச மாதிரி நிலவு ஏதோ சலகைக் கல்லால் செய்த சமதளம் இல்லேன்னு புரிஞ்சுடுச்சி, இல்லையா? பூமியிலிருந்து பார்க்கும்போது இந்த லாவாக்கள்தான் சின்னச் சின்ன கறுப்புப் பகுதிகளாக நம்ம கண்ணுக்குத் தெரிந்தது.

நிலவின் வெப்பம் என்ன? இப்படிப் பொத்தாம்பொதுவா கேட்டால் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னாலும் இரண்டுவித வெப்ப நிலைகளைத்தான் சொல்ல முடியும். நிலவின் பளிச்சென்ற பாதிப் பக்கம் பகலில் 273 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைக்கூட அடையும். அதன் இருட்டு பாதி மைனஸ் 243 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்குக்கூடக் கீழே போகக் கூடும். கவலைப்படாதீங்க. இப்போ நாம் நிலவை அடையக் கூடிய அளவிலேதான் அதன் வெப்பம் இருக்கு.

இன்னும் சில மணி நேரங்களிலே நிலவை அடைஞ்சிடுவோம். சந்தோஷம் பொங்குதா? ஆனால், நிலவில் நீங்க இஷ்டப்படி விளையாட முடியாது. ஒரு காகிதத்தைக் கீழே வைத்தாலே அது தொடர்ந்து விண்கலத்துக்குள்ளே பறந்து கிட்டே இருக்கும். அதாவது, ஒரு ஈ மாதிரி விண்கலத்துக்குள்ளே சுத்தி சுத்தி வரும்.

எங்கே இறங்கலாம்? நிலவிலுள்ள அமைதிக் கடலில் இறங்கலாம். இதை ஆங்கிலத்தில் Sea of Tranquility என்று சொல்வாங்க. ‘ஐயையோ, கடலிலா இறங்கச் சொல்றீங்க’ என்று கோபப்படாதீங்க. நிலவிலே முதன் முதலா கால் வச்ச நீல் ஆம்ஸ்ட்ராங்கும், அடுத்ததா கால் வச்ச எட்வின் காலின்ஸும் இறங்கின பகுதியைத்தான் அமைதிக் கடல்னு சொல்றாங்க.

நிலவின் பல பகுதிகளுக்குப் பெயர்கள் கொடுத்திருக்காங்க. இந்தியா விலே டெல்லி, மும்பை, சென்னைன்று இருக்குதில்லையா? அதுபோல நிலவில் உள்ள இடங்களின் பெயர்கள் ஜூல்ஸ், வெர்னே, ஓபன்ஹேமர், மென்டலீவ்.

என்ன இது, இதெல்லாம் விஞ்ஞானிகள் பெயர்கள்மாதிரி இருக்கேன்னு குழப்பமா இருக்கா? குழப்பமே வேண்டாம். விஞ்ஞானிகள் பெயர்களைத்தான் வச்சிருக்காங்க. அரிதாக விண் திட்டத்தின் பெயரையும் (அப்போலோ மாதிரி) வச்சிருக்காங்க. நிலவில் முதலில் கால் பதித்தவர் பெயரில் காகரின் என்றும் ஒரு பகுதிக்குப் பெயர் உண்டு.

இதோ நிலவு இன்னும் நெருங்கிடுச்சு.

முதல் பார்வையிலே ஏதோ பஞ்சத்திலே அடிபட்ட பகுதிபோல நிலவு உங்களுக்குத் தோணுது இல்லையா? அதே சமயம் அந்தப் பகுதி முழுவதும் ஒருவித வெள்ளி கலரிலே காணப்படுது இல்லையா?

சொல்லப்போனால் நிலவு என்பது ஒரு இருட்டான பொருள்தான். சூரிய வெளிச்சத்தைத்தான் அது பிரதிபலிக்குது. இத்தனைக்கும் தன் மீது விழும் சூரிய வெளிச்சத்தில் வெறும் 7 சதவீதத்தைத்தான் அது பிரதிபலிக்குது. நம்ம பூமி தன் மீது விழும் சூரிய வெளிச்சத்தில் 33 சதவீதத்தைப் பிரதிபலிக்குது தெரியுமா?

பூமியிலிருந்து பார்க்குறப்போ நிலவின் வடிவமும் அளவும் மாறிக்கிட்டே இருக்கக் காரணம் இதுதான். சூரியனின் ஒளியை எந்த அளவுக்கு நிலவு பூமிப்பகுதியை நோக்கிப் பிரதிபலிக்குது என்பதைப் பொறுத்துதான் நாம் அதன் வடிவத்தைக் கணிக்கிறோம்.

நிலவிலே அங்கங்கே மிகப் பெரிய பள்ளங்கள் இருப்பதைக் கவனித்தீர்களா? பார்த்துப்போங்க. ஏனென்றால் இந்தப் பள்ளங்கள் வால் நட்சத்திரங்களும், விண்மீன்களும் மோதியதால் உண்டானவை.

நீங்க பயப்பட மாட்டீங்கன்னா இன்னொரு விஷயத்தையும் சொல்லிடறேன். சில பள்ளங்கள் 100 மைல் ஆழமாகக்கூட இருக்கும்!

(பயணம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x