Published : 21 Jun 2017 10:59 AM
Last Updated : 21 Jun 2017 10:59 AM
அம்மாவுக்கு விளையாட்டு, விளையாட்டு, விளையாட்டுதானாம். குழந்தைகள் எப்போதும் விளையாடுவாங்களாம். விளையாட்டா வேலை செய்வாங்களாம். விளையாட்டே வேலையாவும் இருக்குமாம். அம்மா இப்படிப் பேசினால் எனக்குப் புரியாது. மேடையில் பேசுவது போலவும் புஸ்தகத்தில் படிப்பது போலவும் இருக்கும். ஒரு நிகழ்வைச் சொல்லிப் புரியவைப்பாங்க.
“கடைக்குப் போய் மிளகு வாங்கிட்டு வரச்சொல்லுவாங்க பாட்டி. கடைக்கு எப்படிப் போவேன் தெரியுமா? வீட்டில் தொடங்கி கடை வரைக்கும் குதிச்சி குதிச்சிப் போவேன். தாண்டித் தாண்டிப் போவேன். கண்ணை மூடி கடை வரைக்கும் கண்ணைத் திறக்காமலே போய்ச் சேருவேன். சின்னதா பானை ஓடு கிடைச்சா நொண்டி அடிச்சிக்கிட்டு அதை எத்திக்கிட்டே போவேன். குயில் ஓசை கேட்டா அதுக்குப் பதில் பாட்டு பாடிக்கிட்டே போவேன். இதுதான்
வேலையை விளையாட்டா செய்யறது. விளையாட்டை வேலையா எப்படிச் செய்வோம் தெரியுமா? நாளைக்குக் காலையில் 10 மணிக்குக் சுங்குக்கல் (வாளி நிறைய கல் இருக்கும், நாலு நாலாக எடுக்கும் கல்லாங்கல் விளையாட்டு) விளையாடுவது என முடிவு செய்வோம். அதுக்கு ஆறு மணி நேரம் வேணும். அதுக்காகக் காலையிலேயே வீட்டு வேலையெல்லாம் முடிப்போம். இல்லாத வேலையெல்லாம் செய்வோம். நல்லவங்க மாதிரி நடிப்போம். கெஞ்சுவோம். விளையாடணுமே... அதுக்காக எல்லாம் செய்வோம்”னு அம்மா விளக்கமா சொன்னாங்க.
அப்போல்லாம் நாள் முழுக்கக் குழந்தைகளை விளையாட விடுவாங்களாம். நாலு பேர் விளையாடும் விளையாட்டு, ஐந்து பேர் விளையாடும் விளையாட்டுன்னு எத்தனை பேர் இருக்காங்களோ அதுக்கேத்த மாதிரி விளையாடுவாங்களாம். விதவிதமான விளையாட்டுகள் இருக்குமாம். வயசுக்கேத்த விளையாட்டு, சீசனுக்கேத்த விளையாட்டு, ஆட்களுக்கேற்ற விளையாட்டு, திடீர் விளையாட்டு, முறையான விளையாட்டு, உட்கார்ந்து விளையாடுறது… இதையெல்லாம் அம்மா எனக்குச் சொல்வாங்க.
அம்மா எனக்குச் சொல்லும்போது வசதிக்காகக் கைவிரலை நீட்டிப் பிரிச்சி பிரிச்சி சொல்வாங்க. நூறு விளையாட்டுக்கு மேல விளையாண்டிருக்காங்க. விளையாட்டுக்குள்ள இன்னொரு விளையாட்டு இருக்குமாம். கிச்சிகிச்சி தாம்பாளம் விளையாண்டு முடிச்சதும் தோக்குறவுங்க கையில மண்ணையும் காயையும் வச்சி கண்ணை மூடி கூட்டிக்கிட்டுப் போகணும். போற வழியெல்லாம் கேள்வி கேட்டுக் குழப்பணும். அதுபோல ஒவ்வொரு நாளும் விளையாட்டைத் தொடங்குறதுக்கும் முடிக்கிறதுக்கும் கியாமுயான்னு பேச்சு வார்த்தை நடக்கும்.
“ஒரு குடம் தண்ணி ஊத்தி வேணாம். நொண்டியடிக்க இன்னும் நிறையப் பேர் இருந்தாதான் சரிவரும். நீதான் தலைவி, இல்லைன்னா நான் வரலை. இப்ப ஐஸ்பாய் விளையாடுவோம். கோமதி, மீனா, பொன்னம்மா இவங்கள்லாம் வந்ததும் கலைச்சிட்டுக் கொக்கோ விளையாடுவோம்.” - இப்படித்தான் பேசிக்குவாங்களாம். எந்த விளையாட்டுன்னு முடிவு பண்ணினதும் உத்தி சாட்க்கிறது, காசு தூக்கிப் போட்டுப் பூவா தலையா போட்டுப் பார்க்குறது, சாட் பூட் திரீ போட்டு யார் புடிக்கிறதுன்னு முடிவு பண்றது, ஆட்டம் ஒழுங்கா விளையாடலன்னு நடக்குற பஞ்சாயத்து, இந்த விளையாட்டு வேணாம்னு அடுத்த விளையாட்டுக்குப் போறது, தோக்கப் போறோம்னு தெரிஞ்சா வீட்டுக்குப் போறேன்னு ஓடுறது, இதெல்லாத்தையும் கடந்து வீட்டுக்குப் போகும்போது மறந்துடாம அவுங்கவுங்க வீட்டுக்கு அவரக்கா சோத்துக்கு… பாட்டை மறந்துடாம பாடுறதுன்னு விளையாட்டுக் களம் களேபரமா நடக்குமாம்.
அம்மாவுக்கு எப்பயும் ஜெயிக்கணுமாம். அப்பதான் தோத்தவங்களைப் பார்த்து தொர்ரி தொப்ப…அப்டின்னு பாட முடியும். இல்லைன்னா கழுதை மாதிரி கத்து, டான்ஸ் ஆடுன்னு கேக்க முடியும். ஜெயிக்கிறதுக்காக அம்மா நிறைய வேலை செய்வாங்களாம்.
தனியா உக்காந்து கல்லாங்கல் பழகுவாங்களாம். கப்பல் செஞ்சிப் பாப்பாங்களாம். தனியா எங்கயாவது போகும்போது விளையாட்டுப் பாடலையெல்லாம் பாடிப் பார்ப்பாங்களாம்.
தனக்கு விளையாட வராத விளையாட்டுல நல்ல குழுவா பார்த்துப் போவாங்களாம். அதுக்காகக் குழுத் தலைவர்கிட்ட நல்லா நடந்துக்குவாங்களாம்.
விளையாட்ட ஏமாத்தி விளையாடுறதும் அம்மாவுக்குத் தெரியுமாம். கோட்டைத் தொடாமலே தொட்டேன்னு சொல்றது, விளையாட்டு ரூலயே மாத்தியமைக்கிறது இதையெல்லாம் கத்திக் கத்திப் பண்ணுவாங்களாம்.
கபடியெல்லாம் பாட ஆரம்பிச்சா கையத் தூக்கி நாந்தான் உங்கப்பண்டா, நல்லமுத்துப் பேரன்டா’ன்னு கத்திக்கிட்டே போயி அவுட்டாகிட்டு வருவாங்களாம். ரொம்ப நாளாச்சாம் நல்லா கபடி கத்துக்க.
அம்மா, அப்பா விளையாட்டுன்னா, கடை வைக்கிற வேலையை எடுத்துக்குறது. திருடன் - போலீஸ்னா ராஜாவாயிக்கிறதுன்னு சில அனுபவங்களைச் சொல்லும்போதே அம்மாவால சிரிப்பை அடக்கவே முடியாது. குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பாங்க.
கண்ணாமூச்சி விளையாடும்போது யாரும் கண்டுபுடிக்க முடியாத இடமா பார்த்து ஒளியணும்னு ஒரு தண்ணி தொட்டிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டாங்களாம். அதுலயே தூங்கிட்டாங்களாம். சாயங்காலம் நாலு மணிக்குத் தூங்குனவுங்க ராத்திரி எட்டு மணிக்குத்தான் முழிச்சாங்களாம். அதுக்குள்ள நடந்த விஷயங்களை அம்மாவால சொல்ல முடியாது. அத வேற எப்பயாவதுதான் சொல்லுவாங்க.
நெல் அறுத்தா ஊரே வைக்கோலைக் காயப்போட்டு, வைக்கோல் போர் செய்வாங்க. காயிற வைக்கோல் நல்ல விளையாட்டுக்கான இடம். அது உடம்பு அரிக்கும்னு பெரியவுங்க பார்த்தா துரத்தி விடுவாங்க. அப்ப வைக்கோலை மேல அள்ளிப் போட்டு மூடி வைக்கோலுக்குள்ளேயே ஒளிஞ்சிக்குவாங்களாம். அம்மா அப்படி ஒளிஞ்சிருந்தாங்களாம். வைக்கோல் மேல நடந்து போன ஒருத்தர் அம்மாவை மிதிச்சிட்டுப் போனாராம். கைவிரல் மேல அவ்வளவு பெரிய காலும் அத்தாந்தண்டி உருவமும்… அம்மா வலி தாங்க முடியாம அழுதாங்களாம். அதுக்கு அவர் அம்மாவ சின்ன குச்சி எடுத்துட்டு வந்து அடிக்கவேற அடிச்சாராம். அம்மா சொல்லும்போதே பாவமா இருக்கும். அது அம்மா தப்பா, அவர் தப்பான்னு குழப்பமாவே இருக்கு.
(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment