Published : 06 Jul 2016 12:00 PM
Last Updated : 06 Jul 2016 12:00 PM
உலகெங்கும் வாழும் பல கோடி இஸ்லாமியர்களின் ஒரே வாழ்நாள் ஆசை - ஹஜ் புனித யாத்திரை. ஆண்டுதோறும் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் திரளும் புனித ஸ்தலம், மெக்காவிலுள்ள ‘மஸ்ஜித்-அல்-ஹராம்'. இறைத் தூதர் முகம்மதுவின் கல்லறை அமைந்த, புனிதம் வாய்ந்த மெதினாவின் ‘மஸ்ஜித்-அன்-நவாபி'யும் இந்த நாட்டில்தான் உள்ளது.
மனித வாழ்வில் நல்லறங்களைப் போதித்து, மனித இனத்தை நல்வழிக்குக் கூட்டிச் செல்லும் இஸ்லாமிய மார்க்கம் பிறந்த இடம் - சவுதி அரேபியா! செங்கடல், அரேபிய வளைகுடாவால் சூழப்பட்ட, அரேபியத் தீபகற்பத்தின் பாலைவனத் தேசம் இது. அகாபா வளைகுடாவின் அந்தப் பக்கம் - எகிப்து; இந்தப் பக்கம் - சவுதி.
நில அளவில், அரேபியப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நாடு. ஆசியாவின் 5-வது பெரிய நாடு. ஆரம்பத்தில், ஹெஜாஸ், நஜத், அல்-அஹ்ஸா (கிழக்கு அரேபியா), அஸிர் (தெற்கு அரேபியா) என்று நான்கு பகுதிகளாகத் தனித்தனியே இருந்தன. இவற்றை ஒன்று சேர்த்துச் சவுதி அரேபியா உருவாகக் காரணமானவர் - இபின் சௌத். இவரின் தொடர் வெற்றிகள் மூலம் இந்த நாடு உருவானது.
1902-ல் ரியாத் நகரை இவர் கைப்பற்றினார். இதுதான் அவரது குடும்ப நகரம். இங்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, விடாமல் போரிட்டுப் பிற பகுதிகளையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார். எல்லாப் பகுதிகளும் இணைந்த பிறகு 1932-ல் சவுதி அரேபியா உருவனது. ரியாத் - தலைநகர் ஆனது.
ஆறு ஆண்டுகள் கழித்து, நாட்டுக்கு வளத்தை அள்ளித் தரும் அட்சயபாத்திரமாக, பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு உலகின் சக்திவாய்ந்த பொருளாதார வசதியான நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா உயர்ந்தது. 1950-ம் ஆண்டிலேயே சவுதிக்கு எனத் தேசியக் கீதம், அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், வரி வடித்தில் இல்லை. இசை வடிவத்தில் மட்டுமே இருந்தது. இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1947-ல், ‘அப்துல் ரஹ்மான் அல்-கதீப்' அமைத்த மூல இசைக் கோவையைக் கொண்டு இந்த இசை வடிவம் அமைக்கப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இசை மட்டுமேதான் இருந்தது.
1984-ல்தான், பாடல் இயற்றப்பட்டது. இயற்றியவர் - இப்ராஹிம் காஃபாஜி. இசை விற்பன்னர் செரஜ் ஓமர், மூல இசைக்கு வாத்திய இசை சேர்த்தார். இதுதான் இப்போதைய தேசிய கீதமாக ஒலிக்கிறது. இப்பாடலின் முதல் வரியான, ‘சார்...இ' என்றே இப்பாடல் பரவலாக அறியப்படுகிறது. பாடலை இசைக்க ஆகும் நேரம் - தோராயமாக 70 விநாடிகள். பாடலின் இடையே உள்ள முக்கியமான நான்கு வரிகள், நிறைவின்போது மீண்டும் பாடப்படுகின்றன.
சவுதி அரேபியாவின் தேசிய கீதம் ஏறத்தாழ இவ்வாறு ஒலிக்கும்:
“சார்.. இ..
லி இ மஜ்தி வி அல்யா
மஜ்ஜி தீலி க்காலிக்கி ஸ் ஸமா
வர்ஃபா இ இகஃபாக்கா அதர்
யஹ்மில் உன்னுராஇ முசட்டர்
ரட்திதி அல்லாஹு அக்பர்
யா.. மவ்தனி
மவ்தனி
க்கட் இஸ்ட ஃபக்ரஇ இ முஸ்லிமின்
ஆஷ் அல் மலிக்
லி இ ஆலம்
வா இ வத்தான்.
(மீண்டும்)
மஜ்ஜி தீலி க்காலிக்கி ஸ் ஸமா
வர்ஃபா இ இகஃபாக்கா அதர்
யஹ்மில் உன்னுராஇ முசட்டர்
ரட்திதி அல்லாஹு அக்பர்
யா.. மவ்தனி”.
இப்பாடலின், உத்தேசமான பொருள் இது:
“விரைவு
கொள் மகிமைக்கும் தலைமைக்கும்;
சொர்க்கங்களின் கர்த்தாவை மகிமைப்படுத்து.
பச்சைக் கொடியை உயர்த்திப் பிடி.
வழிகாட்டுதலைப் பிரதிபலிக்கும்
எழுதப்பட்ட ஒளியைச் சுமந்தவாறு
திரும்பச் சொல்: 'அல்லாஹு அக்பர்'!
ஓ.. என் தேசமே..
என் தேசமே..
முஸ்லிம்களின் பெருமையாக வாழு!
மன்னர் நீடு வாழ்க -
நம் கொடிக்காக
தாய்நாட்டுக்காக”.
(தேசியக் கீதம் ஒலிக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT