Published : 01 Mar 2017 11:54 AM
Last Updated : 01 Mar 2017 11:54 AM
விண்வெளியிலே எடை கிடையாது. அதனாலே உங்க உடம்பு உங்களுக்கு லேசாக இருக்கும். ஏதோ பறப்பது மாதிரி இருக்கும். விண்வெளி அறைக்குள்ளே நீங்க ஒரு இறகு மாதிரி பறக்கவும் வாய்ப்பு உண்டு. கவனமாக இல்லேன்னா, பக்கவாட்டிலே இடிச்சுப்பீங்க. பயமா இருந்தா சீட் பெல்ட்டை இறுகப் போட்டுக்குங்க.
உங்களுக்குக் கொஞ்சம் வயிற்றைக் கலக்குற மாதிரி இருக்கா? (விண்வெளிப் பயணத்திலே இதெல்லாம் சகஜமப்பா). கழிவறை வசதி விண்கலத்திலே உண்டு. ஆனால், ஒரு திரை மட்டும்தான் நடுவிலே இருக்கும். தனி ரூமெல்லாம் கிடையாது. உங்க கழிவுப் பொருளை ஒரு வாக்குவம் (Vacuum) கருவி உறிஞ்சி எடுத்து ரப்பர் பைகளிலே சேமிக்கும். பூமிக்கு வந்த பிறகு தூக்கிப்போட வேண்டியதுதான். கேட்கவே சங்கடமா இருக்குல்ல. ஆனா, விண்வெளிப் பயணத்திலே இப்படித்தான் சில விஷயங்கள் இருக்கும். வேற வழியில்லே.
சரி, வயிற்றுக் கலக்கல் சரியாயிடிச்சா? நீங்க பார்ப்பதையெல்லாம் குறிப்பு எடுத்துக்கணும்னு உங்களுக்குத் தோணுதா? நியாயம்தான். எவ்வளவு விஷயங்களைத்தான் ஞாபகம் வைச்சிக்க முடியும். ஆனா ஒண்ணு, பால் பாயிண்ட் பேனாவைத்தான் நீங்க பயன்படுத்த முடியும். ஃபவுண்டன் பேனா விண்வெளியிலே சரிப்படாது. ஒண்ணு எழுதாது. இல்ல, இங்க் கொட்டி விண்கலத்திலே அது மிதந்துகிட்டிருக்கும். பென்சில் பயன்படுத்தலாம். ஏதாவது உலோகத்திலே அது ஒட்டிக்கிட்டிருக்கிற மாதிரிப் பென்சிலோடு காந்தம் ஒன்றையும் இணைச்சிடுவாங்க.
தாகம் எடுக்குதா? வழக்கம் போலப் பழச்சாற்றை டம்ளரிலே சாய்க்காதீங்க. பழச்சாறு கிளாசுக்குள் போகாது. அப்படியே மிதக்கும். திரவப் பந்துகள் மாதிரி உங்க கண்ணெதிரே டான்ஸ் ஆடும்!
அப்ப எப்படித்தான் தாகத்தைப் போக்கிறதுன்னு தவிக்கிறீங்களா? பாட்டிலை அழுத்தினால் உள்ளே இருந்து திரவம் வெளிவரும்படியான ஸ்குவீஸ் (Squeeze) பாட்டிலைத்தானே கொண்டு வந்திருக்கீங்க. மூடியைத் திறந்து அந்தப் பாட்டில் முனையை வாயிலே வச்சுகிட்டுப் பாட்டிலை அழுத்துங்க. பழச்சாறு உள்ளே போயிடும்.
உங்க மனசிலே ஒரு சந்தேகம் அடிக்கடி எட்டிப் பார்த்துக்கிட்டிருக்குமே. விண்வெளியிலே பார்க்கும்போது நட்சத்திரங்கள் ஏன் மினுமினுப்பதில்லைன்றதை கண்ணெதிரே பார்த்தீங்க. ஆனா அது ஏன்? இதுதானே உங்க சந்தேகம்? காற்றுப் படலம் அசைஞ்சுக்கிட்டே இருக்கு. அதனாலே நட்சத்திரங்கள் மினுமினுக்கிற மாதிரிப் படுது. விண்வெளியிலேதான் காற்றே கிடையாதே. அதனாலத்தான் நட்சத்திரங்கள் மினுமினுப்பதாக நமக்குத் தெரியிறதில்லை.
உங்களுக்குக் குளிக்கப் பிடிக்குமா? பிடிக்கலேன்னாலும்கூட விண்கலத்திலே இந்த அனுபவத்தைத் தவற விடாதீங்க. அதுக்காக ஷவர் பாத் எடுத்துக்க முடியாது. வாளியிலே தண்ணீரை நிரப்பி சொம்பு மூலம் மொண்டு குடிக்க முடியாது. ஆஸ்பத்திரியிலே நோயாளிகளைக் குளிப்பாட்டுவாங்களே அந்த மாதிரிக் குளியல்தான் சாத்தியம். அதாவது ஸ்பாஞ்சிலே தண்ணீரை நனைத்து உங்க உடம்பைத் துடைச்சுக்கலாம். அல்லது நனைக்கப்பட்ட டவலின் மூலம் உங்க உடம்பு அழுக்குகளை நீக்கலாம்.
குளிச்சா உடை மாத்திக்கிட்டே ஆகணும்னு அடம் பிடிக்கக் கூடாது. அது கொஞ்சம் சிரமமான விஷயம். ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும். விண்கலத்திலே இருக்கும்போது நீங்க சாதாரண உடையை உடுத்திக்கலாம். அதற்கு வெளியே போகும்போது ‘விண்வெளி உடை’யைத்தான் உடுத்திக்கணும். கையிலே கொண்டுபோன பிஸ்கெட்டையோ, சான் விச்சையோ கொஞ்சம் சாப்பிடுங்க. அப்படியே ஜன்னல் வழியாகப் பாருங்க.
ஏதோ ஒண்ணு கிட்டே தெரியுதே. ரொம்ப பெரிய வட்டமாக இருக்குதே. பளிச்சுனு கண்ணைப் பறிக்குதே. வேறே ஒண்ணுமில்லே நாம நிலவை நெருங்கிட்டோம். பூமியிலேயிருந்து பார்க்கும்போது ஒரு தோசை மாதிரி நிலவு நமக்குத் தெரியலாம். ஆனால், நிலவும் பெரியதுதான். பூமியளவுக்கு இல்லைன்னாலும். அதன் விட்டம் 3,474 கி.மீ. ஒரு கிரகமாகக் கருதப்பட்ட புளூட்டோவைவிட நிலவு பெரியது. இதோ நிலவு நெருங்கிடுச்சு. தப்பு தப்பு. நாம நிலவை நெருங்கிட்டோம்.
(பயணம் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT