Published : 15 Feb 2017 11:12 AM
Last Updated : 15 Feb 2017 11:12 AM
விண்கலத்தின் உள்ளே நல்லா பாத்தீங்களா? அவசரத்திலும், பரவசத்திலும் இதுவரை அதை சரியா பார்த்திருக்கமாட்டீங்க. ஜன்னல் இருக்குதான்றதை மட்டும் உறுதிசெய்திருப்பீங்க இல்லையா?
இப்ப உள்ளே அமைதியாகப் பாருங்க. எங்கப் பார்த்தாலும் கம்ப்யூட்டர்களும், பிற கருவிகளும், வயர்களுமாக இருக்குது இல்லையா?
விண்கலம் முழுக்க ‘ஸ்டெர்லைஸ்’ செய்திருக்காங்க. ஸ்டெர்லைஸ்னா? அதாவது பாக்டீரியா போன்ற எந்தக் கிருமிகளும் விண்கலத்துக்குள்ளே இருக்காது. அதையும் தாண்டி அதுங்க வராம இருக்கறதுக்காக ஸ்டெரிலைஸ் செய்வாங்க.
‘உள்ளுக்குள்ளே இரண்டு செடிகளையாவது வச்சிருக்கலாமே. கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்குமே’- இப்படி யோசிக்கிறீங்களா? அப்படியெல்லாம் வச்சாலும் அவற்றை ‘சீல்’ செய்துதான் வைக்கணும். விண்கலத்தோட இறுகக் கட்டி வைக்கணும். இல்லன்னா மிதக்க ஆரம்பிச்சுடும்.
விண்கலத்தில் சரியாக மூச்சுவிட முடியுமான்ற கவலை உங்களுக்கு இருக்குதானே? விண்கலத்திலே இருக்கும்போது நீங்க ஆக்ஸிஜன் சிலிண்டரை பயன்படுத்த மாட்டீங்க. பூமியிலே நாம எப்படி சுவாசிக்கிறோம்? எந்த முயற்சியும் எடுத்துக்காம இயல்பாக அது பாட்டுக்கு சுவாசம் நடக்குது இல்லையா? அதே மாதிரி விண்கலத்திலும் சுவாசம் நடக்கும்.
ஏன்னா சுவாசம்கிறது தசைகளின் சுருக்கம் மற்றும் விரிதலால் ஏற்படுவது. புவியீர்ப்பு விசைக்கும், அதுக்கும் சம்பந்தம் இல்லே. ஆனால், ஒரு வித்தியாசம் உண்டு. பூமியிலே நீங்க காற்றை வெளியேத்தும்போது அது உங்களைச் சுற்றியிருக்கும் காற்றைவிட அதிக வெப்பம் கொண்டதாக இருக்கும். அதனாலே நீங்க வெளியேத்தும் காற்று மேலே போகும். (எப்பவுமே வெப்பக் காற்று மேலேதானே எழும்பும்). ஆனா, விண்கலத்திலே புவியீர்ப்பு விசை கிடையாதே. அதனாலே அந்த வெப்பமான காற்று உங்களைச் சுத்தி சுத்தி வந்துகிட்டிருக்கும். கவலைப்படாதீங்க. விண்கலத்துக்குள்ளே ஏ.சி. கருவிகள் உண்டு. அவை உள்ளேயிருக்கும் காற்றைச் சுழற்சி செய்யும்.
நாம இப்போ வளிமண்டலத்தைத் தாண்டிட்டோம்.
விண்வெளி வந்தாச்சு. நீங்க எதிர்பார்த்ததைவிட ரொம்ப இருட்டா இருக்கு இல்லையா? காத்து இல்லே. மேகங்களைக் காணோம். மழை இல்லை. கொஞ்சம் தூசு அங்கங்கே தெரியுது, அவ்வளவுதானே? தவிர உங்களாலே சில விண்கற்களையும் பார்க்க முடியுதா?
ஐயையோ, விண்கற்களா? நம்ம மேலே மோதிட்டா என்ன ஆகிறதுன்னு பயமா இருக்கா? கவலை வேண்டாம். விண்வெளின்றது மிகமிகப் பிரம்மாண்டமானது. நாமெல்லாம் அதிலே கொசுக்கள் மாதிரி. விண்கற்கள் நம்ம மேலே மோதிடும்னு நினைச்சு பயப்பட வேணாம். சந்தோஷமா பிக்னிக்கை தொடருங்க.
நட்சத்திரங்களைப் பார்த்தால் கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் மாதிரி மினுமினுக்குது இல்லையா?
நட்சத்திரங்களைப் பொறுத்தவரை இன்னொரு வித்தியாசத்தையும் நீங்க பார்ப்பீங்க. நட்சத்திரங்களைப் பாருங்கன்னு சொன்னா தலையைத் தூக்கி ஆகாயத்தைதானே பார்ப்பீங்க? ஆனா இங்கே விண்வெளியில் உங்களைச் சுற்றி நாலு பக்கங்களிலும் நட்சத்திரங்கள் இருக்கும். குனிஞ்சுகூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம். இப்படி ஒரு காட்சியை நீங்க நினைச்சுகூடப் பார்த்திருக்க மாட்டீங்க இல்லையா?
பூமியைவிட, விண்வெளியிலேர்ந்து பாரக்கும்போது நட்சத்திரங்கள் இன்னும் அழகா ஜொலிக்குது இல்லையா? ஆனா வேறொரு முக்கிய வித்தியாசத்தை கவனிச்சீங்களா? பூமியிலிருந்து பார்த்தா நட்சத்திரங்கள் மினுமினுக்கும். அதனாலேதானே ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’னு பாடினோம்! ஆனா, விண்வெளியிலேர்ந்து பார்க்குறப்போ நட்சத்திரங்கள் மினுமினுப்பதில்லை.
இப்ப உங்க மனசிலே ஒரு பயம் உண்டாகியிருக்குமே. விண்வெளியின் பிரம்மாண்டத்தை நினைச்சுதானே? கவலைப்படாதீங்க. பழகிடும்.
நாம விண்வெளியிலே போயிட்டிருக்கோம். நிலவை அடைவதுதான் நம் இலக்கு.
சூரியன் தகதகன்னு ஒளியைக் கொடுத்துக்கிட்டிருக்கு. அடர்ந்த கறுப்பான வானத்திலே ஒரு முத்துபோல நிலவு வெளிச்சமாகத் தெரியுது இல்லையா?
(பயணம் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT