Published : 29 Jun 2016 12:01 PM
Last Updated : 29 Jun 2016 12:01 PM
இந்தியாவுக்குத் தென்மேற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ளது மாலத்தீவு. இதை, ‘மாலை' தீவு; ‘மலை' தீவு என்று எப்படிச் சொன்னாலும் பொருந்தும். 26 பவழத் தீவுகளின் தொகுப்பு மாலையாக, பவளப் பாறைகளால் நிரம்பியுள்ளது இந்த நாடு. இந்த நாட்டின் மத்தியில் உள்ளது ‘மாலே' தலைநகரம். 1965-ம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. 1968-ம் ஆண்டில் குடியரசு நாடானது.
சிறப்பு
மாலத்தீவுக்கென சில தனிச்சிறப்புகள் உள்ளன. நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும், ஆசியாவிலேயே இதுதான் மிகச் சிறிய நாடு. அது மட்டுமல்ல, கடல் மட்டத்திலிருந்து வெறும் 1.5 மீட்டர் உயரத்தில் மட்டுமே உள்ள, உலகின் மிகத் தாழ்வான நாடு. நம் நாட்டில் எத்தனை உயரமான மலைகளைப் பார்க்கிறோம். மாலத்தீவிலோ மிக அதிகமான ‘இயற்கை'யின் உயரம் எவ்வளவு தெரியுமா? வெறும் 2.4 மீட்டர்கள்தான்!
பள்ளிக்கூடம்
மாலத்தீவில் முதன்முதலாக அரசுப் பள்ளிக்கூடமான மதீஜியா பள்ளி 1927-ல் தொடங்கப்பட்டது. இந்த நாட்டின் ஆறு குடியரசுத் தலைவர்களில் ஐந்து பேர் இந்தப் பள்ளியில் படித்தவர்கள்தான். இங்கு படித்து, பின்னாளில் சட்ட அமைச்சராகவும், நாட்டின் தலைமை நீதிபதியாகவும் உயர்ந்தவர் - ஷேக் முகமது ஜமீல் தீதி. மாலத்தீவின் மிக உயரிய விருதான ‘உஸ்தஜுல் ஜீல்' (தலைமுறைகளின் ஆசிரியர்) மறைவுக்குப் பின்னர் இவருக்கு வழங்கப்பட்டது. இன்றைக்கும் இவர், மாலத்தீவில் மிகவும் மதிக்கப்படுகிறார்.
கவிஞர்
மாலத் தீவின் நாட்டுப்புற இசைக்காகப் பாடுபட்டவர் ஜமீல் தீதி, தலைசிறந்த கவிஞரும்கூட. 1948-ல் இவர் இயற்றிய பாடல்தான் மாலத்தீவின் தேசிய கீதமாகத் திகழ்கிறது. அதற்கு முன்பு வரிகள் எதுவும் இல்லாமல், வெறுமனே மெல்லிசையாக மட்டுமே மாலத்தீவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ‘சலாமாதி' ராஜாங்க இசைக்குழுவால் அரசு விழாக்களின்போது மட்டும் கீதம் இசைக்கப்பட்டுவந்தது.
ராணியின் விஜயம்
1972-ல் பிரிட்டன் ராணி எலிசபெத், மாலத்தீவுக்கு வந்தார். அதற்குச் சில நாட்கள் முன்பு இலங்கையிலிருந்து இசை மேதை பண்டிதர் வன்னகுவட்டாவடுகே அமரதேவா மாலத்தீவுக்கு வரவழைக்கப்பட்டார். அவருடைய இசையமைப்பில், ஜமீல் தீதியின் வரிகள் புத்துயிர் பெற்றன. நீண்ட பாடலாக இருந்தாலும், முதல் ஆறு வரிகள் மட்டுமே இசைக்கப்படுகின்றன. மாலத்தீவின் தேசிய கீதம் சுமார் 100 விநாடிகள் வரை நீடிக்கும்.
இப்படி ‘ஒலிக்கும்':
க்கௌவ் மி இகுவேரிகன் மதீ திபேகென் குரீமெ ஸலாம்.
க்கௌவ் மீ பஹுன் கினா ஹெயு துஆ குரமுன் குரீமெ சலாம்.
க்கௌவ் மீ நிஷானா ஹுர் மதா எகு போலான்பாய் திபேகின்
ஔதா நகன் லிபிகின் ஏ வா திதா யா குரீமெ சலாம்.
நஸ்ரா நசீபா காமியாபுகே ரம்சக ஹிமெனே
ஃபெஸ்ஸா ரத்தா யுஹுதா எகீ ஃபெனுமுன் குரீமெ சலாம்.
(ஆறு வரிகள் நிறைவு)
ஃபக்ரா சரஃப் கௌவ்மா எ ஹோதாய் தெவ்வி பதலுன்னா
சிக்ரகே மதிவேரி இஹென்தகுன் அதுகை குரீமி சலாம்.
திவெஹீங்கே உம்மென் குரி அராய் சில்மா சலாமாதுகா
திவெஹீங்கே நன் மொல்ஹு வுன் அதாய் திபெகன் குரீமி சலாம்.
மினிவன்கமா மதனிய்யதா லிபிகன் மி ஆலாமுகா
தினிகன் ஹிதாமா தகுன் திபுன் எதிகன் குரீமி சலாம்.
தீனை வெரின்னா ஹெயோ ஹிதுன் ஹுருமே அதா குரமுன்
சீதா வஃபாதெரிகன் மதீ திபகன் குரீமி சலாம்.
தௌலதுகே அபுரா இசதா மதிவெரி வெகன் அபதா
ஔதானா வுன் அதி ஹெயோ துஆ குரமுன் குரீமி சலாம்.
தமிழாக்கம்
தேச ஒற்றுமையால் நினக்கு வணக்கம்.
நல்வாழ்த்துகளுடன் தாய்மொழியால் வணங்குகிறோம்.
தேசிய சின்னத்தை மதித்துத் தலை வணங்குகிறோம்
(அத்துணை) வலிமை வாய்ந்த கொடிக்கு
வணக்கம் செலுத்துகிறோம்.
வாகை அதிர்ஷ்டம் வெற்றியின் களத்தில்,
பச்சை சிவப்பு வெள்ளையுடன் அது இருக்கிறது.
அதனால் அதனை வணங்குகிறோம்.
தேசத்துக்குக் கவுரவமும் பெருமையும்
தேடித் தந்த வீரதீரர்களுக்கு
நினைவுகளின் சுபமான வார்த்தைகளில்
வணக்கம் செலுத்துகிறோம்.
மாலத்தீவர்களின் தேசம்,
காவல், பாதுகாப்பின் கீழ்
மாலத்தீவர்களின் பெயரால்
பெருமை கொள்ளட்டும்.
உலகில் அவர்களின் (மாலத்தீவர்களின்)
சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்துக்கு வாழ்த்துகிறோம்
துயரங்களிலிருந்து விடுதலைக்காகவும்
நின்னை வணங்குகிறோம்.
நமது மதம் மற்றும் நமது தலைவர்களுக்கு
முழு மரியாதை, உளமார்ந்த ஆசிகளுடன்
நேர்மையால் வாய்மையால் நாங்கள் வணங்குகிறோம்.
சுபமான கவுரவம் மற்றும் மரியாதையை
அரசு எப்போதும் பெற்று இருக்கட்டும்.
உன்னுடைய தொடர் வலிமைக்கு வாழ்த்துகளுடன்,
நின்னை நாங்கள் வணங்குகிறோம்.
(தேசிய கீதம் ஒலிக்கும்)
- ஜமீல் தீதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT