Published : 15 Feb 2017 11:12 AM
Last Updated : 15 Feb 2017 11:12 AM

காரணம் ஆயிரம்: கண்ணாமூச்சி கானல் நீர்!

வெயில் காலங்களில் கானல் நீரை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். கானல் நீர் என்பது, நம் கண்கள் செய்யும் பிழையா, கற்பனை செய்யும் பிழையா என்றால் இரண்டுமில்லை. கானல் நீருக்குக் காரணம் இயற்பியல் நடத்தும் இயற்கை விளையாட்டுதான். இந்தக் கானல் நீர் எப்படித் தோன்றுகிறது?

பொதுவாகப் பாலைவனங்களில் மட்டும்தான் கானல் நீர் தோன்றுவதாக நாம் நினைக்கிறோம். அப்படியல்ல; சூரியனின் வெப்பம் தகிக்கும் எல்லா இடங்களிலும் இந்தக் கானல் நீர் தோன்றும். வெப்பம் மிகுந்த தார்ச்சாலைகளில்கூடத் தண்ணீர் பரவி ஓடுவது போன்ற காட்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். தார்ச்சாலையில் ஏதோ தண்ணீர் லாரி தண்ணீரைக் கொட்டிச் சென்றிருக்கலாம் என்றுகூட நாம் நினைத்திருப்போம். அருகில் சென்று பார்க்கும்போதுதான் தெரியும், அத்தனையும் மாயம் என்று.

நல்ல மதிய வெயில் நேரத்தில் தார்ச்சாலையில் நடந்து செல்லும்போதும், வாகனங்களில் செல்லும்போதும்கூடத் தண்ணீர் ஓடுகிற (பொய்) தோற்றத்தைப் பார்க்க முடியும். சரி, இயற்கை நம்மை எப்படி இப்படி ஏமாற்றுகிறது?

தரையை ஒட்டிய பகுதியில் அழுத்தம் குறைவான காற்று அடுக்கும், இந்த அழுத்தம் குறைவான காற்று அடுக்கிற்கு மேலே அதிக அழுத்தமுள்ள காற்று அடுக்கும் உருவாகும்போது மணல் தரையானது கண்ணாடி மாதிரியான தன்மையைப் பெற்று விடுகிறது.

அதாவது அழுத்தம் குறைவான காற்றடுக்கின் மீது அதிக அழுத்தம் உள்ள காற்று அடுக்கு வரும்போது, இந்தக் கானல் நீர், தெரிகிறது. நாம் தரையைப் பார்க்கிற கோணமும், கானல் நீர் தோற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படியும் சொல்லலாம், பொருட்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் தரையில் பட்டு வளை கோணத்திலேயே எதிரொளிக்கின்றன. நாம் பார்க்கிற கோணம் செங்குத்தாகவோ, நேர்க்கோட்டுக் கோணமாகவோ இருந்தால், கானல் நீர் தோன்றுகிறது.

தார்ச்சாலைகளில் கானல் நீர் காணப்படுவதற்கும், வெப்பமும், கோணமும்தான் காரணம். தார்ச்சாலைகள் கறுப்பாக இருப்பதால் அதிகமாகச் சூடாகின்றன. கறுப்பான பொருட்கள் அதிக வெப்பத்தை ஈர்க்கும் என்பது தெரிந்த விஷயம்தான்.

தார்ச்சாலைகளில் மேற்பரப்பில் அதிக வெப்பம் உருவாகிக் காற்றின் எடை குறைகிறது. இந்தக் குறைவான காற்று அடுக்கின் மேல் சற்றுக் கூடுதலான அழுத்தம் கொண்ட காற்று அடுக்கு உருவாகிறது. எனவே கானல் நீர் தோன்றுவதற்கான காற்றடுக்கு சூழல் தார்ச்சாலைகளில் அடிக்கடி உருவாகிவிடுகிறது.

மிக முக்கியமான விளக்கம் ஒன்று இங்கு தேவைப்படுகிறது.

கானல் நீர் தோன்றுவதற்குத் தரையை ஒட்டிய அடியடுக்கில் அழுத்தம் குறைந்த, எடை குறைந்த காற்று இருக்கிறது. இந்த அடுக்கிற்கு மேல்தான் எடை அதிகமான அழுத்தம் அதிகமான காற்று அடுக்கு இருக்கிறது. இது ஆச்சரியமான விஷயம். எடை அதிகமான காற்று எப்படி எடை குறைந்த காற்றுக்கு மேலே இருக்க முடியும்? நல்ல கேள்வி! முக்கியமான கேள்வி!

காற்று இயங்கிக்கொண்டே இருக்கிறது. அடர்த்தி அதிகமாக இருக்கும் காற்று சூடாக்கப்பட்டு மேலே செல்வது என்பது தொடர்ச்சியாக, சுழற்சியாக நடந்துகொண்டே இருக்கிறது. எனவே பாலைவன மணல் மேற்பரப்பில், தார்ச்சாலைகளின் மேற்பரப்பில், கீழ் அடுக்கில் அடர்த்தி குறைவான காற்று குறைந்த அளவில் இருந்துகொண்டே இருக்கும்.

மாணவர்களே இப்போது புரிகிறதா? அதிகமான வெப்பம், காற்று அடுக்கில் ஏற்படுத்தும் அழுத்த மாறுபாடு, நாம் தரையைப் பார்க்கிற கோணம் ஆகியவைதான் கானல் நீருக்குக் காரணம்.

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x