Last Updated : 02 Apr, 2014 02:56 PM

 

Published : 02 Apr 2014 02:56 PM
Last Updated : 02 Apr 2014 02:56 PM

நீலாவும் மின்னியும்: செத்துப்போன செடிக்கு உயிர் வருமா?

நீலாவுக்கு ரொம்பப் பிடித்த விஷயம் ஊர் சுற்றுவது. எப்படியாவது அப்பா, அம்மா அல்லது தாத்தாவைக் கெஞ்சிக் கொஞ்சியாவது வெளியே போய்விடுவாள். மின்னி மாதிரி தனக்கும் சிறகுகள் இல்லையே என்று நீலாவுக்கு வருத்தம்.

‘சின்னஞ்சிறு பறவை போல திரிந்து பறந்து வர’ அவள் எப்பவும் ரெடி.
எங்கேயாவது ஊர் சுற்றப் போகலாமே என்று அவளும் மின்னியும் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அம்மா பெரிய கூடைப்பை ஒன்றை எடுத்துக்கொண்டு கிளம்பிக்கொண்டிருந்தாள். வாரத்தில் ஒரு நாள் அம்மா பல்லாவரம் சந்தைக்குப் போவதை வழக்கமாக வைத்திருந்தாள்.

அடம்பிடித்து நீலா அம்மாவுடன் இன்றைக்குச் சந்தைக்குக் கிளம்பினாள். வெயிலான வெயிலில் வரிசையாக விரித்து வைத்திருக்கும் கடைகளைப் பார்த்துக்கொண்டே நடப்பது செம ஜாலி.

முதலில் வீட்டில் பயன்படுத்தும் சோபா, நாற்காலிகள், மேஜை எல்லாம் விற்கும் கடை இருந்தது. அங்கே கிடந்த பெஞ்சுகள், சுற்றும் நாற்காலிகளை எல்லாம் நீலா பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு நாற்காலி மட்டும் வேகமாகச் சுத்திக்கொண்டிருந்தது. கிட்டப் போய்ப் பார்த்தால் அதில் மின்னிச் சத்தமாக ஊ... என்று சொல்லிக்கொண்டே சுத்திக்கொண்டிருந்தாள்.

“ஹேய் மின்னி” என்று நீலா கூவினாள். “எனக்குச் சுத்தற சேர் பிடிச்சிருக்கு” என மூச்சு வாங்கிக்கொண்டே சொன்னாள் மின்னி. “நம்ம உலகம் கூடத்தான் சுத்திக்கிட்டே இருக்கு. ஆனா இந்தச் சேர்ல சுத்துனா ஆகற மாதிரி ஏன் நமக்குக் கிர்ன்னு ஆகறதேயில்ல இல்ல?” எனக் கேட்டாள் நீலா.

“இந்தச் சேர் ரொம்ப சின்னது நீலா, உலகம் எவ்ளோ பெரிசு. அதுக்குள்ளதான் இத்தனாம் பெரிய கடல் இருக்கு, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா எல்லாம் இருக்கு. அதனாலதான் நமக்கு அது சுத்தறதே தெரிய மாட்டேங்குது” என்றாள் மின்னி.

அம்மா இவளைக் காய்கறி கடைக்கு அழைத்துச் சென்றாள். சிவப்பு, பச்சை, ஆரஞ்சு, மஞ்சள்னு கலர் கலரா அடுக்கி வெச்சிருக்கிற காய்கறிங்களைப் பார்த்தாலே அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. பல்லாவரம் சந்தையில் காய்கறிகள் மலை போலக் குவிக்கப்பட்டிருக்கும். பக்கத்தில் ஒரே அளவில் சின்னக் குவியல்களாகப் பிரித்து வைத்திருப்பார்கள்.

“நீலா, இந்தப் பெரிய காய்கறி மலையோட குழந்தைங்களா இந்தச் சின்ன குவியலுங்க?” என்றாள் மின்னி.

“அய்யோ மின்னி இது ஒரு கூறு. நம்ம தெருவில இருக்கிற கடையில நாம கிலோ கணக்கில வாங்கறோம் இல்ல, இங்கெல்லாம் ஒரு கூறு, இரண்டு கூறு அப்படித்தான் விப்பாங்க.”

“உனக்கெப்படித் தெரியும்? நீ இங்க வந்து காய்கறி வித்தியா?” என்றாள் மின்னி.

“இல்ல, எனக்கு முத்தம்மா பாட்டிதான் சொன்னாங்க.”

அம்மா காய்கறி வாங்கிக்கொண்டிருக்க, நீலாவும் மின்னியும் பக்கத்திலிருந்த பழைய இரும்புச் சாமான் கடையில் இருந்த பழைய சைக்கிள் லைட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கே பல வகையான இரும்புப் பொருட்கள் இருந்தன. நிறைய சைக்கிள் ஸ்போக்ஸ் கம்பிகள் இருந்தன. மின்னியும் நீலாவும் அவற்றை மண்ணில் குத்திவைத்துக் கூரை வீடு செய்தார்கள்.

“இந்த மாதிரி வீடு இருந்தா ஃபேன் இல்லாமலே காத்து வந்திடும் இல்ல?” என்றாள் நீலா.

“ஆமாமா, கொசுவும் ஜாலியா வந்து நம்மள கொஞ்சும்” என்றாள் மின்னி.

அந்தப் பழைய இரும்புக்கடைக்காரர் இவர்கள் இருவருக்கும் இரும்பு வளையங்கள் சிலவற்றைக் கொடுத்தார்.

“அய்யோ மின்னி அம்மா எங்க?” என நீலா கத்த, இருவரும் சுற்றும் முற்றும் தேடினார்கள்.

அம்மா எதிர்ப் பக்கத்தில் ஒரு தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தாள். மின்னி மிகுந்த உற்சாகமாய்த் தாத்தா வைத்திருந்த செடிகளுக்கு அருகே ஓடினாள். கத்தரிக்காய்ச் செடி, தக்காளிச் செடி, கீரை விதை, இன்னும் நிறையச் செடி வெச்சிருந்தாரு.

“தாத்தா எதுக்குச் செடிய எல்லாம் பிச்சீங்க?” எனக் கேட்டாள் நீலா. “பிக்கலைமா, நான் வளர்த்த செடிங்கதான் இன்னும் நிறைய நிறைய எடத்துல எல்லாம் வளரணும்னு ஆசைபட்டுச்சிங்களா? அதான் கொண்டுவந்தேன் அனுப்பி வெக்கலாமுன்னு...”

“செடிகூட நம்மள மாதிரி ஊர் சுத்திங்கதான் போலருக்கு” என்றாள் மின்னி.

“தாத்தா, செடி எப்படி ஊர் சுத்த முடியும்? செடிய மண்ணுலேருந்து பிச்சி எடுத்தா அது செத்துப் போகாதா?” எனக் கேட்டாள் நீலா.

தாத்தா ஒரு பழைய புடவையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த கொத்துச் செடிகளை எடுத்துத் துணியைப் பிரித்துக் காண்பித்தார். செடிகளின் வேர்கள் மண்ணில்தான் இருந்தன.

“காலையில தான்மா வேரடி மண்ணோட ஈரத்துணில சுத்தி கொண்டுவந்தேன். இப்போ நீ வாங்கிக்கிட்டியானா உடனே போய் நட்டுடணும். அங்க இருக்கற புது மண்ணோட இந்த மண்ணையும் கலந்து வெச்சிட்டா வேர் பிடிச்சிக்கும்” என்றார் தாத்தா.

அம்மா நீலாவுக்கு ஒரு சாமந்திப் பூச்செடியும் வீட்டிற்கு இரண்டு தக்காளிச் செடிகளையும் வாங்கினாள். நீலாவுக்கு ஊர் சுற்றும் ஆசையுள்ள தன்னைப் போன்ற செடி ஒருத்தி புது ஃப்ரெண்டாகக் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி. அவள் மின்னியைப் பார்த்துச் சிரித்தாள்.

வீட்டிற்குப் போய் இரும்பு வளையங்களையும், அம்மா வாங்கிகொடுத்த கலர் பேப்பர் காத்தாடிகளையும் பொக்கிஷப் பெட்டிக்குள் வைத்துவிட்டுத் தோட்டத்திற்கு ஓடினாள். தாத்தா மூன்று சிறியக் குழிகளை வெட்டியிருந்தார். தன்னுடைய சாமந்தித் தோழியைக் குழியில் நட்டு வைத்தாள் நீலா. சிறு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றினாள். ஈர மண்ணில் அழகான பாத்தி போலத் தன் சாமந்தித் தோழியின் வீட்டை வட்டமாகச் செய்தாள். அப்புறம் இரவு வெகு நேரம்வரை வந்து வந்து, சாமந்தி வேர்விட்டுவிட்டாளா எனத் தெரிந்துகொள்ள, கொல்லைப் பக்கத்திலேயே சுத்திக்கொண்டிருந்தாள்.

“அவசரம் அவசரம் நீலாவுக்கு அவசரம்

சூரியன் வந்தாதானே செடிக்குட்டி முளைச்சிடும்”

என்று பாடிக்கொண்டே வந்து நீலாவின் தோளில் அமர்ந்தாள் மின்னி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x