Published : 20 Jan 2016 11:34 AM
Last Updated : 20 Jan 2016 11:34 AM
வாண்டு: ஹாய் பாண்டு, என்னப்பா வீட்டை விட்டு வெளியேகூட வரமாட்டேங்குற?
பாண்டு: ஒன்னும் தெரியாத மாதிரியே கேளு. அரையாண்டு பரீட்சை நடக்குதுல்ல. அதான் படிச்சுக்கிட்டு இருக்கேன்.
வாண்டு: ரொம்ப விழுந்துவிழுந்து படிக்குற போல?
பாண்டு: ஏன் சொல்லமாட்ட? பாடங்களை மனப்பாடம் செய்யுறதுக்குள்ள போதும்போதும்னு ஆகுது?
வாண்டு: ஏய் பாண்டு, நான் ஏற்கெனவே உன்கிட்ட பாடங்களை மனப்பாடம் செய்யாதேன்னு சொன்னேனே, அத மறந்துட்டியா?
பாண்டு: ஆமா சொன்ன. ஆனா, இப்போ மனப்பாடம் செய்யுறதைவிட வேறு வழியில்லையே.
வாண்டு: பாண்டு, முதல்ல ஒன்னை தெரிஞ்சுக்க. எல்லாத்தையும் மனப்பாடம் செய்யாதே. மனப்பாடம் செய்யுறதை மட்டுமே மனப்பாடம் செஞ்ச போதும். போயம்ஸ், செய்யுள் பாடல்களை மட்டும் மனப்பாடம் செஞ்சா போதும். மற்ற எல்லாத்தையும் புரிஞ்சு படி. ஒரு தடவை புரிஞ்சு படிச்சா எப்பவும் மறக்காது. பரீட்சையிலையும் நிறைய மார்க் வாங்கலாம்.
பாண்டு: நீயும் இதை அடிக்கடி சொல்லிக்கிட்டுதான் இருக்க. இனிமேலாவது இதை நான் செய்ய பழகுறேன்.
வாண்டு: அப்புறம் இன்னொன்னு. காலையில7 மணிக்கு வரை தூங்கிட்டு அப்புறமா எழுந்து படிக்குறது வேஸ்டுன்னு எங்கப்பா சொன்னாரு. அதிகாலையில எழுற பறவைக்குத்தான் நிறைய புழு கிடைக்கும்ங்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழியாம். நாமுளும் பறவை மாதிரி காலையில சீக்கிரமா எழுந்து படிச்சா, பறவைக்கு நிறைய புழுக்கள் கிடைக்கிற மாதிரி நிறைய மார்க் வாங்கலாம்னு எங்கப்பா சொன்னாரு. எங்கப்பா சொன்ன மாதிரி நான் செய்யுறேன். நீயும் இதை மனசுல வைச்சுக்க.
பாண்டு: பரீட்சை நேரத்துலகூட நீ டென்சனே இல்லாம ஜாலியா இருக்க அதன் காரணமா?
வாண்டு: ஆமா, காணும் பொங்கல் அன்னைக்குக்கூட நான் புத்தகத்தைத் தொடலையே. ஜாலியா எங்க அம்மா, அப்பாவோட ஊரைச் சுத்தப் போய்ட்டேன்.
பாண்டு: ம்… நடக்கட்டும், நடக்கட்டும். அப்புறம், நீ இந்தப் பரீட்சையைப் பத்தி பேசுறப்பதான் எனக்கு ஒன்னு ஞாபகம் வருது வாண்டு.
வாண்டு: என்ன ஞாபகத்துக்கு வந்துச்சு?
பாண்டு: ஆந்திராவுல காக்கிநாடா ஊர்ல படிச்சுபடிச்சு ஒரு பொன்னு புதுசா சாதனையைச் செஞ்சுருக்காபா.
வாண்டு: அப்படியா? அப்படி என்ன சாதனை பாண்டு?
பாண்டு: அந்தப் பொண்ணோட பேரு மகந்தி சந்திரா பிரதியுஷா. 10-ம் வகுப்பு படிக்கிறாப்பா. 2005-ம் வருஷத்துலருந்து 2015-ம் வருஷம் வரைக்கும் படிப்புக்காக 115 பரிசுகள் வாங்கியிருக்காளாம்.
வாண்டு: இவ்வளவு பரிசா? எப்படி இவ்வளவு பரிசு அந்தப் பொண்ணு வாங்குனா?
பாண்டு: எல்லா பரீட்சையிலையும் இந்தப் பொண்ணு முதல் மார்க் வாங்கியும், படிப்பு சம்பந்தமா எந்தப் போட்டி வைச்சாலும் அதுல ஜெயிச்சிதான் இவ்வளவு பரிசு வாங்கியிருக்கா. இந்தியாவுல பள்ளிக்கூடத்துல படிக்குற ஒரு பொண்ணு படிப்புக்காக இவ்வளவு பரிசு வாங்கியிருக்கிறது இப்போதான் முதல் முறையாம். அதனால இதை சாதனையா அறிவிச்சுருக்காங்க.
வாண்டு: உண்மையிலேயே இது பெரிய சாதனைதான் பாண்டு. சரி, அதைவிடு, எனக்கு ஒரு டவுட்டு.
பாண்டு: என்ன டவுட்டு?
வாண்டு: குடியரசுத் தினம்னா என்னான்னு எதிர்த்த வீட்டு ராமு கேட்டான். சுதந்திர தினம்னா நமக்கு விடுதல கிடைச்ச நாளு. குடியரசு தினம் எதுக்குன்னு குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டான். எனக்கு இதுக்கு பதில் தெரியலை. உனக்கு ஏதாவது பதில் தெரியுமா வாண்டு?
பாண்டு: தெரியுமே. எங்க வீட்டு பக்கத்துல மிலிட்டரியில வேலை பார்த்த தாத்தா இருக்காருல்ல, அவருதான் சொன்னாரு.
வாண்டு: ஓ… அந்தத் தாத்தா என்ன சொன்னாருன்னு எனக்கும் கொஞ்சம் சொல்லேன்.
பாண்டு: சரி சொல்றேன் வாண்டு. நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ, சுதந்திரக்காக போராடுன பல தலைவர்கள் வெள்ளைக்காரங்க ’டொமினியன்' அந்தஸ்து கொடுத்தா போதும்னு நினைச்சாங்களாம்.
வாண்டு: டொமினியன் அந்தஸ்தா, அப்படின்னா?
பாண்டு: அரசுரிமைன்னு சொல்லலாம். இன்னும் தெளிவா சொல்லணும்னா வெள்ளைக்காரங்களோட அதிகாரத்துக்கு உட்பட்ட சுயமான ஆட்சி. ஆனா, சுயாட்சியா இருந்தா நாட்டோட பாதுகாப்பு போன்ற பல விஷயங்களை அவுங்கதான் நிர்வகிக்க முடியுமாம். இது நேரு, பட்டேல் போன்ற தலைவர்களுக்குப் பிடிக்கலையாம். முழுமையான சுயராஜ்யம்தான் வேணும்னு சொன்னாங்களாம். இதை மற்ற தலைவர்களும் ஏத்துக்கிட்டாங்களாம். ஆனா, 1947-ல்ல வெள்ளைக்காரங்க நமக்கு சுதந்திரம் கொடுத்தப்ப டொமினியன் அந்தஸ்துதான் கொடுத்தாங்களாம். அதனால, வெள்ளைக்காரங்க நியமிச்ச கவர்னர் ஜெனரல்தான் நம்ம நாட்டோட தலைவராவும் இருந்தாராம்.
வாண்டு: ஓ... இதுல இவ்வளவு விஷயம் இருக்கா பாண்டு.
பாண்டு: இன்னும் முடியலையே. முழுசா கேளுபா. சுதந்திரத்துக்குப் பின்னால, யாரும் இஷ்டப்படி ஆட்சி செய்யக்கூடாதுன்னு அரசியலமைப்பை உருவாக்க நம்ம தலைவருங்க முடிவு செஞ்சாங்களாம். அப்படி உருவான அரசியலமைப்பு, 1949-ம் வருஷம் நவம்பர் 26 அன்னைக்கு நம்ம நாட்டு அரசியல் நிர்ணய சபை ஏத்துக்கிச்சு.
அது முறைப்படியா 1950-ம் ஆண்டு ஜனவரி 26 அன்னைக்கு நடைமுறைக்கு வந்துச்சு. இதனால வெள்ளைக்காரங்களால நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் பதவி போய்டுச்சு. டொமினியன் அந்தஸ்தும் போயிடுச்சு. நம்ம நாடு குடியரசு நாடா மலர்ந்துச்சு. புதுசா, குடியரசுத் தலைவர் பதவியும் வந்துச்சு.
வாண்டு: அதனாலதான், குடியரசுத் தினம் அன்னைக்கு குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏத்துறாரோ?
பாண்டு: ஆமாம் வாண்டு. இப்போ உனக்குப் புரிஞ்சுடுச்சா?
வாண்டு: எனக்கு நல்லா புரிஞ்சுடுச்சு. இதை அப்படியே ராமுகிட்ட சொல்லிடுறேன். சரி, அப்போ பரீட்சைக்கு நீ போய் படி. நானும் போறேன்.
பாண்டு: சரி வாண்டு, டாட்டா, பைபை...
மகந்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT