Published : 10 Aug 2016 11:10 AM
Last Updated : 10 Aug 2016 11:10 AM
வாண்டு: இந்த வாரம் ஜாலிதான்.
பாண்டு: ஜாலியா? என்ன ஜாலி?
வாண்டு: இந்த வாரம் நமக்கு மூணு நாள் லீவு கிடைக்குமில்லை. அதைத்தான் ஜாலின்னு சொன்னேன்.
பாண்டு: ஓ... திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் வருதுல்ல. சனி, ஞாயிறு, திங்கள்னு மூணு நாளுக்கு லீவு கிடைக்கிறதைச் சொல்றீயா?
வாண்டு: ஆமா பாண்டு. திங்கள்கிழமை ஸ்கூல்ல கொடி ஏத்துவாங்கள்ல. அன்னைக்கு என்னை எங்க டீச்சர் உறுதிமொழி வாசிக்கச் சொல்லியிருக்காங்க.
பாண்டு: ‘இந்தியா என் தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்’னு ஆரம்பிக்குற உறுதிமொழியைப் பத்திதானே சொல்ற.
வாண்டு: ஆமா பாண்டு. அதான். ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஒவ்வொருத்தர் வாசிப்போமே. இந்த முறை சுதந்திர தினத்தன்னைக்கு அதை வாசிக்குற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு.
பாண்டு: அந்த வாய்ப்பு உனக்குக் கிடைக்கணும்னு இருக்கு. அதான் கிடைச்சிருக்கு. அன்னைக்கு உறுதிமொழியை வாசிச்சிட்டு உடனே வந்திடாதே. அதைப் பத்திய ஒரு தகவலையும் சொல்லிட்டு வா.
வாண்டு: என்ன தகவல் சொல்லிட்டு வரணும். அதை நீ சொல்லலையே.
பாண்டு: சொல்றேன்பா. தேசிய கீதத்தை எழுதியது யார்னு கேட்டா, ரவீந்திரநாத் தாகூர்னு சொல்லிடுவோமில்லையா? ஒவ்வொரு வாரமும் ஸ்கூல் அசெம்பிளியில வாசிக்குற உறுதிமொழியை எழுதியது யார்னு உனக்குத் தெரியுமா?
வாண்டு: தெரியலையே. யாருப்பா? உனக்குத் தெரியுமா?
பாண்டு: அவரு யாருன்னு எங்க தாத்தா சொன்னாரு. அதை உனக்கு நான் சொல்றேன். அதை நீ சொல்லிடு.
வாண்டு: சுதந்திர தினத்தன்னைக்கு அதைச் சொல்றது ரொம்ப சரியா இருக்கும். நீ அந்தத் தகவலைச் சொல்லுப்பா.
பாண்டு: இன்னைக்கு இந்தியா முழுதும் எல்லா ஸ்கூலையும் வாசிக்குற உறுதிமொழியை எழுதியது பைதிமாரி வெங்கட சுப்பா ராவ். இந்த உறுதிமொழியைச் சுதந்திரத்துக்குப் பிறகு 1962-லதான் அவரு எழுதினாரு. தெலுங்கு மொழியில எழுதின அந்த உறுதிமொழியை 1963-ம் வருஷத்துல விசாகப்பட்டினத்துல இருக்குற ஒரு ஸ்கூல்லதான் முதன்முதலா வாசிச்சாங்க. அப்புறம் படிப்படியா ஆந்திரம் பூராவும் எல்லா ஸ்கூல்லையும் வாசிக்க ஆரம்பிச்சாங்க. இது இந்தியா முழுமைக்கான ஓர் உறுதிமொழியா இருந்ததால, மத்த மாநிலங்களுக்கும் கொண்டுபோனாங்க. அந்தந்த மொழிகள்ல மாற்றி பள்ளிக்கூடங்கள்ல படிக்கத் தொடங்கினாங்க. பள்ளிக்கூடப் புத்தகங்களையும் அதை அச்சடிச்சுக் கொடுத்தாங்க. இப்போ 50 வருஷங்களாகியும் எல்லாப் பள்ளிக்கூடங்கள்லையும் இந்த உறுதிமொழியைப் படிக்குறது கட்டாயமாயிடுச்சு.
வாண்டு: அடடா! இது நல்ல தகவலா இருக்கே. இதைச் சுதந்திரத்தன்னைக்குக் கண்டிப்பா சொல்லிடுறேன் பாண்டு.
பாண்டு: ம்... கண்டிப்பா சொல்லு. அப்புறம் லிம்போ ஸ்கேட்டிங்லல ஒரு குட்டிப் பையன் சாதனை படைச்ச விஷயத்தை நீ கேள்விப்பட்டியா?
வாண்டு: ஆமா, அந்தச் சாதனையைப் பத்தி எனக்குத் தெரியுமே. அதை நான் சொல்றேன். அந்தக் குட்டிப் பையன் பேரு ஸ்வரூப் கவுடா. அவனுக்கு ஆறு வயசு ஆகுது. பெங்களூர்ல இருக்கான். இவன் ஷாப்பிங் மாலில் நிப்பாட்டி வைச்சுருந்த 36 கார்களுக்கு அடியில புகுந்து ஸ்கேட்டிங் செஞ்சி சாதனை படைச்சிருக்கான். மொத்தம் 65.28 மீட்டர் தூரம் இப்படி ஸ்கேட்டிங் செஞ்சிருக்கான்.
பாண்டு: காருக்குள்ள புகுந்து எப்படி ஸ்கேட்டிங் செஞ்சானோ, வியப்பா இருக்கே. இதுக்கு முன்னாடி இந்தச் சாதனையை யாரு செஞ்சா?
வாண்டு: இதுக்கு முன்னாடி 2012-ல கோலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரேயான்ற குட்டிப் பொண்ணு 48.21 மீட்டர் லிம்போ ஸ்கேட்டிங் செஞ்சி சாதனை படைச்சா. அந்தச் சாதனையை இப்போ இந்தக் குட்டிப் பையன் முறியடிச்சுட்டான். உலக அளவுல இதுவரைக்கும் இந்த அளவுக்கு எந்தக் குட்டிப் பசங்களும் சாதனை செஞ்சதில்லையாம். அதனால, ஸ்வரூப்போட பேரு கின்னஸ் சாதனை புத்தகத்துலையும் இடம் பிடிச்சுடுச்சு.
பாண்டு: ஓ... கின்னஸில் இடம் பிடிச்சுட்டானா? சமத்தான பையன்தான். ம்... சரிப்பா, நான் இப்போ கிளம்பட்டுமா?
வாண்டு: சரிப்பா, டாட்டா...
பைதிமாரி வெங்கட சுப்பா ராவ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT