Last Updated : 05 Oct, 2016 11:22 AM

 

Published : 05 Oct 2016 11:22 AM
Last Updated : 05 Oct 2016 11:22 AM

தினுசு தினுசா விளையாட்டு: கொல கொலயா முந்திரிக்கா..!

போன வாரம் சொன்ன ‘கிச்சு கிச்சு தாம்பூலம்…’ விளையாட்டை விளையாடிப் பார்த்தீர்களா? இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டின் பெயரென்ன தெரியுமா? “கொல கொலயா முந்திரிக்கா..!”

எத்தனை பேர்?

இந்த விளையாட்டை எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடலாம். ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லாக் குழந்தைகளும் ஜாலியாக விளையாடலாம்.

விளையாடுவது எப்படி?

இந்த விளையாட்டிலே இடையிடையே பாடல் வரும். இந்தப் பாடல் ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு விதமாகப் பாடுவார்கள். உங்கள் ஊரில் வேறுவிதமாகப் பாடியிருந்தால், அதன்படி பாடி விளையாடுங்கள், சரியா?

# முதலில் ஒருவரைக் குழுத் தலைவராக முடிவு செய்துகொள்ள வேண்டும்.

# மீதமுள்ள எல்லாரும் வட்டமாக உட்கார்ந்துக்கொள்ள வேண்டும்.

# குழுத் தலைவர் கையிலே துண்டு துணி ஒன்றை எடுத்துக்கொண்டு, இந்த வட்டத்தைச் சுத்தி கொஞ்சம் வேகமா நடந்துக்கிட்டே முதலடியைப் பாட வேண்டும்.

“கொல கொலயா முந்திரிக்கா..!” என்று பாட, வட்டத்திலே உள்ள மற்ற குழந்தைகள், “கொலஞ்சுப் போச்சு கத்திரிக்கா..!” என்று பாடுவார்கள்.

திரும்பக் குழுத் தலைவர், “கொல கொலயா முந்திரிக்கா..!”ன்னு பாட, எல்லாரும் சேர்ந்து, “நரிய நரிய சுத்திவா..!” என்று பாட வேண்டும்.

உடனே, திரும்பவும், “வீட்டு மேலே ஏறுவேன்..!” என்று குழுத் தலைவர் சொல்ல, “ஈட்டியால குத்துவேன்..!” என்று மற்றக் குழந்தைகள் பாட வேண்டும். அடுத்து, “பச்சரிய தின்பேன்..!” என்று சொல்ல, “பல்லை உடைப்பேன்..!” என்று பாட வேண்டும்.

இப்படிச் சொன்னவுடனே குழுத் தலைவர் மீண்டும், “கொல கொலயா முந்திரிக்கா..!” என்று முதல் அடியைப் பாடுவார். உடனே, “நரிய நரிய சுத்தி வா..!” என்று மற்றக் குழந்தைகள் பாட வேண்டும்.

அடுத்து, “கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்..?” என்று குழுத் தலைவர் கேட்க, எல்லாரும், “கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி..!”ன்னு ஒரே குரலில் சொல்வார்கள்.

பாட்டுப் பாடிக்கொண்டே குழுத் தலைவர் வட்டத்தைச் சுற்றி ஓடிக்கொண்டே, கையில வைத்திருந்த துண்டுத் துணியைக் கீழே உட்கார்ந்திருக்கும் யார் பின்னாடியாவது தெரியாமல் போட்டுவிட்டு, திரும்பவும் சுற்றி வருவார்.

குழுத் தலைவர் கையிலே துணி இல்லாததைப் பார்த்துவிட்டு, யார் பின்னால் துணி இருக்கிறதோ, அவர் அந்தத் துணியை எடுத்துக்கொண்டு குழுத் தலைவரைத் துரத்திக்கொண்டு போக வேண்டும். துணியால் முதுகில் அடிக்க வேண்டும். அப்படி அடித்தால் அவர் ‘அவுட்’. குழுத் தலைவர் வேகமாக ஓடிவந்து, யார் பின்னால் துண்டைப் போட்டாரோ, அவரோட இடத்திலே வந்து உட்கார்ந்துவிட்டால், துண்டைக் கையில் வைத்திருப்பவர் ‘அவுட்.’

ஒருவேளை, துண்டு பின்னால் இருப்பதை உட்கார்ந்திருப்பவர் கவனிக்கவில்லையென்றால், பக்கத்திலே உட்கார்ந்திருப்பவர் சைகையாலேயே சொல்வார்கள். அப்படியும் சொல்வதைக் கவனிக்காமல் இருந்தால், குழுத் தலைவர் வட்டத்தை ஒரு சுற்று சுற்றி வந்து, பின்னால போட்ட துண்டை எடுப்பார். கவனிக்காமல் உட்கார்ந்திருப்பவர் முதுகில் ஒரு போடு போடுவார். உட்கார்ந்திருப்பவர் இப்போது எழுந்து, குழுத் தலைவரை விரட்டிப் பிடிக்க வேண்டும். இதுல ‘அவுட்’ ஆனவர் யாரோ, அவர் பாட்டுப் பாடிக்கொண்டே விளையாட்டைத் திரும்பவும் விளையாட வேண்டும்.

விளையாட்டைத் தொடங்கலாமா? எங்கே சொல்லுங்க… “கொல கொலயா முந்திரிக்கா..!”

(இன்னும் விளையாடலாம்)

வாசகர்களே, அந்தக் காலச் சிறுவர், சிறுமிகள் விளையாட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறு ஏதாவது பெயரில், இன்னும் சில மாறுதல்களுடன் சேர்ந்து விளையாடப்பட்டிருக்கலாம். அதிலுள்ள சிறப்பான அம்சங்களை எங்களுக்குக் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். நீங்கள் எழுதும் அம்சங்கள் ‘மாயா பஜாரி’ல் இடம்பெறும். பள்ளி ஆசிரியர்களும்கூட எழுதி அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x