Published : 27 Jul 2016 11:34 AM
Last Updated : 27 Jul 2016 11:34 AM
நவீன ஒலிம்பிக் போட்டிகள் தோன்றக் காரணமாக இருந்த ஊர், பிரிட்டனில் உள்ள ஒரு சிறிய கிராமமான மக் வென்லாக். 1866-ல் இந்தக் கிராமத்தில் வாழ்ந்த டாக்டர் வில்லியம் பென்னி புரூக்ஸ் என்பவரை சந்தித்தார் ஃபிரான்ஸைச் சேர்ந்த பியர் தெ குபர்தென். சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக புரூக்ஸின் கருத்தால் உத்வேகம் பெற்ற குபர்தென், 1894-ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார்.
சகாப்தம் ஓட்டப்பந்தய ராணி
“வேகமாக விரையும் ரயில்கள், பின்வாங்கும் அலைகளோடு போட்டியிட்டு என்னுடைய வேகத்தையும் மனவலிமையையும் அதிகரித்துக்கொண்டேன்” என்று சொன்ன ஓட்டப்பந்தய வீராங்கனை யார் தெரியுமா? ‘பய்யோளி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்பட்ட பி.டி. உஷா.
பி.டி. உஷா நான்காம் வகுப்பு படிக்கும்போது, அவருடைய உடற்கல்வி ஆசிரியை ஓட்டப்பந்தயம் வைத்தார். அதில் அந்தப் பள்ளியின் சாம்பியன் பேபி சரளாவுடன் (7-ம் வகுப்பு) போட்டியிட்ட உஷா, மிக எளிதாக வெற்றி பெற்றார். அவருடைய சிறு வயது திறமைக்கு இதுவே சான்று.
1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருடைய வயது 16 தான். 1984 லாஸ்ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடையோட்டப் பந்தயத்தில் விநாடியில் 100-ல் ஒரு பங்கு தாமதமாக வந்ததால், வெண்கலப் பதக்கத்தை உஷா இழந்தார். ஆனால், அதேநேரம் அந்த 400 மீட்டரை 55.42 விநாடிகளில் அவர் கடந்தது, இப்போதும் காமன்வெல்த் நாடுகள் அளவில் சாதனையாகவே உள்ளது.
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். இதைத் தொடர்ந்து அந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருது, 1985-ல் பத்ம விருதுகளைப் பெற்றார்.
1986 சியோல் ஆசியப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று, அந்தப் போட்டிகளின் சிறந்த வீராங்கனை விருதையும் பெற்றார். ‘ஆசியாவின் ஓட்டப்பந்தய ராணி’ என்று புகழப்பட்டார். தடகளப் போட்டிகளில் 30 சர்வதேசப் பதக்கங்களைப் பி.டி. உஷா வென்றுள்ளார்.
‘கடந்த நூற்றாண்டின் சிறந்த இந்திய வீராங்கனை’ என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட பெருமைக்குரியவரும்கூட.
# 20-ம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னர் 1896-ல் பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில், நவீன ஒலிம்பிக் போட்டி முதன்முதலில் நடத்தப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஒவ்வொரு நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. 1916 (முதல் உலகப் போர்), 1940, 1944 (இரண்டாம் உலகப் போர்) காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.
# இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில், அதாவது 1900-ல்தான் ஒலிம்பிக்கில் முதன்முதலாகப் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
# பண்டைய ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே, நவீன ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆரம்பத்தில் தங்கப் பதக்கம் தரப்படவில்லை. முதலிடம் பிடித்தவர்களுக்குப் பாரம்பரிய முறைப்படி ஆலிவ் இலை கிரீடத்துடன் வெள்ளிப் பதக்கம் பரிசாகத் தரப்பட்டது. 1904 போட்டிகளிலிருந்தே முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் தரும் வழக்கம் ஆரம்பித்தது.
# பண்டைய கிரீஸில் சில வீரர்கள் சிறப்பு இறைச்சி அல்லது மந்திர மருந்துகளைக் குடித்துவிட்டுச் சக போட்டியாளர்களை வெற்றிகொள்ள முயற்சித்தனர். இப்படிச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் தண்டனையாக அவர்களுடைய முகம் சிற்பமாக வடிக்கப்படுவது, அவமானமாகக் கருதப்பட்டது.
பண்டைக் காலத்தைப் போலவே, இன்றைக்கும் ஊக்கமருந்துகளை உட்கொண்டு போட்டிகளில் வெல்லச் சிலர் முயற்சிக்கிறார்கள். இதைக் கண்டுபிடிப்பதற்குப் போட்டிகளின்போது பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்படும்போது பதக்கம் பறிக்கப்படுகிறது, விளையாடத் தடையும் விதிக்கப்படுகிறது.
2016 ஒலிம்பிக்கில்… எத்தனை எத்தனை?
ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக 1 கோடித் தட்டு உணவுகள், ஒரு லட்சம் இருக்கைகள், 72,000 மேஜைகள், 60,000 துணி ஹேங்கர்கள், 34,000 மெத்தைகள், 25,000 டென்னிஸ் பந்துகள், 8,400 ஷட்டில்காக், 315 குதிரைகள் போன்றவற்றை ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு பயன்படுத்த உள்ளது.
விநோதச் சாதனை ஒலிம்பிக் பதக்கமும்
நோபல் பரிசும் உலகின் உயரிய விளையாட்டுப் போட்டிகளான ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களில் ஒருவர் மட்டுமே, உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசையும் பெற்றுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த பிலிப் நோயல் பேக்கர் 1920 ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக்கில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், போர் தடுப்பு மற்றும் நாடுகளிடையே அமைதியையும் இணக்கத்தையும் உருவாக்கியதற்காக 1959-ல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
# பண்டைய ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே, நவீன ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆரம்பத்தில் தங்கப் பதக்கம் தரப்படவில்லை. முதலிடம் பிடித்தவர்களுக்குப் பாரம்பரிய முறைப்படி ஆலிவ் இலை கிரீடத்துடன் வெள்ளிப் பதக்கம் பரிசாகத் தரப்பட்டது. 1904 போட்டிகளிலிருந்தே முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் தரும் வழக்கம் ஆரம்பித்தது.
# ஒலிம்பிக் விளையாட்டுகளிலேயே ஆண்கள் - பெண்கள் இரு பாலினத்தவரும் சேர்ந்து போட்டியிடும் ஒரே விளையாட்டு குதிரையேற்றம் மட்டுமே.
# பண்டைய கிரீஸில் சில வீரர்கள் சிறப்பு இறைச்சி அல்லது மந்திர மருந்துகளைக் குடித்துவிட்டுச் சக போட்டியாளர்களை வெற்றிகொள்ள முயற்சித்தனர். இப்படிச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் தண்டனையாக அவர்களுடைய முகம் சிற்பமாக வடிக்கப்படுவது, அவமானமாகக் கருதப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT