Last Updated : 01 Mar, 2017 11:55 AM

 

Published : 01 Mar 2017 11:55 AM
Last Updated : 01 Mar 2017 11:55 AM

தினுசு தினுசா விளையாட்டு: பருப்பு கடை, மோர் கடை!

எனக்கு விளையாட்டு பிடிக்காது’ என்று சொல்லும் குழந்தைகள் யாராவது உண்டா? எல்லாக் குழந்தைகளுக்குமே விளையாட பிடிக்கும். கொஞ்சம் பெரிய குழந்தைகள் விளையாடும்போது, அதை வேடிக்கைப் பார்க்கும் சிறு குழந்தைகள் தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளச் சொல்லி அடம் பிடிப்பார்கள். சிறு குழந்தைகளால் ஓடியாடும் விளையாட்டுகளில் பங்கேற்க முடியாது. அதற்காகவே, அத்தகைய குழந்தைகளும் விளையாடக்கூடிய விளையாட்டுகள் இருக்கின்றன.

இந்த விளையாட்டை விளையாடாத குழந்தைகளே நிச்சயம் இருக்க முடியாது. தமிழகம் முழுவதும் நன்கு அறிமுகமான விளையாட்டு இது. இந்த விளையாட்டின் பெயர், ‘பருப்பு கடை, மோர் கடை!’

எல்லா ஊர்களிலும் விளையாடப்படும் இந்த விளையாட்டை, அந்தந்தப் பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில், வேறு மாதிரி விளையாடுவார்கள்.

இந்த விளையாட்டை 2 முதல் 5 வயது வரையுள்ள எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம். ஆனால், விளையாட்டை அனைவரோடும் ஒருங்கிணைத்து விளையாட, குழுத் தலைவராக ஒரு பெரிய குழந்தை இருக்க வேண்டும்.

சரி, விளையாட்டை எப்படி விளையாடுவது?

# முதலில் குழந்தைகள் அனைவரையும் வட்டமாக உட்காரச் சொல்லுங்கள். விளையாட்டை ஒருங்கிணைக்கும் குழுத் தலைவர், எல்லாக் குழந்தைகளையும் பார்த்து, “வாங்க… வாங்க…” என்று சொல்வார். அதற்கு எல்லாக் குழந்தைகளும் “வணக்கம்… வணக்கம்…” என்று பதில் சொல்லுங்கள்.

# பிறகு, குழுத் தலைவர் குழந்தைகளிடம், “சாப்பிட்டாச்சா?” என்று கேட்பார். இதற்கு எல்லாக் குழந்தைகளும், “ம்… சாப்பிட்டாச்சு” என்று தலையாட்டுங்கள்.

# ஒவ்வொரு குழந்தையிடமும் சென்று, “உங்க வீட்டிலே என்ன சோறு?” என்று குழுத் தலைவர் கேட்க, ஒவ்வொரு குழந்தையும் அவரவர் வீட்டில் சாப்பிட்டதைச் சொல்லுங்கள். ஏதாவது ஒரு குழந்தை, “நான் இன்னும் சாப்பிடலே” என்று சொல்லுங்கள்.

# எந்தக் குழந்தை சாப்பிடவில்லை என்று சொன்னதோ, அந்தக் குழந்தையின் எதிரே குழுத் தலைவர் உட்கார வேண்டும்.

“பருப்புச் சோறு வேணுமா? மோர் சோறு வேணுமா?” எனக் குழுத் தலைவர் அந்தக் குழந்தையிடம் கேட்பார். அதற்கு “எனக்கு பருப்புச் சோறு வேணும்!” என்று குழந்தை சொல்லும்.

# உடனே, அந்தக் குழந்தையின் வலது கையை நீட்டச் சொல்லி, குழுத் தலைவர் தனது வலது கை முட்டியைக் குழந்தையின் உள்ளங்கையில் வைத்தபடி, “பருப்பு கடை, பருப்பு கடை” என்று நான்கைந்து முறை ஆட்ட வேண்டும்.

# பிறகு, குழந்தையின் உள்ளங்கையிலிருந்து பருப்பை எடுத்து, “குழந்தைக்கு ஒரு வாய், அம்மாவுக்கு ஒரு வாய், அப்பாவுக்கு ஒரு வாய், தம்பிக்கு ஒரு வாய், குட்டி நாய்க்கு ஒரு வாய்” எனக் குழந்தை யார் பெயரையெல்லாம் சொல்கிறதோ, அத்தனை பேருக்கும் ஒரு வாய் எனக் குழுத் தலைவி ஊட்டிவிட வேண்டும்.

# அப்புறம், குழந்தையின் கையைப் பிடித்து, “கழுவிக் கழுவி கீழே ஊத்து” என்று இரண்டு முறை சொல்லிவிட்டு, குழந்தையின் உள்ளங்கையில் குழுத் தலைவி, தனது ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் வைத்து, “நண்டு ஊருது, நரி ஊருது…”என்று சொல்லிக்கொண்டே குழந்தையின் தோள்பட்டை வரை வந்து, பிறகு சட்டெனக் கை அக்குளில் (இடுக்கில்) விரலை வைத்து, “கிச்சு… கிச்சு…” என்று சொல்ல, குழந்தை கூச்சத்தால், சிரிக்கத் தொடங்கும்.

அதைப் பார்த்து மற்ற குழந்தைகளும் சிரிப்பார்கள். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் செய்ய, எல்லாக் குழந்தைகளும் மொத்தமாகச் சிரிப்பதை காணக் கண் கோடி வேண்டுமே.

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x