Last Updated : 03 Aug, 2016 12:23 PM

 

Published : 03 Aug 2016 12:23 PM
Last Updated : 03 Aug 2016 12:23 PM

வாண்டு பாண்டு: குட்டிப் பலசாலியின் ஒலிம்பிக் கனவு!

வாண்டு: என்னப்பா, இன்னைக்கு ரொம்ப குஷியா இருக்குற மாதிரித் தெரியுதே. ஜாலிக்கு என்ன காரணம்?

பாண்டு: ஜாலியெல்லாம் ஒண்ணுமில்லை. இந்த வாரத்துல ஸ்பெஷல் நாள் வருதுல்ல. அதை நினைச்சேன்; மனசு குஷியாகிடுச்சு.

வாண்டு: ஸ்பெஷல் நாளா? அப்படி ஒரு நாளை நான் கேள்விப்பட்டதில்லையே.

பாண்டு: ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதேப்பா. உலக நண்பர்கள் தினம் வருதுல. நம்மள மாதிரி ஃப்ரெண்ட்ஸ்களுக்கு அது ஸ்பெஷல் தினம்தானே. அதைத்தான் சொன்னேன்.

வாண்டு: நண்பர்கள் தினம் எல்லாம் காலேஜ் படிக்குறவங்கதான் கொண்டாடுறாங்க. நாம எங்கே கொண்டாடுறோம்.

பாண்டு: என் தம்பி ஸ்கூல்லயே நண்பர்கள் தினம் கொண்டாடுறாங்க. இந்த வருஷம் எங்க வகுப்புலையும் கொண்டாடுறோம். உங்க வகுப்புல கொண்டாடலையா?

வாண்டு: எங்க வகுப்புல அப்படி எதுவும் சொல்லலை. அது சரி, நண்பர்கள் தினம் கொண்டாட என்ன காரணம்னு உனக்குத் தெரியுமா?

பாண்டு: எனக்குத் தெரிஞ்சத உனக்குச் சொல்றேன். இப்போல்லாம் அடிக்கடி ஏதாவது ஒரு தினம் கொண்டாடுறோம் இல்லையா? அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு. ஆனா, இந்த நண்பர்கள் தினத்துக்குன்னு ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லப்பா.

வாண்டு: அப்போ, காரணமே இல்லாமத்தான் எல்லோரும் கொண்டாடுறாங்களா?

பாண்டு: சொல்றப்ப குறுக்கப் பேசாதப்பா. முழுசா சொல்ல விடு. இந்தத் தினத்தைத் தென் அமெரிக்காவுல கொண்டாட ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 90 வருஷத்துக்கு மேல ஆகுது. 1920-ல் தேசிய வாழ்த்து அட்டை சங்கம்தான் இந்தத் தினத்தை அறிவிச்சு முதன்முதலா கொண்டாடுனாங்க.

வாண்டு: அவுங்க ஏன் அறிவிக்கணும்?

பாண்டு: வாழ்த்து அட்டைகளைப் பிரபலப்படுத்ததான் அறிவிச்சாங்க. அதுக்கப்புறமா அமெரிக்காவைச் சேர்ந்த ஹால்மார்க் வாழ்த்து அட்டை நிறுவனத்தின் உரிமையாளர் ஜாய்ஸ் ஹால் இந்தக் கொண்டாட்டத்தை விடுமுறை தினத்தன்று கொண்டாட விரும்புனாரு. 1930 ஆகஸ்ட் 2 அன்னைக்கு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில இந்தத் தினத்தை அவரு கொண்டாடினாரு. இப்படித்தான் இந்தத் தினம் தொடங்குச்சு. அப்போதிருந்து ஒவ்வொரு ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையில இந்தத் தினத்தைக் கொண்டாடிட்டு வராங்க. இந்தத் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை 1998-ம் ஆண்டுல அங்கீகாரம் செஞ்சது.

வாண்டு: எந்த ஒரு பின்னணியுமே இல்லாம இந்தத் தினம் இன்னைக்கு உலகம் பூராவும் பிரபலமாயிடுச்சுல பாண்டு.

பாண்டு: ஆமா வாண்டு. ஆனா, நண்பர்கள் தினத்தைப் பத்தி எங்க டீச்சர் ஒரு விஷயம் சொன்னாங்க.

வாண்டு: அப்படியா, என்ன சொன்னாங்க?

பாண்டு: அம்மா, அப்பா, சகோதரர், சகோதரி போன்ற உறவுகள் போல அவரவர் விருப்பத்துல வர்றதில்ல நண்பர்கள் . நட்புன்றது அவரவர் முடிவு செய்யும் ஒண்ணு. அதனால நல்ல நண்பர்களைத் தேர்வு செய்யுற பொறுப்பும் கடமையும் எல்லோருக்கு இருக்கு. அந்த வகையில இந்தத் தினத்தைக் கொண்டாடலாம்னு சொன்னாங்க.

வாண்டு: கரெக்ட்டாதான் சொல்லியிருக்காங்க. அந்த விஷயத்துக்காக இந்தத் தினத்தை நாமளும் கொண்டாடுவோம் பாண்டு.

பாண்டு: ம்… அப்புறம், ஒலிம்பிக் போட்டி ரெண்டு நாள்ல தொடங்கப் போகுது. அடுத்த ஒலிம்பிக்குக்காக அமெரிக்காவுல ஒரு சின்னப் பொன்னு இப்பவே தயாராயிட்டு வர்றா? அதைப்பத்தி நீ கேள்விப்பட்டியா?

வாண்டு: இல்லையே. யாரு அந்தச் சின்னப் பொன்னு?

பாண்டு: அவளோட பேரு எல்லி ஹடாமியா. கலிபோர்னியாவுல இருக்கா. இப்போ 11 வயசுதான் ஆகுது. அதுக்குள்ள அமெரிக்காவுல எடை தூக்குற பல போட்டிகளில் கலந்துகிட்டு சாம்பியனாயிட்டா. நாமெல்லாம் சின்னக் கல்லைத் தூக்கவே ரொம்ப சிரமப்படுவோம். ஆனா, இந்தச் சின்னப் பொன்னு 32 கிலோ எடையைக்கூட கேக்கை எடுக்குற மாதிரித் தூக்குறாப்பா.

வாண்டு: இந்த வயசுல இவ்ளோ சக்தி எப்படிப்பா அவளுக்குக் கிடைச்சது?

பாண்டு: 3 வயசுலேர்ந்தே எல்லியை உடற்பயிற்சிக்கூடத்துக்கு அவளோட வீட்டுல அனுப்பி வைச்சுட்டாங்க. உடற்பயிற்சி செஞ்சு, சத்தான உணவுகளைச் சாப்பிட்டிருக்கா. அதோட விடாமுயற்சியா பயிற்சி எடுத்து இந்த நிலைக்கு வந்திருக்கா. எடை தூக்குறதுல மட்டுமில்ல, ஜிம்னாஸ்டிக்கிலும்கூட சாம்பியனா இருக்காப்பா. அமெரிக்காவுல ஒலிம்பிக் போட்டியில கலந்துக்குற அளவுக்குத் திறமையிருக்கறவங்களுக்குத் தனியா பயிற்சி கொடுக்குறது வழக்கம். இப்போ எல்லியும் அமெரிக்காவுல ஒலிம்பிக் பயிற்சி மையத்துலத்தான் இருக்கா. வாரத்துல 23 மணி நேரம் பயிற்சி எடுக்குறாளாம்.

வாண்டு: அப்போ வருங்காலத்துல அமெரிக்காவுக்கு ஒலிம்பிக்ல பதக்கம் வாங்கித் தர இந்தச் சின்னப் பொன்னு தயாராயிட்டு வர்றான்னு சொல்லு.

பாண்டு: ஆமா வாண்டு.

வாண்டு: அப்புறம், கின்னஸ் சாதனைக்காக ஒரு நாய் காத்துக்கிட்டு இருக்குற தகவலை நீ கேள்விப்பட்டிருப்பியே?

பாண்டு: இல்லையேப்பா. அந்த நாய் எங்கே இருக்கு?

வாண்டு: இங்கிலாந்துல தெற்கு வேல்ஸ் பகுதியில பிரையன் - ஜூலி வில்லியம்ஸ்ன்ற கணவன் மனைவி ஒரு நாயை வளர்த்துட்டு வராங்க. அந்த நாயோட பேரு கிரேட் டேன். இந்த நாய்க்கு 3 வயசு ஆகுதாம். அந்த நாயோட உயரம் எல்லோருக்கும் ரொம்ப வியப்பை ஏற்படுத்துற அளவுல இருக்குப்பா.

பாண்டு: ஆச்சரியப்படுற அளவுக்கு அப்படி என்ன உயரம்?

வாண்டு: உயரம்னா உங்க வீட்டு உயரம் இல்ல; எங்க வீட்டு உயரம் இல்லை. சும்மா 4 அடி உயரம். 7 வயசுல ஒரு சிறுவன் எந்த உயரத்துல இருப்பானோ, அந்த அளவுக்கு இருக்கு. எடை அதைவிட அதிகம். 76 கிலோ எடை. பாக்குறதுக்குச் சிங்கக்குட்டி போல இருக்குது. இவ்ளோ உயரத்துல உலகில் எங்குமே நாய் இல்லையாம். அதனால், கிரேட் டேன் உலகின் மிகப்பெரிய நாயாகக் கின்னஸ் புத்தகத்தில் சீக்கிரமா இடம்பிடிக்கபோவுது.

கிரேட் டேன்

பாண்டு: இப்படியும் ஒரு சாதனை நாயா? கேட்கவே வியப்பாத்தான் இருக்கு. சரி, வாண்டு, வீட்டுல அம்மா தேடுவாங்க. நான் போறேன்.

வாண்டு: சரி பாண்டு; டாட்டா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x