Published : 10 Aug 2016 11:11 AM
Last Updated : 10 Aug 2016 11:11 AM

நாட்டுக்கொரு பாட்டு - 18:போட்டிப் பாட்டு!

கல்வி, பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடு ஜெர்மனி. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று இரண்டாகப் பிரிந்து கிடந்த இந்த நாடு, 1990-ல் மீண்டும் ஒரே நாடானது.

ஒற்றுமை, நீதி, சுதந்திரத்தைத் தீவிரமாக வலியுறுத்தும் வகையில் அந்த நாட்டின் தேசிய கீதமும் அமைந்திருக்கிறது. 1797-ம் ஆண்டில் ரோமானியப் பேரரசர் இரண்டாம் பிரான்சிஸ் பிறந்த நாளன்று, ஆஸ்திரிய இசையமைப்பாளர் ஜோசஃப் ஹைடன் இப்பாடலை உருவாக்கினார். பிரிட்டனின் மிகப் பிரபலமான, ‘இறைவன், மன்னனைக் காக்கவும்' என்ற பாடலுக்குப் போட்டியாக இது இசைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

- ஆகஸ்ட் ஹீன்ரிச் ஹாட்மேன்

மாறி... மாறி...!

1806-ல் ரோமன் பேரரசு கலைக்கப்பட்ட பிறகு இது ஆஸ்திரியப் பேரரசின் கீதமானது. பின்னர் 1918-ம் ஆண்டு வரை, ஆஸ்திரிய - ஹங்கேரிப் பேரரசின் கீதமாகவும் இருந்தது. ஒவ்வொரு முறையும் பேரரசு மாறும்போது, பாடலின் முதல் வரி மாறிவிடும்.

தடை

11 ஆகஸ்ட் 1922 அன்று ஜெர்மனி அதிபர் ஃப்ரீட்ரிக் ஈபர்ட் இந்தப் பாடலை ஜெர்மனியின் தேசிய கீதமாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். 1936-ம் ஆண்டு பெர்லின் கோடைக்கால ஒலிம்பிக்கின்போது, ஹிட்லர் விளையாட்டு மைதானத்துக்குள் நுழைந்தபோது, ஆயிரக் கணக்கானோர் இப்பாடலைப் பாடினார்களாம். 2-ம் உலகப் போருக்குப் பிறகு 1945-ல் இப்பாடல் தடை செய்யப்பட்டது. 1949-ல் மேற்கு ஜெர்மனி தோன்றியபோது தேசிய கீதம் எதுவுமில்லை. 1952-ல் இது தேசிய கீதமாகத் தேர்வானது. கிழக்கு ஜெர்மனி வேறு பாடல் வைத்துக்கொண்டது.

புரட்சி

அந்தக் காலத்தில் மிகவும் புரட்சிகரமான ஒன்றாகக் கருதப்பட்டது இப்பாடல். இதை 1841-ல் ஜெர்மானிய கவிஞர் ஆகஸ்ட் ஹீன்ரிச் ஹாட்மேன் வோன் ஃபாலர்செபன் எழுதினார்.

இப்பாடலை எழுதியதற்காக அவர் பார்த்து வந்த வேலை பறிபோனது. மூன்று பத்திகள் கொண்ட இப்பாடலின் இரண்டாவது பத்தி ஜெர்மனியின் பெண்கள், மது பற்றி சிறப்பித்துக் கூறுகிறது. எனவே இந்தப் பத்திக்கு நீதிமன்றம் 1990-ல் தடை விதித்தது. இப்போது அந்த வரிகள் பாடப்படுவதில்லை. மூன்றாவது பத்தி மட்டுமே பாடப்படுகிறது.

இப்பாடல் இப்படி ஒலிக்கும்:

ஐன்கிட் உண்ட் ரெச்ட் உண்ட் ஃப்ரீஹிட்

ஃபர் தஸ் டாய்ஸ்ச வாடர்லேண்ட்

டானச் லாஸ்ட் உன்ஸ் அல்லே ஸ்ட்ரபன்

ப்ரூடர் லிஸ்ச்மித் ஹெர்ஸ் உண்ட் ஹாண்ட்

ஈனிகிட் உண்ட் ரெச்ட் உண்ட் ஃப்ரீஹிட்

சிந்த் தஸ் க்லகஸ் உண்டர்ப்ஃபெண்ட்

ப்ளூஹிம் க்ளான்ஸ் டீஸஸ் க்ளூகஸ்

ப்லூஹே டாய்ஸ்சஸ் வாடர்லண்ட்.

பாடலின் தமிழாக்கம்

ஒற்றுமை, நீதி மற்றும் சுதந்திரம்

தந்தையர் நாடு ஜெர்மனிக்கு.

இந்த நோக்கத்துகாக நாம் அனைவரும் பாடுபடுவோம்.

இதயத்தில் இருகரத்தில் சகோதர பாசம்

ஒற்றுமை நீதி மறு சுதந்திரம்

மகிழ்ச்சியின் உறுதிமொழிகள்.

இந்த மகிழ்ச்சியில் தழைக்கட்டும்.

தந்தையர் நாடு ஜெர்மனி தழைக்கட்டும்.

(தேசிய கீதம் ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x