Published : 15 Jun 2016 11:40 AM
Last Updated : 15 Jun 2016 11:40 AM
மலேசியாவுக்கு வடக்கே, மியான் மருக்குத் தெற்கே உள்ள தென் கிழக்கு ஆசிய நாடு தாய்லாந்து. இந்த நாட்டுக்கு, ஒரு சிறப்பு உள்ளது. அயல் நாடுகளுக்குக் கீழ் அடிமை நாடாக இருந்திராத ஒரே தென் கிழக்கு ஆசிய நாடு இதுதான்!
தந்திரம்
தென் கிழக்கு ஆசியாவில் பிரெஞ்சு, இங்கிலாந்து ஆதிக்கம் வலுவாக இருந்ந்தாலும், எப்படி இந்த நாடு மட்டும் அடிமைப்படாமல் போனது? பிரெஞ்சு, ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இடையே நிலவிய பகைமையை, இந்த நாட்டு மன்னர்கள், மிகவும் சாமர்த்தியமாகவும் சாதகமாகவும் தங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். இருவரின் ஆதிக்கத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டார்கள்.
மாறி... மாறி... மாறி…
‘பாங்காக்'ஐத் தலைநகராகக் கொண்ட இந்த நாட்டுக்கு, ‘சயாம்' என்கிற சமஸ்கிருதப் பெயர்தான் முன்பு இருந்தது. 1939-ம் ஆண்டுதான் ‘தாய்லாந்து' ஆனது.
சில ஆண்டுகள் கழித்து 1945-ல் மீண்டும் ‘சயாம்' ஆனது. திரும்பவும் நான்கு ஆண்டுகள் கழித்து, 1949-ல் தாய்லாந்து என்று பெயர் மாறி, அதுவே நிரந்தரமானது.
பழமை & மரபு
சுமார் நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாட்டில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் உள்ளது. நமது பல்லவ மன்னர்கள் உட்பட பன்னாட்டு அரசர்கள் இந்த நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
ஜனநாயக நாடாக இருந்தபோதும், மன்னர்தான் ‘சம்பிரதாய' தலைமை வகித்துவருகிறார். தற்போது மன்னராக உள்ள பூமிபாய் அதுல்யாதேஜ், 1946-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளாக மன்னராக இருந்துவருகிறார்.
இந்த நவீன காலத்தில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலமாக மன்னர் பதவி வகித்துவருபவர் இவர்தான். சரி, இந்த நாட்டு தேசிய கீதத்துக்கு வருவோம்.
கீதம்
போலந்தின் தேசிய கீதத்தின் இசையையொட்டியே தாய்லாந்து தேசிய கீதமும் அமைந்துள்ளது. தேசிய கீதத்துக்கு இசையமைத்தவர், ஃப்ரா சென்டுரியாங்.
இவர் ஒரு ஜெர்மானியர். வேறு ஒருவர் எழுதிய வரிகளுடன், 1932-ம் ஆண்டு ஜூலையில் இது முதன்முதலில் ஒலிபரப்பப்பட்டது.
ஆனால், 1939-ல் தாய்லாந்து என்ற பெயர் மாற்றப்பட்ட பிறகுப் புதிய தேசிய கீதம் கேட்டு பாடல் வரிகள், இசை என இரண்டுக்குமே அந்த நாட்டு அரசு போட்டி நடத்தியது. லு ஆங் சரனுப்ரஃபான் எழுதிய பாடல் தேர்வானது.
ஆனாலும், இசை யாரையும் கவரவில்லை. ஜெர்மானியரின் இசையே நன்றாக இருந்ததால், அதே இசையே தொடரட்டும் என்று முடிவானது.
இப்பாடலை இசைக்க ஆகும் நேரம் - சுமார் 45 வினாடிகள். இப்பாடலில் வரும் ‘தாய்’ என்ற சொல், அந்த நாட்டு மொழியை மட்டுமல்ல; நாட்டு மக்களையும் குறிக்கும். ‘தாய்’ என்றால் சுதந்திரமானவன், மனித இனத்தவன் என்று அர்த்தம் கூறப்படுகிறது. தாய்லாந்து தேசிய கீதம் எப்படி ஒலிக்கும்?
ரேத தாயி ருவாம் லூதநுவே ச்சாதச்வே த்தாய்
பென்ப்ர ச்சாராத் ஃபதங்கோங் த்தாய்துக் சூவான்
யூதம் ராங் கோங் வய்தய் தாங் முவான்
துவய் த்தாய் லுவான் மாய் ரக்ச மன்கி
த்தாய்நி ரக்சங்கோப் தேதுஅங் ராப்மய் காத்
ஏக்கராத் ச்சாம் அஹய் க்ராய் க்கோமகி
சலா லுவேத் துக் யாத்பன் ச்சாத் ஃபலி
தலாங்ப்ர தேத்ச்சட் த்தாய்த்த வீமி ச்சாய், ச்சயோ.
தமிழாக்கம் என்ன?
எல்லா, ‘தாய்' மக்களையும் தாய்லாந்து, நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறது
தாய்லாந்தின் ஒவ்வொரு அங்குல மண்ணும் ‘தாய்' மக்களுக்கே
நெடுங்காலமாக அது தன் இறைமையை தக்க வைத்துக்கொண்டுள்ளது
ஏனெனில் தாய்லாந்தினர் எப்பொழுதும் ஒன்றுபட்டே இருக்கின்றனர்
‘தாய்' மக்கள், அமைதியை நேசிக்கிறவர்கள்; ஆனாலும் யுத்தத்தில் அஞ்சுபவர்கள் அல்லர்;
சர்வாதிகாரத்தை அவர்கள் சகித்துக் கொள்ளவே மாட்டார்கள்
தாய்லாந்தினர், ரத்தம் சிந்தவும் சித்தமாய் இருக்கிறார்கள் -
‘தாய்' தேசத்தின் பாதுகாப்பு, சுதந்திரம், வளர்ச்சிக்காக.
(தேசிய கீதம் ஒலிக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT