Published : 29 Jun 2016 11:59 AM
Last Updated : 29 Jun 2016 11:59 AM

சித்திரக்கதை: கண்ணன் கற்ற பாடம்!

அன்று பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே கண்ணன் சோர்வாக இருந்தான். அம்மாவிடம் சொல்லிவிட்டுச் சீக்கிரமே சாப்பிட்டுப் படுக்கப் போய்விட்டான். ஆனாலும், தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். சென்ற வாரம் புத்தகக் காட்சிக்கு சென்றபோது வாங்கிய புத்தகங்கள் ஞாபகத்துக்கு வந்தன. உடனே அதை எடுத்தான்.

புத்தகத்தைத் திறந்தவுடன் அறையெங்கும் ஒரு ஒளி பரவியது. புத்தகமே ஒரு பெரிய ஜன்னலைப் போல மாறியது. உள்ளேயிருந்து இரு கைகள் அவனை இழுத்தன. அந்தக் கைகள் ஒரு சிறுவனுக்குரியவை. அவன் கொஞ்சம் விநோதமாக இருந்தான். அவனுடைய கண்களும் காதுகளும் பெரிதாக இருந்தன. சற்றுக் குள்ளமாகவும் இருந்தான். அவன் சிரித்தபோது மின்னல் வெட்டியது. வேற்றுக் கிரகவாசியோ எனக் கண்ணனுக்கு ஒரே பயம்.

“என் பெயர் ஹேப்பி” என அறிமுகப்படுத்திக்கொண்டான். அரக்கப் பரக்க விழித்த கண்ணனைப் பார்த்து, “பயப்படாதே. நான் உனக்கு ஃப்ரெண்ட். உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்” என்று கை குலுக்கினான். கண்ணன் கொஞ்சம் பயத்தோடு, “ஹலோ ஹேப்பி” என்றான். ஹேப்பி புன்னகையுடன், “நாம் இருவரும் ஃப்ரெண்ட்ஸ்தானே. சேர்ந்து ஊர் சுற்றலாம்” என்றான். அவன் கையசைத்தவுடன் ஒரு கம்பளம் பறந்து வந்தது.

கண்ணனும் ஹேப்பியும் அதில் ஏறி உட்கார்ந்தவுடன் அது பறக்கத் தொடங்கியது. எங்கே போகிறோம் எனக் கண்ணன் ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். கம்பளம் கடற்கரையோரம் சென்றது. இருவரும் இறங்கினர்.

அங்கே அவன் கண்ட காட்சி விந்தையாக இருந்தது. மீன்கள் அனைத்தும் கடற்கரை மணலில் நடந்துகொண்டிருந்தன. மீன்களுக்குக் கால்கள் இருந்தன. கண்ணனால் நம்ப முடியவில்லை. அருகில் போனான். மீன் ஒன்று, “நீ மனிதன்தானே? இங்கு ஏன் வந்தாய்?” என்று கோபமாகக் கேட்டுவிட்டு ஓடியது. கண்ணனுக்கு ஒரே அதிர்ச்சி. அதற்குள் இன்னொரு மீன் கண்ணன் முன் வந்து நின்றது.

உடனே கண்ணன், “மீன்களால் தரையில் எப்படி நடக்க முடிகிறது?” என மீனிடமே கேட்டான்.

“மனிதர்களால்தான் இப்படி மாறிவிட்டோம். நீங்கள் கடலை மாசு படுத்திவிட்டீர்கள். கடலுக்குள் எங்களால் மூச்சுவிட முடியவில்லை. அவ்வளவு குப்பை, அழுக்கு. சுத்தமான காற்றை சுவாசிக்கத்தான் அவ்வப்போது வெளியே வந்து நடக்கிறோம். அப்புறம் கடலுக்குள் போய்விடுவோம். என்றைக்கு நீங்கள் திருந்துகிறீர்களோ, அன்றைக்குத்தான் எங்களுக்கு விடிவு” என்றபடி தண்ணீருக்குள் சென்றது அந்த மீன். பதில் சொல்ல முடியாமல் நின்றான் கண்ணன்.

ஹேப்பி, கண்ணனைப் பார்த்துச் சிரித்தவாறு, “வா போகலாம்” என்றான். இருவரும் திரும்பவும் கம்பளத்தில் ஏறிப் பறந்தார்கள்.

இம்முறை சாலை ஒன்றில் இறங்கினர். இங்கும் அவன் விநோதமான காட்சிகளைப் பார்த்தான். யானை ஒன்று ஸ்ட்ரா போட்டுக் கரும்புச்சாற்றை உறிஞ்சிக்கொண்டிருந்தது. முயல் மிளகாய் பஜ்ஜியும், நரி பானிபூரியையும் தின்றுகொண்டிருந்தன. சிங்கம் சாவகாசமாக சிக்கன் 65 சாப்பிட்டுக்கொண்டிருந்தது. கண்ணன் திறந்த வாயை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

இந்த முறை சிங்கமே ஆரம்பித்தது. “என்ன, ஆச்சர்யமா இருக்கா? காட்டில் வாழ வேண்டிய நாங்கள், ரோட்டில் நடமாடுகிறோமே என்று பார்க்கிறாயா? இப்போது காடு என்ற ஒன்று எங்கே இருக்கிறது? உங்கள் தேவைகளுக்காக அனைத்தையும் அழித்துவிட்டீர்களே! அதனால் நாங்கள் உங்களுடைய துரித உணவு கலாசாரத்துக்கு மாறிவிட்டோம்” என்று சொல்லிவிட்டுக் கர்ஜித்தது. கண்ணன் வாயடைத்து நின்றான். சுற்றிலும் பார்த்தான். எல்லா விலங்குகளும் மனிதர்களைப் போல சாலையில் சாதாரணமாகத் திரிந்துகொண்டிந்தன.

கண்ணன் அப்போதுதான் ஒன்றைக் கவனித்தான். சுற்றிலும் இருந்த மரங்கள் குள்ளமாகச் சூம்பிப்போய்க் காட்சி அளித்தன. அருகில் சென்றான். மரம் பேசவில்லை. ஆனால், கண்ணீர் விடுவதுபோல அவனுக்குத் தோன்றியது. வாகனங்களின் நச்சுப் புகை எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது என்று குற்றம்சாட்டுவது போலிருந்தது அந்தப் பார்வை. மரத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். அவன் கண்களில் கண்ணீர் வந்தது.

பதறிப்போன ஹேப்பி, “நண்பா! என்ன இது?” என்றபடி அழைத்துவந்தான். வருத்தத்துடன் இருந்த கண்ணனிடம், “இப்போதும் ஒன்றும் கை மீறிப்போ வில்லை. தூய்மையாக வைப்பது, பூமி சூடாகுதல், காற்று மாசுபடுதல், காடுகளை அழித்தல் பற்றி எல்லோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்து. பூமியைக் காப்பாற்று” என்றான். கண்ணன் சரியென்று தலையசைத்தான். அப்போது கம்பளத்திலிருந்து நழுவிக் கீழே விழுந்தான். “ஐயோ! நண்பா…” என்ற கத்தியபடி எழுந்தான் கண்ணன்.

அவன் கட்டிலிலிருந்து கீழே விழுந்திருந்தான். கண்டதெல்லாம் கனவு என்பது புரிந்தது. கனவு என்றாலும் கற்ற பாடத்தை மறக்கவில்லை. நாளை முதல் தன்னுடைய வேலை என்ன என்பது அவனுக்குப் புரிந்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x