Published : 27 Jul 2016 11:28 AM
Last Updated : 27 Jul 2016 11:28 AM

நாட்டுக்கொரு பாட்டு - 16: போலீஸ்காரர் தந்த தேசிய கீதம்!

இயற்கை கொட்டிக் கிடக்கும் ஓர் அழகான நாடு மொரீஷியஸ். அரிய வகைத் தாவரங்கள் பல அடர்த்தியாக உள்ள இந்தியப் பெருங்கடலின் தீவு தேசம்.

1638-ல் டச்சுக்காரர்கள் வரும்வரை இங்கே மக்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். 1710-ல் டச்சுக்காரர்கள் சென்ற பிறகு பிரெஞ்சுக்காரர்கள் வந்தார்கள். 1810-ல் இத்தீவு பிரிட்டிஷார் கைக்குப் போனது. அதன் பின்னர் 1968-ம் ஆண்டுவரை, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.

குடியரசு

1968-ம் ஆண்டு மார்ச் 12 அன்று, இந்நாடு சுதந்திரம் பெற்றது. 1992 மார்ச் 12 அன்ற்கு மொரீஷியஸ் குடியரசு நாடானது. 1983-ல் மொரீஷியஸில், உள் நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அ

ப்போது ராணுவ உதவி செய்ய இந்தியா ஒத்துழைத்தது. அன்று முதல் இந்தியாவுக்கும் மொரீஷியஸுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது.

கீதம்

‘அன்னை பூமி' என்று அழைக்கப்படும் மொரீஷியஸின் தேசிய கீதத்தை எழுதியவர் கவிஞர் ஜீன் ஜார்ஜஸ் ப்ராஸ்பர். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பிலிப் ஜெண்ட்ல். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மொரீஷியஸ் நாட்டுக் காவல் துறையின் இசைக் குழுவில் பணிபுரிந்தவர். இசையில் மட்டுமல்லாமல், நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் இவர் கில்லாடி.

தவறு

மொரீஷியஸ் 1968 மார்ச் 12 அன்று சுதந்திரம் பெற்றபோது, தேசிய கீதத்துக்கு இசையமைத்தவர் ‘ஃபிலிப் ஓ சான்' என்ற பெயரும் புகைப்படமும் பத்திரிகையில் தவறாக வெளியானது. அன்றைய தினமே, அச்சடிக்கப்பட்ட பிரதிகள் திரும்பப் பெறப்பட்டன.

பெருந்தன்மை

பத்திரிகையில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்ட ஃபிலிப் ஓ சான், காவல் துறையின் இசைப் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர். அவரின் கீழ்தான் ஃபிலிப் ஜெண்ட்ல் வேலை செய்துவந்தார். தவறுதலாகத் தனது பெயர் இடம் பெற்றுவிட்டதில், சானும் வருத்தமடைந்தார்.

சில மாதங்கள் கழித்து தேசிய கீதத்தைத் தேர்வு செய்யக் குழு அமைக்கப்பட்டது. போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டது. தேர்வுக் குழுவில் சான் இடம் பெற்றிருந்தார். தன்னுடைய பாடலிசையை அனுப்பிவைக்கும்படி ஜெண்ட்லிடம் வற்புறுத்திப் பெற்றார் சான். அந்தப் பாடலே தேசிய கீதமாக அறிவிக்கப்பட பெரிதும் காரணமாக சான் இருந்தார். இந்தக் கீதத்தைப் பாடி முடிக்க ஆகும் நேரம் - சுமார் 52 வினாடிகள்.

இப்பாடல் இப்படி ஒலிக்கும்:

க்ளோரி டு தீ

மதர்லேண்ட் ஓ மதர்லேண்ட் ஆஃப் மைன்

ஸ்வீட் இஸ் தை பியூட்டி

ஸ்வீட் இஸ் தை ஃப்ரேக்ரன்ஸ்

அரௌண்ட் தீ வி கேதர்

அஸ் ஒன் ப்யூபிள்

அஸ் ஒன் நேஷன்

இன் பீஸ், ஜஸ்டிஸ் அண்ட் லிபர்ட்டி

பிலவ்ட் கன்ட்ரி மே காட் ப்ளெஸ் தீ

ஃபார் எவர் அண்ட் எவர்!

இதன் உத்தேச தமிழாக்கம்:

நினக்கு மகிமை உண்டாகட்டும்!

தாய் நாடே! எனது தாய் நாடே!

நினது அழகு - இனிமை;

நினது சுகந்தம் - இனிமை.

நின்னைச் சுற்றி

நாங்கள் கூடுகிறோம் -

ஒரே மக்களாக!

ஒரே தேசமாக!

அமைதி, நீதி, சுதந்திரம் இவற்றுடன்

எம் நேசத்துக்குரிய தேசமே,

இறைவன் நின்னை ஆசீர்வதிக்கட்டும்

என்றும் என்றென்றும்.

(தேசிய கீதம் ஒலிக்கும்)

- ஃபிலிப் ஜெண்ட்ல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x