Last Updated : 03 Aug, 2016 11:56 AM

 

Published : 03 Aug 2016 11:56 AM
Last Updated : 03 Aug 2016 11:56 AM

ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை: பொய்யே சொல்லாத மனிதன்!

ரொம்ப காலத்துக்கு முன்பு மமத் என்ற புத்திக் கூர்மையுள்ள மனிதன் ஒருவன் வாழ்ந்துவந்தான். அவன் எப்போதும் பொய்யே பேச மாட்டான். மமத்தின் பேசாத பண்பு ஊரில் எல்லோருக்கும் தெரியும். அக்கம்பக்கத்து ஊரில் இருந்தவர்களுக்குக்கூடத் தெரியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

மமத்தைப் பற்றிய இந்தச் செய்தி, அந்த நாட்டு அரசரின் காதுகளுக்கும் எட்டியது. உடனே அவர் மமத்தை அரண்மனைக்குக் கூட்டிவரச் சொல்லிக் கட்டளையிட்டார். மமத் அரண்மனைக்கு வந்தான். அவனிடம் அரசர், “மமத், நீ எப்போதும் பொய்யே சொன்னது கிடையாதா? இது உண்மையா?” என்று கேட்டார்.

“ஆமாம் அரசே, உண்மைதான்”. என்றான் மமத்.

“அப்படியென்றால் நீ வாழ்க்கை முழுவதும் பொய்யே சொல்ல மாட்டாய், அப்படித்தானே?” என்று பீடிகையுடன் கேட்டார் அரசர்.

“ஆமாம், நான் எப்போதும் பொய் சொல்ல மாட்டேன். பொய்யே சொல்லக் கூடாது என்ற உறுதியுடன் இருக்கிறேன்” என்றான் மமத்.

“சரி மமத். நீ உண்மையே பேசு. ஆனால், கவனமாகப் பேசு! ஏனென்றால், பொய் ரொம்ப வஞ்சகமானது. அது எளிதாக யார் நாக்கில் வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்ளும்” என்றார் அரசர்.

நாட்கள் உருண்டோடின. மீண்டும் அரசர் ஒரு நாள் மமத்தை அரண்மனைக்கு வரும்படி கூப்பிட்டார். ஒரு பெரிய கூட்டம் அரண்மனையில் கூடியிருந்தது. அரசர் வேட்டைக்குப் போகத் தயாராகிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவர் குதிரை மீது உட்கார்ந்து, அதன் பிடரி மயிரைப் பிடித்திருந்தார். அவருடைய இடது காலைக் குதிரைச் சேனை வளையத்தின் மீது வைத்திருந்தார்.

அப்போது மமத் அங்கே வந்தான்.

மமத்தைப் பார்த்ததும், “மமத்! நீ என்னுடைய கோடை அரண்மனைக்குப் போ. அங்கே அரசியிடம் போய், நான் மதிய விருந்துக்கு வருவேன் என்று சொல். ஒரு பெரிய விருந்து தயாரிக்கச் சொல். நீயும் என்னுடன் அந்த விருந்தில் கலந்துகொள்! ” என்றார் அரசர்.

மமத் தலைவணங்கிவிட்டு, அரசியிடம் செய்தியைச் சொல்லச் சென்றான். அவன் சென்ற பிறகு அரசர் கலகலவென்று சிரித்தார்.

“நாம் வேட்டைக்குச் செல்லப்போவதில்லை. இப்போது மமத் அரசியிடம் பொய் சொல்லப்போகிறான். நாளைக்கு அவனை நினைத்து நாமெல்லாம் நன்றாகச் சிரிக்கலாம்” என்று தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் சொல்லி ஹா… ஹா… ஹா… என்று சிரித்தார்.

ஆனால், மமத் புத்திசாலி அல்லவா? அவன் அரசியிடம் என்ன சொன்னான் தெரியுமா?

“ நீங்கள் நாளைக்குப் பெரிய மதிய விருந்து தயாரிக்க வேண்டியிருக்கலாம் அல்லது அப்படியில்லாமலும் போகலாம். ஒருவேளை, இன்று மதியமே அரசர் வரலாம் அல்லது வராமலும் இருக்கலாம்” என்றான்.

“குழப்பாதே, அரசர் வருவாரா, மாட்டாரா? அதைச் சொல்” என்றாள் அரசி.

“அரசர் தன்னுடைய வலது காலை குதிரையின் சேனை வளையத்தில் எடுத்துவைத்தாரா, அல்லது நான் அங்கிருந்து சென்றவுடன் இடது காலை நிலத்தில் வைத்தாரா என்பது எனக்குத் தெரியாது” என்றான்.

அடுத்த நாள்.

எல்லோரும் அரசருக்காகக் காத்திருந்தார்கள். அரசர் வந்தார். அரசியிடம், “பொய்யே சொல்லாத பண்பாளன் மமத், நேற்று உன்னிடம் பொய் சொல்லியிருப்பானே” என்று கேட்டார்.

ஆனால், அரசியோ தன்னிடம் மமத் கூறிய வார்த்தைகளை அப்படியே சொன்னாள். அரசருக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் திருதிருவென விழித்தார். அப்போதுதான் அரசருக்கு மமத்தின் புத்திக்கூர்மையும், அவனுடைய பொய் சொல்லாத நற்பண்பின் பெருமையும் புரிந்தது.

சுயபுத்தியுடனும் சுயஒழுக்கத்துடனும் செயல்படுபவர்களை யாராலும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை அரசர் அன்று நன்றாக உணர்ந்தார்.

குழந்தைகளே, அப்போ நீங்கள் எப்படி?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x