Last Updated : 12 Mar, 2014 12:00 AM

 

Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM

பறக்கத் தெரியாத கிளி

நாய்க்குட்டி, பூனைக் குட்டி, கலர் மீன் குஞ்சுகள் இப்படி நம்ம வீட்டில் பலவிதமான செல்லப் பிராணிகளை நாம் வளர்க்கிறோம். ஆனால், முன்னாடி நம்ம தாத்தா பாட்டி காலத்துல கிளியைச் செல்லப் பிராணியா வளர்த்தாங்க. கிளியோட சிறப்பு குணம் என்னன்னா, அது நாம சொல்றதை அப்படியே திருப்பிச் சொல்லும். ‘ஏய் கிளிப் பிள்ளை’ அப்படினா அதுவும் ‘ஏய் கிளிப் பிள்ளை’ன்னு சொல்லும். சுருக்கமா சொன்னா, டாக்கிங் டாம் மாதிரி.

குட்டிப் பெண்ணும் குட்டிக் கிளியும்

Rio படத்தில் இது மாதிரியான பேசும் கிளிகள், மற்ற பறவைகள் இருக்கு. அவை பேசுறது மட்டுமல்லாம எல்லாம் சேர்ந்து பாட்டு வேற பாடும். இந்த மாதிரியான ஒரு பெரிய பறவை கூட்டம் பிரேசில் நாட்டில் உள்ள ஒரு காட்டுல வாழ்ந்து வந்தது. அதுங்க வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம். சாப்பாடு முடிச்சு பறவை ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து எப்பவும்போல ஒரு நாள் குதியாட்டம் போடுதுங்க. அப்போ திடீர்னு காட்டுக்குள்ள மனிதர்கள் வந்துடுறாங்க. வலை விரிச்சு, அதுல மாட்டுற பறவைகளையெல்லாம் பிடிச்சிக்கிட்டு போறாங்க.

நம்ம ஹீரோவான ப்ளூ கிளி அப்போ ரொம்ப சின்னக் குஞ்சு. அதுக்குப் பறக்கக்கூடத் தெரியாது. அதுவும் வலையில் மாட்டிக்குது. எல்லாப் பறவைகளோட அதையும் அடைச்சு ஒரு வண்டில எடுத்துப் போறாங்க. ஆனா அதிர்ஷ்டவசமா அந்த வண்டி ஒரு லேம்ப் போஸ்ட்ல மோதி விபத்தில் மாட்டிக்குது.

அப்போ அந்தப் பக்கம் வந்த, லிண்டா என்ற குட்டிப் பொண்ணு அந்தப் ப்ளூ கிளியைக் காப்பாத்தி எடுத்துப் போய் வீட்டில் வைச்சு வளர்க்கிறா. அவ வளர்ந்து பெரிய பெண்ணாகுறா. ப்ளூ கிளியும் வளர்ந்து பறவையாக ஆயிடுது. அது வீட்ல வளர்ந்ததால், பெரிய பறவையாக ஆனாலும், அதுக்குப் பறக்கத் தெரியலை. மத்தப் பறவைங்க எல்லாம் ஜன்னல் வழியாகப் பார்த்து பறக்கத் தெரியாததைச் சொல்லிக் கிளியைக் கிண்டலடிக்கும். ஆனால் ப்ளூ கிளி சந்தோஷமாகத்தான் இருந்தது.

ஜோடிக் கிளிகள்

ஒரு நாள் அந்த வழியா வந்த பறவை ஆராய்ச்சியாளர் ஒருத்தர் இந்தப் ப்ளூ கிளியைப் பார்க்கிறார். ப்ளூ கிளி அழிஞ்சு வர்ற இனமா இருப்பதால் அவர் வியந்துபோயிடுறார். அவர் வளர்த்துவரும் ப்ளூ பெண் கிளியோட இதை ஜோடி சேர்த்தால், ப்ளூ கிளி குஞ்சுகள் வரும். இந்தப் ப்ளூ இனத்தைக் காப்பாத்தலாம்னு நினைக்கிறார். முதலில் மறுக்கும் லிண்டா பிறகு சம்மதிக்கிறா.

அந்தப் ப்ளூ பெண் கிளியையும் ப்ளூ ஆண் கிளையையும் பழகுறதுக்காக ஒரு கூண்டுக்குள் ஒண்ணா அடச்சு வைச்சுறாங்க. ஆனா இந்த மாதிரி ஆபூர்வ பறவைகளைத் திருடிப் போய் விற்றுக் காசு சம்பாதிக்கும் கும்பல்கிட்ட அந்தக் கிளிகள் ரெண்டும் மாட்டிக்கும். ரெண்டு கிளியையும் சங்கிலி போட்டு கட்டிடறாங்க. பெண் கிளி பறந்து தப்பிக்க நினைச்சாலும், நம்ம ப்ளூ ஆண் கிளிக்குப் பறக்கத் தெரியாது. இந்தக் கிளிகள் ரெண்டும் எப்படித் தப்பிக்கும்? Rio படத்தைப் பார்த்தா, அதுக்கு விடை கிடைச்சுடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x