Published : 17 May 2017 10:30 AM
Last Updated : 17 May 2017 10:30 AM
உங்க அம்மா சின்னப் பிள்ளையா இருந்தப்ப செஞ்ச சேட்டைகளைப் பத்தி சொல்லியிருக்காங்களா? எங்கம்மா எனக்கு நிறைய சொல்லியிருக்காங்க. சின்னப் பிள்ளையா இருந்தப்ப எங்கம்மாவுக்கு சேட்டைக்காரி, ஊர்சுத்தி, அறுந்த வாலுன்னு நிறைய பெயர்கள் இருந்துச்சாம். அம்மாவுக்கு எப்படியாவது ‘சமத்து பிள்ளை’ன்னு பேர் வாங்க ஆசையா இருக்குமாம். அதுக்காக என்னென்னமோ வேலை செய்வாங்களாம். ஆனா, எல்லாமே வால்தனமாகவே போய் முடிஞ்சுடுமாம். அம்மா அந்தக் கதைகளை அடிக்கடி சொல்வாங்க. அந்தச் சேட்டைக் கதைகளை உங்களுக்கும் சொல்றேன், கேட்குறீங்களா?
அப்போ அம்மா நாலாவது படிச்சிக்கிட்டு இருந்தாங்க. ஊர்ல சைக்கிள்லாம் ரொம்ப கிடையாது. பாட்டிய பார்க்க யாரோ சைக்கிள்ல வந்திருக்காங்க. அவங்க பேசி முடிக்கிறதுக்குள்ள சைக்கிளை ஓட்டிப் பார்க்கணும்னு அம்மாவுக்கு ஆசை. சைக்கிளை நவுத்திகிட்டுப் போன அம்மாவுக்கு ஒரே குஷி. தன்னால பெரிய சைக்கிளையே ஓட்ட முடிஞ்சிடுச்சின்னு தோணுச்சு.
எப்படியாவது சின்ன சைக்கிளையும் எடுத்து ஏறி உக்காந்து ஓட்டிப் பார்த்துடணும்னு நினைச்சாங்க. ஒரு நாள் யாரையும் கூப்புடாம தனியா வாடகையில சின்ன சைக்கிளை எடுத்து நடக்க ஆரம்பிச்சாங்க.
அந்த வழியில ஒருத்தர் வந்தாரு. அவர்கிட்ட, “சைக்கிளைப் புடிச்சிக்குங்க, நான் ஓட்ட ஆரம்பிச்சதும் உட்டுடுங்க”ன்னு சொன்னாங்க. அவரும் ஏறி உக்காரவச்சி பின்னாடியே புடிச்சிகிட்டுப் போயிருக்காரு.
“பத்திரமா போ பாப்பா. போயிடுவதான”ன்னு அவர் கேட்டிருக் காரு. சைக்கிள் ஓட ஆரம்பிச்சிடுச்சி. கொஞ்ச நேரத்துல் அம்மா வேகமா பெடலை மிதிக்க ஆரம்பிச்சாங்க. சைக்கிள் வேகமா ஓடுது. எதிர்த்தாப்புல தெரிஞ்ச மரமெல்லாம் அம்மாவுக்குப் பின்னாடி வேகமா போய்க்கிட்டு இருந்துச்சு. அம்மாவுக்கு ஒரே சந்தோஷம். போன வேகத்துல அடுத்த ஊரே வந்துடுச்சி. ஆனா, வண்டிய ஓட்டத் தெரிஞ்ச அம்மாவுக்கு அதை எப்படி நிறுத்துறதுன்னு தெரியல.
“பத்திரமா போ பாப்பா. போயிடுவதான”ன்னு அவர் கேட்டிருக் காரு. சைக்கிள் ஓட ஆரம்பிச்சிடுச்சி. கொஞ்ச நேரத்துல் அம்மா வேகமா பெடலை மிதிக்க ஆரம்பிச்சாங்க. சைக்கிள் வேகமா ஓடுது. எதிர்த்தாப்புல தெரிஞ்ச மரமெல்லாம் அம்மாவுக்குப் பின்னாடி வேகமா போய்க்கிட்டு இருந்துச்சு. அம்மாவுக்கு ஒரே சந்தோஷம். போன வேகத்துல அடுத்த ஊரே வந்துடுச்சி. ஆனா, வண்டிய ஓட்டத் தெரிஞ்ச அம்மாவுக்கு அதை எப்படி நிறுத்துறதுன்னு தெரியல.
வழியில யாரும் இல்லை. எதிரே வந்த ரெண்டு பேர்கிட்டயும் இதைச் சொல்ல நினைச்சப்போ, சைக்கிள்ல பேலன்ஸ் போயிடுற மாதிரி இருந்துச்சி. அதனால, கவனத்தையெல்லாம் சைக்கிளிலேயே வச்சி ஓட்டுனாங்க. ‘பிரேக்’னு ஒண்ணு இருக்கிறதே அம்மாவுக்குத் தெரியலை. திடீர்ன்னு சைக்கிளக் கொஞ்சம் திருப்புனப்ப ரோட்டுலருந்து விலகி, கல்லும் முள்ளும் கிடந்த வாய்க்காலுக்குள்ள போயி தொப்புன்னு விழுந்துச்சு. அம்மா மேல சைக்கிள். கையில நல்லா சிராய்த்து வலி.
யாராவது வந்து தூக்குவாங்கன்னு அம்மா நினைச்சாங்க. ஆனா, காலியா கிடந்த அந்த ரோட்டுல பேருக்குக்கூட ஒருத்தர் தலையும் தெரியலையாம். வேற வழியில்லாம, மெதுவா எழுந்து கையைப் பார்த்து ஒரே அழுகை. சத்தமா அழுதா, குரல் கேட்டு யாராவது வருவாங்கன்னு பார்த்தா, அப்பயும் யாரும் வரலை. சைக்கிளை அவங்களே கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்துனாங்க.
வலி கொஞ்சம் கொறைஞ்சதும், சைக்கிளை நவுத்திக்கிட்டே வந்திருக்காங்க. வர்ற வழி முழுக்க அழுகையாம். ஆனா, வழிநெடுக மனுஷங்களே இல்லாம பொட்டல் காடு. மெதுவா நடந்துக்கிட்டே போறாங்க. ஆனா, ஊர் மட்டும் வரல.
ரொம்ப தூரம் நடந்தது மாதிரி இருக்குது. வழியில எலந்த மரத்தைப் பார்த்துட்டாங்க. வண்டிய நிறுத்திப் பழம் பறிக்க நினைச்சாங்க.. திடீர்னு கீழ விழுந்தது ஞாபகம் வந்துச்சி. அதனால பழம் பறிக்கிற நினைப்பு போய்டுச்சு.
திடீர்னு ஒரு பைக் சத்தம் கேட்டுச்சு. பட்பட்ன்னு பெரிய புல்லட். அம்மா ஊர்ல வாசுதேவனிடம் மட்டும் புல்லட் இருந்துச்சாம். அவர்தான் வர்றார். நிறுத்திக் கேட்பார், வண்டியில் ஏத்திக்கிட்டுப் போய்ப் பாட்டியிடம் மாட்டிக்கொடுப்பார்னு அம்மா பயந்தாங்களாம். பைக்குப் பக்கத்துல வந்ததுகூடத் தெரியாம, சத்தமா பறந்து போயிடுச்சாம்.
அடுத்து யாராவது வர மாட்டாங்களா? இன்னைக்கு ராத்திரி வீட்டுக்குப் போக முடியுமா? போகாட்டி ஏதாவது மரத்தடியிலயே தூங்கலாம்னு அம்மாவுக்கு யோசனையாம். ‘சளைங்கமான்’னு ஒரு ஊரு வந்துச்சி. அங்கிருந்து 3 கிலோ மீட்டர்தான் அம்மா ஊரு. ஊர் வரப் போவுதுன்னு தெரிஞ்சதும் அம்மாவுக்கு சந்தோஷமா இருந்துச்சு. ஆனா, பயங்கரமா கால் வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. வலி தாங்காம அழுகையான அழுகையாம்.
“யாராவது காப்பாத்துங்களேன். கீழ விழுந்து அடிபட்டுடுச்சி. எந்த ஊருன்னு தெரியாம நடந்து நடந்து கால் வலிக்குது. நான் மட்டும் நடக்காம சைக்கிளையும் சேர்த்துத் தள்ளிக்கிட்டு வர்றேன்”ன்னு அழுதுகிட்டே புலம்புனாங்க.
அதுவரைக்கும் வீடு வரலையேன்னு கவலையா இருந்தவங்களுக்கு, அப்புறமா வீடு வந்துடுச்சேன்னு பயம் வந்துடுச்சு. சைக்கிள் கடையில என்ன சொல்றது, அம்மாகிட்ட என்ன சொல்றதுன்னு யோசிச்சாங்களாம்.
(சேட்டைகள் தொடரும்)
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT