Last Updated : 20 Jul, 2016 12:01 PM

 

Published : 20 Jul 2016 12:01 PM
Last Updated : 20 Jul 2016 12:01 PM

ஒலிம்பிக் சகாப்தம்: ஹாக்கி மந்திரவாதி

அவருடைய பிறந்தநாளே, நம் நாட்டின் தேசிய விளையாட்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது. விளையாட்டு தொடர்பான தேசிய விருதுகள் அந்த நாளில்தான் வழங்கப்படுகின்றன. எந்த நவீன வசதிகளும் இல்லாத 1930-40-களில் உலக அரங்கில் இந்தியாவின் பெயரைத் தூக்கிப் பிடித்தவர் அவர். சுருக்கமாக, நாட்டின் மகத்தான விளையாட்டு வீரர். அவர்தான் தியான் சந்த்.

அலஹாபாத்தில் 1905-ல் பிறந்த தியான்சந்துக்கு சிறு வயதில் மல்யுத்தத்தில் மட்டுமே ஆர்வம். ஆனால், 16 வயதில் ராணுவத்தில் சேர்ந்த பிறகு ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் திரும்பியது. அவருடைய நிஜப் பெயர் தியான் சிங். ஒவ்வொரு நாளும் இரவில் ஹாக்கி பயிற்சியில் ஈடுபடுவதற்காக நிலவு வரும்வரை அவர் காத்திருந்ததால், தியான் சந்த் எனப்பட்டார். சந்த் என்றால் இந்தியில் நிலவு என்று அர்த்தம். ‘நிலவைப் போல எதிர்காலத்தில் அவர் பிரகாசிப்பார்' என்று அவருடைய பயிற்சியாளர் கருதியதால், அப்பெயர் வந்தது என்று கூறுவோரும் உண்டு.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனும் தியான் சந்தும் ஆஸ்திரேலியாவில் ஒரு முறை சந்தித்தனர். அந்தச் சந்திப்பு தியான் சந்துக்கு பெரு மகிழ்ச்சி தந்தது. அப்போது தியான் சந்தை பிராட்மேன் எப்படிப் பாராட்டினார் தெரியுமா, “கிரிக்கெட்டில் ரன்களை அடிப்பதைப் போல ஹாக்கியில் கோல்களை விளாசுகிறீர்களே!” என்று பாராட்டினார்.

தன் வாழ்நாளில் 400-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள தியான் சந்த், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். இருபது ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடிவந்த அவர், 1948-ல் சர்வதேச ஹாக்கி போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். 1956-ல் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஒரு முறை ஒரு பார்வையாளர் தன் வாக்கிங் ஸ்டிக்கை வைத்து ஹாக்கி விளையாட முடியுமா என்று தியான் சந்திடம் சற்று சவாலாகக் கேட்டார். தியான் சந்த் அதை வாங்கியதோடு மட்டுமல்லாமல், கோல் அடித்துக் காட்டி அசத்தினார்.

இந்திய ஒலிம்பிக் சங்கம் ‘கடந்த நூற்றாண்டின் சிறந்த இந்திய வீரர்' என்று தியான் சந்தை அறிவித்துள்ளது மிகவும் பொருத்தமானதுதான்.

# அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் தரப்படவில்லை. ‘கோடினோஸ்' எனப்படும் பளபளப்பான இலைகளால் செய்யப்பட்ட இலைகிரீடம்தான் பரிசு, கௌரவம் எல்லாமே. கோடினோஸ் என்பது ஆலிவ் இலையால் செய்யப்பட்ட கிரீடம்.

# ஒலிம்பியாவில் உள்ள ஸீயஸ் கோயிலின் பின்புறம் உள்ள ஆலிவ் மரத்தில் எடுக்கப்பட்ட இலைகள் அவை என்பதுதான் இதில் விசேஷம். ஸீயஸ் கடவுளின் மகன் ஹீராக்லெஸின் வம்சாவளியைச் சேர்ந்த இபிடோஸ், அந்த மரத்தை நட்டதாக நம்பிக்கை.

# ஒலிம்பிக் போட்டி என்பது நம்ம ஊர் திருவிழா, கொண்டாட்டம் போலத்தான். உணவு, மது அருந்துதல், ஆட்டம் பாட்டம், கொண்டாட்டமாக நடைபெற்றது. போட்டிகளின் ஒரு பகுதியாக மத போதகர்கள் சடங்குகளை நிறைவேற்றினார்கள், வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி கவிஞர்கள் கவிதை புனைந்தார்கள். ஓவியர்கள்-சிற்பிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினார்கள்.

# இப்போது போல் இல்லாமல் அந்தக் காலத்தில் ஓவியம், சிற்பம் போன்ற கலை வெளிப்பாடு தொடர்பான போட்டிகளும் ஒலிம்பிக்கில் நடத்தப்பட்டன. ஓவியம், சிற்பம், கவிதை, கைவினைக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை இந்தப் போட்டிகளில் காட்சிப்படுத்தினர். நவீன காலத்தில்தான் விளையாட்டுக்கு மட்டுமான போட்டிகளாக ஒலிம்பிக் மாறிவிட்டது.

# கி.பி. 393-ல் தியடோசியஸ் 1 அல்லது கி.பி. 435-ல் அவருடைய பேரன் தியடோசியஸ் 2 ஆகிய இருவரின் காலத்தில் ஏதாவது ஒன்றில் பண்டைய ஒலி்ம்பிக் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கலாம். அதேநேரம் போட்டிகள் நடத்தப்பட்ட மைதானம் கி.பி. 6-ம் நூற்றாண்டில் நிலநடுக்கம் ஏற்படும்வரை, சிதையாமல் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x