Last Updated : 12 Mar, 2014 12:00 AM

 

Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM

செஸ்ஸில் சாதித்த சுட்டி

சென்னையைச் சேர்ந்த சிறுமி லக்ஷ்மி பல வெளிநாடுகளுக்குப் போயிருக்கிறார். அந்த நாடுகளை எல்லாம் அவர் ஜாலியாகச் சுற்றிப் பார்த்திருப்பார் என்றுதானே நினைக்கிறோம். ஆனால், இல்லை.

லக்ஷ்மி ஒரு ஃபிடே (உலகச் செஸ் கூட்டமைப்பு) செஸ் மாஸ்டர். அவர் வெளிநாடு சென்றதெல்லாம் சர்வதேசச் செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக. இவர் உலக அளவில் ரன்னர், ஆசிய செஸ் சாம்பியன் (8 வயதுக்குக் கீழ் பிரிவு). சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பிலிப்பைன்ஸ், பிரேசில், இலங்கை, ஸ்லோவேனியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்குப் போயிருக்கிறார்.

அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, போட்டித் தொடரில் வென்று கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அதனால் ஊர் சுற்றிப் பார்க்கப் பெரிதாக நேரம் கிடைக்காது. “அதைப் பத்தி நான் கவலைப்படலை. செஸ் போட்டில ஜெயிக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதேநேரம் துபாய், ஸ்லோவேனியா போனபோது அந்த இடங்களைச் சுத்தி பார்த்திருக்கேன்" என்கிறார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மளிகைக் கடை வைத்திருக்கும் சிதம்பரம், கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளான லக்ஷ்மி, அதே பகுதியில் இருக்கும் பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமத்தில் படித்து வருகிறார். அடிக்கடி செஸ் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும்போது, ஸ்கூலுக்குப் போக முடியாமல் போய்விடுமே, அப்போது லக்ஷ்மி என்ன செய்வார்?

"உண்மைதான். ஆனால், செஸ் போட்டிகளில் சாம்பியன் ஆகும்போது, ஸ்கூலிலும் பாராட்டுவார்கள். நான் பள்ளிக்குச் செல்லாதபோது நடத்தப்பட்ட பாடங்களின் நோட்ஸை எடுத்துக் கொடுப்பாங்க, சிறப்பு வகுப்பெல்லாம் ஏற்பாடு செய்து ஹெல்ப் பண்ணுவாங்க.” என்கிறார் லக்ஷ்மி.

செஸ்ஸில் சாம்பியனாக இருக்கும் இவர், படிப்பிலும் கெட்டி. ஏற்கெனவே, ஆசிய அளவில் ஒரு தங்கம் (2011), 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

இவ்வளவு மெடல் வென்றிருக்கிறாரே, செஸ் சாம்பியனாக மாறுவது ரொம்ப கஷ்டமா? அப்படியெல்லாம் கிடையாது என்கிறார் லக்ஷ்மி.

"எல்.கே.ஜி. படிக்கும் போதிருந்து நான் செஸ் விளையாடி வருகிறேன். என் அப்பாவின் ஃபிரெண்ட் ஒரு செஸ் கோச். அவரது கைடென்ஸில்தான் செஸ் பயிற்சி பெற ஆரம்பித்தேன். யு.கே.ஜி. முடிக்கும்போதே போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்டேன். தி. நகர் செஸ் அகாடமில அப்பப்போ 2 மணி நேரம் செஸ் பயிற்சிக்குப் போவேன். வீக் எண்ட்களில் டோர்னமென்ட்டுக்குப் போவேன்” என்கிறார். போட்டிகளுக்கு இவரது அப்பாவோ அல்லது அம்மாவோ உடன் செல்கிறார்கள்.

லக்ஷ்மிக்குச் செஸ் மட்டும்தான் பிடிக்குமா? இல்லை. "ஸ்கூல் ரன்னிங் ரேஸிலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனா, டிவி பார்க்க டைம் ஸ்பெண்ட் பண்றதில்லை. அந்த நேரத்துல ஸ்கூல் பாடத்துல கவனம் செலுத்துவேன்" என்று கூறும் இவர் 8 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உலகத் தரவரிசையில் 4வது இடத்தில் இருந்திருக்கிறார். செஸ் சாம்பியன்களின் பெருங்கனவான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற வேண்டும், டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் லக்ஷ்மியின் ஆசையாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x