Published : 25 Jan 2017 09:59 AM
Last Updated : 25 Jan 2017 09:59 AM
பள்ளிக்கூடத்துக்கு அவசரமாகப் போய்க்கொண்டிருந்தாள் கண்மணி. வீட்டுத் தோட்டத்தைக் கடந்து தெரு முனைக்குத் திரும்பியவள், கீழே கிடந்த புளியங்கொட்டைகளை விளையாட்டாய்க் காலால் உதைத்தாள்.
அந்த விதைகள் கொஞ்ச தூரம் தரையைத் தேய்த்தபடி சென்று, சட்டெனப் பட்டாம்பூச்சியைப் போலப் பறக்க ஆரம்பித்தது.
அதை கண்மணி வியப்பாகப் பார்த்தாள்.
“சிறுமியே எங்களை ஏன் உதைத்தீர்கள்?” எனப் பணிவுடன் கேட்டன விதைகள்.
பதில் கூறாமல் அமைதியாக நின்றாள் கண்மணி.
“ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? நாங்கள் ஒன்றும் உங்களைத் தொந்தரவு செய்யவில்லையே, பிறகு ஏன் எங்களை உதைத்தீர்கள்?” என மீண்டும் கேட்டன விதைகள்.
“என்னை மன்னித்துவிடுங்கள். நான் விளையாட்டாக உங்களை உதைத்துவிட்டேன்” என்றாள் கண்மணி.
“சரி, போகட்டும். வேகமாக வந்தீர்களே, அப்படி எங்கே அவசரமாகப் போகிறீர்கள்?” எனக் கேட்டது ஒரு விதை.
“பள்ளிக்கூடத்துக்கு. அதனால்தான் அவசரமாக வந்தேன்” என்றாள் கண்மணி.
“பள்ளிக்கூடமா? அப்படியென்றால்...” என இழுத்தது ஒரு விதை.
“உங்கள் கேள்விக்கான பதிலை நான் பள்ளி முடிந்து மாலையில் வரும்போது சொல்கிறேன். இப்போதே நேரமாகிவிட்டது” எனக் கெஞ்சும் குரலில் கூறினாள்.
விதைகளும் “சரி” எனத் தலையசைத்து வழி விட்டன.
பள்ளி முடிந்து சாயங்காலம் வீடு திரும்பினாள்.
கண்மணி பள்ளிக்குச் சென்று பாடத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியபின் அந்தப் புளிய விதைகளைப் பற்றிய ஞாபகமே வரவில்லை.
வீட்டுத் தோட்டத்தின் அருகே வந்தபோதுதான், காலையில் கண்ட காட்சி கண் முன்னே வந்தது.
‘அந்தப் பறக்கும் விதைகள்’ எங்கே இருக்கின்றன எனத் தேடத் தொடங்கினாள்.
சற்று நேரத் தேடலுக்குப் பின் அவை மாமரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தாள்.
“விதைகளே, இங்கே இருக்கிறீர்களா?” எனக் குரல் கொடுத்தாள்.
“வாருங்கள் சிறுமியே வாருங்கள். நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்று கூறின விதைகள்.
“சரி, பள்ளிக்கூடம் என்று சொன்னீர்களே, என்ன அது? அங்கு எதற்காகப் போகிறீர்கள்? சொல்லுங்களேன்” எனக் கேட்டது ஒரு விதை.
“ முதலில் நான் ஒன்றும் பெரியவள் இல்லை, சிறுமிதான். என்னை ரொம்ப மரியாதையாகக் கூப்பிட வேண்டாம். என் பெயர் கண்மணி. பெயர் சொல்லிக் கூப்பிட்டாலேயே போதும்” என்றாள் கண்மணி.
“இல்லை கண்மணி அவர்களே. நாங்கள் ஒருமையில் கூப்பிட மாட்டோம். பெரியவர்களோ, சிறியவர்களோ மரியாதையாகக் கூப்பிடுவதுதான் எங்கள் பழக்கம். நாங்கள் அப்படித்தான் கூப்பிடுவோம்” என்றன விதைகள்.
“சரி, அதுவும் நல்ல பழக்கம்தான்” என்றாள் கண்மணி.
“பள்ளிக்கூடம்...” என நிறுத்தியது ஒரு விதை.
“ம்... சொல்கிறேன்”.
“பள்ளிக்கூடம் என்பது கல்விச்சாலை. அங்கே குழந்தைகளுக்கு ஒழுக்கமும், நல்ல கல்வியும் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. நல்ல ஆசிரியர்களைக் கொண்டு நல்ல சிந்தனைகள் சொல்லித்தரப்படுகின்றன. அங்கு பயின்ற பிறகு, குழந்தைகள் சிறந்த மாணவர்களாக உருவாகிறார்கள். நாட்டுக்கும் சிறந்த குடிமகனாக இருப்பார்கள்” என்றாள் கண்மணி.
“ஓ! அப்படியா. அப்படியென்றால் எல்லோரும் பள்ளிக்கூடம் போக வேண்டும் அல்லவா?” என்றது ஒரு விதை.
“ஆமாம். வாழ்வில் நாம் வளம் பெற வேண்டும் என்றால் கல்வி கற்பது அவசியம்” என்றாள் கண்மணி.
“நல்லது. இன்று உங்களால் கல்வியின் அவசியத்தைப் புரிந்துகொண்டோம். ரொம்ப மகிழ்ச்சி” என்றன விதைகள்.
“சரி, நான் விளையாடப் போகிறேன், நீங்களும் விளையாடுகிறீர்களா” என விதைகளைப் பார்த்துக் கேட்டாள் கண்மணி.
“விளையாட்டில் எங்களுக்குத் தெரிந்தது கண்ணாமூச்சி ஒன்றுதான். அதையே விளையாடலாம்” என்றது ஒரு விதை.
“சரி, நான் கண்களைப் பொத்திக்கொள்கிறேன். நீங்கள் மறைந்துகொள்ளுங்கள்” எனக் கூறி கண்களைப் பொத்திக்கொண்டாள் கண்மணி.
விதைகள், ‘எங்கே ஒளிவது’ என இடத்தைத் தேடின.
“மரத்தின் அடியில் ஒளிந்தால் கண்டுபிடித்துவிடுவார். அதனால் மண்ணில் புதைந்து ஒளிந்துகொள்ளலாம்” என்றது ஒரு விதை.
“ஆமாம். அதுதான் சரி” என அனைத்து விதைகளும் ஒன்றோடொன்று முட்டிக்கொள்ளாமல் இடைவெளி விட்டு மண்ணில் குழிதோண்டி தங்களைப் புதைத்துக்கொண்டன.
“பிடிக்க வரலாமா?” எனக் கண்மணி கேட்டுக்கொண்டிருந்தபோதோ, ‘இதோ வந்துவிட்டேன்’ எனக் கூறாமல் திடீரென மழை வந்தது.
மழையைக் கண்டதும், விதைகளையும் விளையாட்டையும் மறந்து வீட்டை நோக்கி ஓடினாள் கண்மணி.
மாலை ஆரம்பித்த மழை, இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது. மறுநாள் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை எனச் செய்திகள் வந்தன. சாலையில் தேங்கிய தண்ணீரால் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தாள் கண்மணி.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, பள்ளிக்குச் செல்லத் தயாரானாள்.
தோட்டத்துத் தெரு முனையில் நண்பர்களைத் தேடினால். யாரையும் காணவில்லை. ஆனால், அந்தச் சாலையில் ஓரத்தில் இடைவெளிவிட்டு அழகழகாய் வளர்ந்திருந்தன புளியஞ்செடிகள்.
அவைகள் பள்ளிச் செல்லும் கண்மணிக்குத் தங்கள் தலையை அசைத்து ‘டாட்டா’ காட்டின.
குழந்தைகளே! நீங்களும் கண்மணி வீட்டுத் தெரு முனைக்குப் போனால் அந்தப் புளியஞ்செடிகளைப் பார்க்கலாம். வருகிறீர்களா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT