Published : 21 Jun 2017 11:14 AM
Last Updated : 21 Jun 2017 11:14 AM

காரணம் ஆயிரம்: எந்தத் திசையில் எடை அதிகம் ?

ஒரே விதமான தோற்றமும் எடையும் கொண்ட மனிதர்கள் எதிர் எதிர்த் திசையில் ஒரே வேகத்தில் நடக்கிறார்கள். ஒருவர் மேற்குத் திசை நோக்கி நடக்கிறார். இன்னொருவர் கிழக்குத் திசை நோக்கி நடக்கிறார். இந்த இருவரில் யாருடைய எடை அதிகமாக இருக்கும் ?

ஒரே எடை கொண்டவர்கள் என்றால் எப்படி எடை மாறுபடும்?

இருவரும் 50 கிலோ எடை கொண்டவர்கள். ஆனால், மேற்குத் திசை நோக்கி நடப்பவர்தான் அதிக எடை கொண்டவராக இருப்பார். பூமியின் சுழற்சிக்கு எதிர்த் திசையில் நடப்பவர் மீது அதிக அழுத்தம் செயல்படுவதால், மேற்கு நோக்கி நடப்பவரின் எடை, கிழக்கு நோக்கி நடப்பவரின் எடையைவிட அதிகமாக இருக்கும்.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. தன்னைத்தானே பூமி நொடிக்கு 460 மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும்போது மேற்கிலிருந்து கிழக்குத் திசையில் சுற்றிக்கொள்கிறது. பூமியின் சுழற்சி திசையிலேயே ஒருவர் நடக்கும்போது தன்னுடைய செயல் ஆற்றலை இழக்கிறார்.

இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மேற்குத் திசையிலிருந்து கிழக்குத் திசை நோக்கி மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறார். இவருக்குப் பக்கவாட்டில் இவர் பயணம் செய்யும் திசையிலேயே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஒரு பேருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வருகிறது. பேருந்து இரு சக்கர வாகனத்தைக் கடக்கும் சில வினாடிப் பொழுதுகளில், இரு சக்கர வாகனத்தைத் தன் திசையில் இழுத்துச் செல்வதைக் கவனத்திருப்பீர்கள்.

பேருந்தின் திசையிலேயே அதைவிட எடை குறைந்த இரு சக்கர வாகனம் பயணிக்கிறபோது அதன் திசை வேகம் அதிகரிக்கிறது. இரு சக்கர வாகனத்தின் செயல்பாடு இல்லாமலேயே அதன் வேகம் அதிகரிக்கிறது. ஏனென்றால், அது பேருந்தின் திசைவேகத்தில் இழுத்துச் செல்லப்படுகிறது. பேருந்து கடந்து செல்லும் சில விநாடிகளில் மட்டும் இரு சக்கர வாகனத்தின் திசைவேகம் மணிக்கு 160 கிலோ மீட்டராக மாறிவிடுகிறது.

சாலையில் காகிதம் அசையாமல் கிடக்கிறது. இப்போது அதன் பக்கவாட்டில் பேருந்து பயணிக்கிறபோது காகிதம் தன் எடை முழுவதையும் இழந்து பேருந்தின் திசையில் பயணிக்கிறது.

அதுபோலத்தான் பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. எனவே, மேற்குத் திசையிலிருந்து, கிழக்கு நோக்கிப் பயணிக்கும் ஒருவர் புவி வட்டப் பாதையின் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறார்.

பூமியின் திசைவேகத்தோடு, நடப்பவரின் திசைவேகமும் சேர்ந்துகொள்கிறது. பூமியின் பயணத் திசையில் நடப்பவர் இழுத்துச் செல்லப்படுகிறார். எனவே, காகிதத்துக்கு நடந்ததுபோல் பூமியின் சுற்றுப் பாதையின் திசையில் நடப்பவர் தன் எடையை இழந்துவிடுகிறார். ஆனால், மிகப் பெரும் பரப்பான பூமியின் சுழற்சி வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை. அதனால் எவ்வளவு எடையை இழக்கிறோம் என்பதையும் உணர முடிவதில்லை.

இதற்கு நேர் மாறாகக் கிழக்கிலிருந்து மேற்காக நடப்பவர் எதிர் திசையில் அதிக அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எதிர் காற்றில் சைக்கிள் மிதிப்பதும், இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதும் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்பவரை எதிர்க் காற்று தடுத்து பயண வேகத்தைக் குறைக்கிறது. எதிர் திசையில் பயணம் செய்பவர் மீது அழுத்தம் அதிகரிக்கிறது. அழுத்தம் அதிகரிக்கும்போது எடையும் அதிகரிக்கும். உயரே செல்லச் செல்ல நம் எடை குறைந்துகொண்டே போகிறது. இதற்குக் காரணம் மேலே செல்லச் செல்லக் காற்றின் அளவு குறைவதுதான்.

காற்று நம் மீது அதிக அழுத்தத்தைச் செலுத்துகிறபோது நம் எடை அதிகரிக்கும். பூமியின் இயக்கத் திசைக்கு எதிராக நாம் பயணிக்கிறபோது அதன் இயக்க விசைக்கு எதிராக நாம் செயல்பட வேண்டியிருக்கிறது. காற்று நம்மை அதிகமாக அழுத்துகிறது. எனவே, எடை அதிகரிக்கிறது. ஒரே மாதிரியான வடிவமும் எடையும் கொண்டிருந்தாலும் எதிர் எதிர்த் திசையில் செல்லும் பேருந்துகள், லாரிகள், ரயில்கள் ஆகியவற்றின் எடை, பூமியின் சுழற்சியால் பாதிக்கப்படுகிறது. திசைவேகத்தைப் பொறுத்தும் இது மாறுதலுக்கு உட்படும்.

எடை, உருவம், தோற்றம் ஒரே மாதிரியாக இருக்கும் இருவர் மணிக்கு 8 கிலோ மீட்டர் கிழக்கு மேற்காக எதிர் எதிர் திசையில் நடக்கும்போது எவ்வளவு எடை வித்தியாசம் இருக்கும் ?

மேற்கிலிருந்து கிழக்காக நடப்பவரைவிட, கிழக்கிலிருந்து மேற்காக நடப்பவரின் எடை ‘2’ கிராம் அதிகமாக இருக்கும்!

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x