Published : 25 Dec 2013 12:00 AM
Last Updated : 25 Dec 2013 12:00 AM
ஒ ரு பெரிய மரத்தோட பொந்துல மைனா ஒண்ணு இருந்தது. அந்த இடம் அதுக்கு ரொம்ப வசதியாவும், பாதுகாப்பாவும் இருந்தது. ஆனால் கோடைக்காலம் தொடங்கினதும் அதுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அக்கம் பக்கத்துல எதுவுமே சாப்பிட கிடைக்கலை.
அதனால பக்கத்து கிராமத்துல இருக்கற கோதுமை வயலில் கிடைக்கற தானியங்களைச் சாப்பிட்டுட்டு அங்கேயே சந்தோஷமா இருந்தது. காலியா இருந்தா மைனாவோட பொந்துல முயல் ஒண்ணு வசிக்க ஆரம்பிச்சது.
கொஞ்ச காலம் கழிச்சி குளிர்காலம் வந்தது. மைனாவால வெட்ட வெளியில குளிரைச் சமாளிக்க முடியலை. அதனால அது தன்னோட பழைய இடத்துக்கே திரும்ப வந்தது. தன்னோட பொந்துல ஒரு முயல் சொகுசா படுத்துட்டு இருந்ததைப் பார்த்து அதுக்கு பயங்கர கோபம் வந்தது.
‘ஏய்! யார் நீ? இங்க எதுக்கு வந்து படுத்துட்டிருக்க? இது என்னோட வீடு! நான் கொஞ்ச காலம் இங்க இல்லைன்னா, உடனே நீ வந்து என் இடத்துல நுழைஞ்சிடுவியா? முதல்ல இடத்தைக் காலி பண்ணு' அப்படின்னு காச்மூச்சுனு கத்த ஆரம்பிச்சிடுச்சு.
‘நீ என்ன பேசறேன்னே எனக்குப் புரியலை. நான் வீடு தேடிக்கிட்டிருந்தப்போ இந்த மரப்பொந்து காலியா இருந்தது. அப்போலேர்ந்து நான் இங்கதான் வசிக்கிறேன். திடீர்னு நீ இது உன் வீடுன்னு சொன்னா நான் ஒப்புக்க மாட்டேன்’ அப்படின்னு முயலும் பதிலுக்குக் கோபமா கத்துச்சு.
ரெண்டுத்துக்குமே இடத்தை விட்டுக் கொடுக்க மனசில்லை. சண்டையும் முடிவுக்கு வர்றதா இல்லை. கடைசில முயல், ‘எனக்கு நதிக்கரைகிட்ட இருக்கற ஒரு பூனைய தெரியும். அதுகிட்ட போயி அட்வைஸ் கேக்கலாம் வா' அப்படின்னு கூப்பிட்டிச்சு.
‘பூனை கிட்டயா! ஐயோ வேண்டவே வேண்டாம்ப்பா! பூனைகளை நம்பக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லிக் குடுத்திருக்காங்க' அப்படின்னு மைனா பயந்து பின்வாங்கியது.
‘அட! அது நீ நினைக்கற மாதிரி இல்லப்பா. அது ரொம்ப புத்திகூர்மையானது. வயசானது. கடவுள் பக்தி அதிகம் அதுக்கு' அப்டி இப்படின்னு முயல் சொல்லிச்சு.
ஒரு வழியா மைனாவும் சம்மதிச்சுது. ரெண்டும் கிளம்பி பூனையோட இடத்துக்குப் போச்சுங்க. அதுங்க வர்றதை தூரத்திலேயே பார்த்துட்ட பூனை தியானம் செய்யற மாதிரி நடிச்சுது.
சத்தம் கேட்டு அப்பதான் கண்ணை விழிக்கிற மாதிரி நடிச்சிக்கிட்டே ‘வாங்க., வாங்க. உங்களுக்கு நான் என்ன உதவி செய்யட்டும்' அப்படின்னு ரொம்ப கனிவா கேட்டுச்சு.
அதுங்க ரெண்டும் தங்களோட பிரச்சினையைச் சொல்ல ஆரம்பிச்சுதுங்க.
பூனையோ, ‘கண்ணுங்களா, நீங்க பேசறது என் காதுலேயே விழலை. கண்ணும் சரியா தெரியலை. கொஞ்சம் கிட்ட வந்து பேசுங்களேன்' அப்டின்னு சொல்லுச்சு.
மைனாவும், முயலும் கிட்ட வந்ததுதான் தாமதம். அதுங்க ரெண்டுத்தையும் அடிச்சுக் கொன்னு தனக்கு உணவா ஆக்கிக்கிச்சு அந்த ஞானப் பூனை.
ஒருத்தர் என்னதான் வெளித்தோற்றத்தை மாத்திக்கிட்டாலும் அவங்களோட அடிப்படை குணம் மாறாதுன்னு பாவம் அந்த மைனாவுக்கும் முயலுக்கும் தெரியாமப் போச்சு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment