Last Updated : 06 Nov, 2013 03:01 PM

 

Published : 06 Nov 2013 03:01 PM
Last Updated : 06 Nov 2013 03:01 PM

வால் நட்சத்திரத்தைப் பார்க்கலாமா?

200 வருடங்கள் கழித்துத் தோன்ற இருக்கிற வால்நட்சத்திரத்தை, உபகரணங்கள் ஏதும் இன்றி நம் கண்களாலேயே கண்டு ரசிக்கலாம். அந்த வால்நட்சத்திரத்தின் பெயர் ‘ஐசான்’.

விண்வெளியில் பல வருடங்களுக்கு ஒரு முறை தெரிபவை வால்நட்சத்திரங்கள். கிரேக்கத்தில் இதை ‘கோமெட்டா’ என்றனர். அப்படியென்றால் நீண்ட முடி உடையது என்று பொருள். பின்னர் காமெட் என்றானது. ஒளிவீசும் விண்மீனில் நீண்டு வால் போல் இருக்கும் பகுதியே இப்பெயருக்குக் காரணம்.

ஆரம்ப காலத்தில் இதன் நீண்ட பகுதி பனிக்கட்டியாலும் தூசியாலும் ஆனது என நம்பப்பட்டது. உண்மையில் வால்நட்சத்திரம் வேகமாகப் பயணம் செய்யும்போது சூரிய வெப்பத்தால் அதிலிருக்கும் பனிக்கட்டி உருகி நீரும் தேவையற்ற பொருள்கள் எரிந்த புகையும் வெளியாகும். இவை இரண்டும் சேர்ந்து வால் போல இருக்கும். பொதுவாக வால்நட்சத்திரம் ஒழுங்கற்ற அமைப்புடன்தான் இருக்கும். சூடான சூரிய மண்டலத்தின் உள் வட்டத்துக்குள் வந்த பின்னர் வால் முளைக்கும். அப்போது பிரகாசமாகத் தெரியும். அவை சூரியனை நெருங்க, நெருங்க வாலின் நீளமும் நீண்டுகொண்டே போகும். அதன் நீளம் பல லட்சம் கிலோமீட்டர்வரை இருக்கும். இவை தங்கள் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு அருகில் வந்த பின்னர் மிகத் தொலைவில் சென்று மறையும். அதில் ஒன்றுதான் நாம் பார்க்க இருக்கும் ஐசான் வால்நட்சத்திரம். ஐசானின் வயது என்ன தெரியுமா? சுமார் 460 கோடி ஆண்டுகள் என்று கணித்திருக்கிறார்கள். சூரியன் தோன்றியபோது இதுவும் தோன்றியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அப்போது பிறந்த வால்நட்சத்திரம்தான் இப்போது நம்மை முதல்முறையாகப் பார்க்க வருகிறது!

ஐசான் வால் நட்சத்திரம் ரொம்பப் பெரியது. இதன் வாலின் நீளம் மட்டும் 3 லட்சம் கி.மீ. அகலம் 5 லட்சம் கி.மீ.

சூரியனை உரசிச் செல்லும்போது ஐசான், சிதறிப் போகலாம். அப்படி ஏதும் நடக்காவிட்டால், இந்த நூற்றாண்டின் பிரகாசமான வால்நட்சத்திரம் இதுதான்.

ஐசான் வால்நட்சத்திரத்தைக் கிழக்கு வானில் அதிகாலையில் சூரியன் உதயமாவதற்கு முன் பார்க்கலாம்.

நவம்பர் இரண்டாவது வாரம் வரை ஐசான், புதன் கோள் அருகே வரும். அப்போது தொலைநோக்கி அல்லது பைனாகுலர் உதவியுடன் பார்க்கலாம்.

நவம்பர் 3ஆவது வாரம் முதல் அதிகாலை கிழக்கு அடிவானில் சூரியன் உதயம் ஆவதற்கு முன் இதை வெறும் கண்ணால் பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்ப்பது ஆபத்து இல்லை.

நவம்பர் 29ஆம் தேதி மாலை மேற்கு அடிவானில் மிகவும் பிரகாசமாகத் தெரியும். அப்போது வெறும் கண்ணால் நன்றாகப் பார்க்கலாம்.

டிசம்பர் முதல் ஒருவேளை வால் நீண்டு இருந்தால் ஜனவரி முதல் வாரம் வரை முழு இரவிலும் நன்றாகத் தெரியும் என்று புதுவை அறிவியல் கழகத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். அனைவரும் ஐசானைப் பார்க்கத் தயாராவோமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x