Published : 01 Feb 2017 10:28 AM
Last Updated : 01 Feb 2017 10:28 AM
பொதுவாக எல்லா விளையாட்டுகளும் ஒரே மாதிரி இருப்பது போலவே தோன்றும். ஆனால், ஒரு சில விளையாட்டுகளில் இஷ்டப்படி விளையாட வாய்ப்புகள் அமையவும் செய்யும். அதாவது, விளையாடும் குழந்தைகளின் மனநிலைக்கேற்ப புதிதுபுதிதாகக் கற்பனைகளைச் சேர்த்து விளையாட வாய்ப்பிருக்கும். அப்படியான விளையாட்டுகள் ரொம்ப குறைவுதான். ஆனாலும், விளையாட நல்ல உற்சாகத்தை இதுபோன்ற விளையாட்டுகள் தரும்.
அப்படியான ஒரு விளையாட்டைத்தான் இந்த வாரம் விளையாடப் போகிறோம். அந்த விளையாட்டின் பெயரைத் தெரிந்துகொள்ள ஆசையா? ‘தலைவனைக் கண்டுபிடி’. அதுதான் அந்த விளையாட்டின் பெயர்.
30 குழந்தைகள் வரை இந்த விளையாட்டைச் சேர்ந்து விளையாடலாம்.
இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பாக, முதல் போட்டியாளர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வழக்கம்போல் ‘சாட், பூட், திரி…’ முறையில் முதல் போட்டியாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
விளையாட்டில் பங்கேற்கும் எல்லாக் குழந்தைகளும் பெரிய வட்டமாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
பிறகு, முதல் போட்டியாளர் விளையாடும் இடத்திலிருந்து கொஞ்சம் தூரமாகத் தள்ளிப் போய் நின்று, இரு கண்களையும் பொத்திக்கொள்ளவும்.
முதல் போட்டியாளருக்குத் தெரியாத வகையில், வட்டத்திலிருக்கும் குழந்தைகளில் யாராவது ஒருவரைக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அப்படி ஒருவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, விளையாட்டை ஆரம்பிக்கலாம்.
குழுத் தலைவர் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே ஏதாவது ஒரு செயலைச் செய்ய வேண்டும். உதாரணமாக, கையைத் தட்டுவது, காலில் தட்டுவது, தலையைச் சொறிவது என இப்படியாகக் குழுத் தலைவரின் கற்பனைக்கேற்ப ஏதாவது ஒன்றைச் செய்யலாம்.
குழுத் தலைவர் செய்வதைப் பார்த்து, வட்டத்திலிருக்கும் எல்லோரும் அப்படியே செய்யுங்கள்.
இப்போது முதல் போட்டியாளர் வட்டத்தின் உள்ளே வந்துவிட வேண்டும். ஒரே இடத்தில் நிற்காமல் வட்டத்துக்குள் முதல் போட்டியாளர் சுற்றிச்சுற்றி வர வேண்டும்.
இரண்டு, மூன்று நிமிடங்களுக்குள் குழுத் தலைவர் தனது செயலை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். குழுத் தலைவர் அடிக்கடி மாற்றிச் செய்யும் செயலை, வட்டத்திலுள்ளவர்களும் கவனித்து மாற்றி செய்யுங்கள்.
வட்டத்தில் இருப்பவர்களில் யார் குழுத் தலைவர் என்பதைக் கண்டறிவதுதான் போட்டியாளரின் வேலையே. யாரைப் பார்த்து அடிக்கடி செயலை மாற்றுகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்துச் சரியாகச் சொல்ல வேண்டும்.
வட்டத்தில் இருப்பவர்களும் நேரடியாகக் குழுத் தலைவரைப் பார்க்காத மாதிரி, வேறெங்கோ பார்த்தபடி செயலைச் செய்ய வேண்டும்.
போட்டியாளருக்கு மூன்று வாய்ப்புகள் தரப்படும். அதற்குள் அவர் யார் குழுவின் தலைவர் என்பதைச் சரியாக அடையாளம் காட்ட வேண்டும். அப்படிக் காட்டிவிட்டால், குழுத் தலைவர் போட்டியாளராக மாறி விளையாடலாம்.
மூன்று வாய்ப்பிலும் குழுத் தலைவரை அடையாளங்காட்டத் தவறினால், போட்டியாளர் ‘அவுட்’.
வட்டத்தில் இருப்பவர்கள் பாடுகிற ஒரு பாடலுக்கு அவர் ஆட வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் ஏதாவது ஒன்றைச் செய்து காட்ட வேண்டும்.
படிக்கவே ரொம்ப ஆர்வமாக இருக்கிறது அல்லவா? விளையாடிப் பார்ப்போமே!
(இன்னும் விளையாடலாம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT