Published : 06 Jul 2016 11:58 AM
Last Updated : 06 Jul 2016 11:58 AM
காட்டுக்குள் சுற்றித் திரிந்துகொண்டிருந்த குட்டி யானை குல்லூ, எதேச்சையாக ஒரு காட்சியைப் பார்த்தது. அந்தக் காட்சி குல்லூவுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு பெரிய ஆண் யானைகளைச் சில மனிதர்கள் அடிமைபோல நடத்தினார்கள். அந்த இரண்டு யானைகளில் ஒன்று, வெட்டப்பட்ட பெரிய மரங்களை இழுத்துச் சென்றுகொண்டிருந்தது. இன்னொரு யானை, ஒரு பெரிய பாறாங்கல்லை இழுத்துக்கொண்டிருந்தது.
இதைப் பார்த்ததும் குல்லூவுக்கு வருத்தமாக இருந்தது. இன்னொரு புறம் ஆச்சரியமாக இருந்தது. ‘யானைகளின் முன்னே மனிதர்கள் சிறிய உருவத்துடன் இருக்கிறார்கள். ஆனாலும், யானைகளை அடக்கிவைத்திருக்கிறார்களே! கூடவே யானைகளைக் கொடுமைப்படுத்துகிறார்களே’ என நினைத்தது.
எப்படியாவது இந்த யானைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தது குல்லூ. ஆனாலும், குட்டி யானையான தன்னால் பெரிய யானைகளைக் காப்பாற்ற முடியுமா? எனச் சந்தேகமும் அதற்கு வந்தது.
அப்போதுதான் காட்டிலுள்ள தாத்தா யானையான முத்தப்பனின் ஞாபகம் வந்தது. முத்தப்பன் யானை அறிவும் அனுபவமும் கொண்டது. காட்டிலுள்ள பல விலங்குகள் முத்தப்பன் யானையிடம்தான் பிரச்சினைகளைத் தீர்க்க வழிகளைக் கேட்கும்.‘மனிதர்களிடம் மாட்டிக்கொண்ட இரண்டு யானைகளைக் காப்பாற்றத் தாத்தா யானையிடம் கேட்டால் என்ன?’ என்று நினைத்த குல்லூ, நேராக முத்தப்பனிடம் வந்தது.
“தாத்தா! இன்று நான் மலைப் பகுதிக்குப் போனேன். அங்கே இரண்டு யானை அண்ணன்களின் கால்களைச் சங்கிலியால் கட்டிவைத்திருந்தனர். அவர்களை மரங்களையும் பாறாங்கற்களையும் இழுத்துச் செல்லவைத்துக் கொடுமைப்படுத்தினார்கள். அந்த அண்ணன்களைக் காப்பாற்ற யோசனை சொல்லுங்கள்” என்று கேட்டது குல்லூ.
உடனே முத்தப்பன் யானை, “குல்லூ! நீ பார்த்த இரண்டு ஆண் யானைகளும் உன்னைப் போல குட்டியாக இருந்தபோதே மனிதர்களிடம் சிக்கிக்கொண்டன. எனக்கு அது நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த இரண்டு யானைகளைக் காப்பாற்ற வழி இருக்கிறது. ஆனால், எனக்கு வயதாகிவிட்டதால் மனிதர்களிடம் நெருங்க முடியாது. நான் சொல்வது போல நீ நடந்தால், யானை அண்ணன்களை உன்னால் காப்பாற்ற முடியும்” என்று சொன்னது.
“என்ன செய்ய வேண்டும் தாத்தா? அந்த அண்ணன்களைக் காப்பாற்ற நான் தயார்” என்று சொன்னது குல்லூ. முத்தப்பன் யானை குல்லூவின் காதில் அந்த ரகசியத்தைச் சொன்னது.
மறு நாள் மதியம், குல்லூ முந்தைய நாள் ஆண் யானைகளைப் பார்த்த அதே இடத்துக்குப் போனது. கொஞ்ச நேரத்தில் அதே மனிதர்கள் அதே யானைகளைக்கொண்டு மரங்களை இழுத்துவந்தார்கள். அவர்கள் அங்கு நின்றுகொண்டிருந்த குல்லூவைப் பார்த்தார்கள்.
“அதோ ஒரு குட்டி யானை நிற்கிறது. அதைப் பிடி!” என்று அவர்களில் ஒருவர் சொல்ல, அங்கிருந்தவர்கள் குல்லூவைப் பிடிக்க வந்தார்கள். குல்லூவும் அங்குமிங்கும் ஓடுவதுபோலப் பாசாங்கு காட்டி, கடைசியில் வேண்டுமென்றே அவர்களிடம் மாட்டிக்கொண்டது.
அந்த மனிதர்கள் ஒரு சங்கிலியால் குல்லூவைக் கட்டி, இழுத்துச் சென்றார்கள். குல்லூவும் பிடிவாதம் செய்யாமல் அவர்களுடன் நடந்து சென்றது. சாயங்காலத்தில் அந்த மனிதர்கள் இரண்டு யானைகளையும், குல்லுவையும் ஒரு பெரிய கொட்டகையில் அடைத்து வைத்துவிட்டு, சென்றுவிட்டார்கள்.
அதுவரை பேசாமல் இருந்த குட்டி யானை குல்லூ, பெரிய யானைகளிடம் பேச்சு கொடுத்தது. “அண்ணா! நீங்கள் இருவரும் பெரிய உருவத்துடன் இருக்கிறீர்கள். இந்தச் சிறிய மனிதர்களிடம் அடிமையாக இருக்கிறீர்களே. அவர்கள் மரங்களை வெட்டி, மலைகளை உடைத்துக் காட்டை அழிக்கிறார்கள். நீங்களும் அவர்களுக்கு உதவியாக இருக்கிறீர்களே?” -என்று கேட்டது.
“என்ன செய்வது? எங்களை இவர்கள் சங்கிலியால் கட்டிப் போட்டுவிட்டு வேலை வாங்குகிறார்களே!” என்று வருத்தமாகச் சொன்னது ஒரு யானை.
“இந்தச் சங்கிலியை உடைக்க நீங்கள் முயற்சி செய்யவில்லையா?” என்று பதிலுக்குக் கேட்டது குல்லூ.
“ஆரம்பத்தில் முயற்சி செய்தோம். சங்கிலியை உடைக்க முடியவில்லை!” என்று கூறின அந்த யானைகள். அதைக் கேட்ட குல்லூ சிரித்தது.
“அண்ணன்மார்களே! சின்ன வயதில் உங்களால் சங்கிலியை உடைக்க முடியாமல் போயிருக்கலாம். நீங்கள்தான் வளர்ந்துவிட்டீர்களே. பெரிய மரங்களை இழுத்து வரும் அளவுக்குப் பலசாலியாக இருக்கிறீர்களே. இந்தச் சின்னச் சங்கிலியை உங்களால் உடைக்க முடியாதா?” என்று கேட்டது குல்லூ.
“ஓ… எங்களால் இந்தச் சங்கிலியை உடைக்க முடியுமா?” பெரிய யானைகள் குல்லூவிடம் கேட்டன.
“சின்ன வயதில் சங்கிலியை உடைக்க முடியாமல் போனதால், எப்போதும் உடைக்கவே முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிட்டது. நீங்கள் வளர்ந்த பிறகும் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இந்த உண்மையைச் சொல்லவே நானே வந்து இந்த மனிதர்களிடம் மாட்டிக்கொண்டேன். என்னைக் கட்டி வைத்திருக்கும் அதே சங்கிலியால்தான் உங்களையும் கட்டி வைத்திருக்கிறார்கள். என் உருவத்தோடு உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். சரி, இனியும் நேரத்தை வீணாக்க வேண்டாம். உங்கள் சங்கிலிகளை முதலில் நீங்கள் அறுத்தெறியுங்கள். பிறகு என்னைக் கட்டிப் போட்டிருக்கும் சங்கிலியையும் அறுத்தெறியுங்கள். விடிவதற்குள் தப்பிச் சென்று காட்டுக்குள் சுதந்திரமாக வாழலாம்!” என்றது குல்லூ.
குல்லூ சொன்னதைக் கேட்டதும், பெரிய யானைகளுக்கு உண்மை புரிந்தது.
மறு நிமிடமே அந்த இரு யானைகளும் தங்கள் பலத்தைக் காட்டிச் சங்கிலியை இழுத்தன. சில முயற்சிகளிலேயே சங்கிலி உடைந்தது. பிறகு அவை குல்லூவைக் கட்டியிருந்த சங்கிலியை உடைத்தன. மூன்று யானைகளும் அங்கிருந்து தப்பிக் காட்டுக்குள் ஓடி மறைந்தன.
முத்தப்பன் யானையின் அறிவாலும், குல்லூவின் துணிச்சலாலும், மனிதர்களிடமிருந்து இரண்டு யானைகளுக்கும் விடுதலை கிடைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT