Published : 05 Mar 2014 12:00 AM
Last Updated : 05 Mar 2014 12:00 AM
சூரியன், வெள்ளையாய் மெத்து மெத்தென்று தோசைமாவு போல கடலை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தது. கடல் அலைகள் அந்த ஒளியில் தகதகவென மின்னிக்கொண்டே வந்து அவளைத் தொட்டுச் சென்றன. அந்த அலைகளையே மகிழ்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் நீலா. சில்லென்ற அலை வந்து அவள் பாதம் தொடும்போது அவள் சிலிர்த்தாள். சிரித்துக்கொண்டாள்.
மின்னி அவளிடம் ஓடிவந்து “ஏய் நீலா, அங்க பாரு கடல் நண்டுங்க எவ்வளோ கொழு கொழுன்னு” எனக் காட்டினாள்.
அந்த விடியற்காலையில் நண்டுகள் சிறியதும் பெரியதுமாகக் கடற்கரையில் நடமாடின. ஏதோ பள்ளிக்குச் செல்லத் தயாராவது மாதிரி சுறுசுறுப்பாக வளை விட்டு வளை போய்க்கொண்டிருந்தன.
“மின்னி! இந்த சனி ஞாயிறை கண்டுபிடிச்சது யாரு தெரியுமா?” எனக் கேட்டாள் நீலா.
“நிச்சயமா அது நம்மள மாதிரி ஸ்கூல் படிக்கிற ஸ்டூடண்டாதான் இருக்கும்” எனச் சிரித்துக்கொண்டே சொன்னாள் மின்னி.
சத்தமாய் சிரித்தாள் நீலா.
மின்னி நீலாவின் ரகசியத் தோழி. அவள் நீலாவின் கண்ணுக்கு மட்டுமே தெரிவாள். நீலா தனியாக இருக்கும்போது மின்னி பறந்து வந்து அவளோடு விளையாடிவிட்டு, வாயாடிவிட்டு மறைவாள்.
இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை என்பதால் யாரும் எழுப்பாமலே விடியற்காலையில் எழுந்துவிட்டாள். தன் தொப்பையைக் குறைக்கக் கடற்கரையில் நடக்க வந்திருக்கும் தாத்தாவோடு வந்துவிட்டாள். தாத்தா நடந்துகொண்டிருந்தார், இன்னும் சில தாத்தாக்களோடு.
நீலாவும் மின்னியும் அலைகளோடு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
கடல் மிகப் பெரிய ஒரு மாயக் கம்பளம் போல ஜொலித்துக்கொண்டிருந்தது. கடல் பற்றிய எல்லாமே நீலாவுக்கு பிடிக்கும்.
கோடி கோடியாய் அதற்குள் வாழும் மீன்கள், டால்பின்கள், ஆமைகள், திமிங்கிலங்கள், அதன் மேலே அசைந்து செல்லும் படகுகள், கப்பல்கள், அதனுடைய உப்புச் சுவை, அலைகள் கரையில் விட்டுப் போகும் சிப்பிகள், கடலின் சத்தத்தை அடைத்து வைத்திருக்கும் வெள்ளை வெளேர் சங்குகள் எல்லாமே அவளுக்குப் பிடிக்கும்.
கடலில் நின்றுவிட்டுச் சென்றால் வீடுவரைக்கும் வரும் மணலும் கடல் வாசனையும் பிடிக்கும்.
அப்புறம் அது தன் பேரைப் போலவே நீலமாக இருப்பதும் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
நீலாவும் மின்னியும் மணலில் ஒரு பட்டாம்பூச்சி செய்தார்கள். மின்னி சிப்பிகளைப் பொறுக்கி வந்து அதன் இறக்கைகளில் பதித்தாள்.
“இப்போ தண்ணி வந்து இது மேல அடிச்சா இது ‘பட்டர் ஃபிஷ்’ஷா மாறி நீந்திப் போயிடும்” என்றாள் நீலா.
“இல்ல அலை தண்ணி கிட்ட வந்தா அப்படியே பறந்து போயிடும்” என்றாள் மின்னி.
“ஆனா மின்னி, இந்த பூமியில கடல் எவ்ளோ? நாமெல்லாம் இருக்க நிலம் எவ்ளோன்னு உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டாள் நீலா.
மின்னி ஓடி ஓடிச் சிப்பிகள் பொறுக்கிக்கொண்டிருந்தாள்.
“எழுபது பர்சண்ட் கடல்தான். முப்பது பர்சண்ட்தான் எல்லா நாடும் சேர்ந்து” எனக் கத்திச் சொன்னாள் நீலா.
“கடல்தான் இந்த பூமியோட ஏர் கண்டிஷனர் தெரியுமா? கடல்தான் நம்ம உலகத்தோட குளிரையும் வெயிலையும் கட்டுப்படுத்துது.”
மின்னி ஓடி வந்தாள். நீலாவின் கையைப் பிடித்து அவளை இழுத்துப் போய் அலைகளில் நின்றாள். கையால் கொஞ்சம் கடல் நீரை அள்ளி நீலாவின் கையில் ஊற்றினாள். “இத்தனாம் பெரிய இந்தக் கடலை, நாம இங்கிருந்தே தொட்டுடலாம். கையிலயும் வாரிக்கலாம்” என்றாள்.
இருவரும் நீரைக் கைகளால் அளைந்து விளையாடினர்.
தாத்தா வந்து அவளைக் கூப்பிட்டார். அவள் தன் கடலுக்கு டாடா காட்டிவிட்டு ஓடி அவர் கையைப் பிடித்துக்கொண்டாள். மின்னி தன் சிறகுகளை விரித்து, “வீட்டில் பார்க்கலாம்” எனக் கண் சிமிட்டிவிட்டுப் பறந்து போனாள்.
வீட்டிற்குள் நுழைந்ததும், அம்மா அவளைக் கால்களை கழுவச் சொல்லிக் கத்துவதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், நீலா ஓடிப் போய் தன்னுடைய அலமாரியில் வைத்திருக்கும் தன் பொக்கிஷப் பெட்டியைத் திறந்தாள்.
அதில் தான் பொறுக்கிய அழகான மூன்று சிப்பிகளையும், தன் பாக்கெட்டில் தங்கியிருந்த மணலையும் சுரண்டி எடுத்து உள்ளே வைத்தாள். அவள் போகும் இடங்களின் நினைவாக அவளுக்கு பிடித்ததை எல்லாம் இந்தப் பெட்டியில்தான் நீலா வைப்பாள். இது அவள் பாட்டி, அவளுக்குக் கொடுத்த பொக்கிஷப் பெட்டி.
மிகவும் பிடித்தது, அருமையானது, மதிப்பானது எல்லாமே பொக்கிஷம்தான் என்று அவள் பாட்டி சொல்லுவாள்.
நீலாவுக்குக் கடலையே கொஞ்சம் பிய்த்து உள்ளே வைத்துக்கொள்ள ஆசைதான்.
“ஆச தோச அப்பள வட. அது எழுபது பர்சண்ட் கடல்” என்று சொல்லிக்கொண்டே பறந்து உள்ளே வந்தாள் மின்னி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT