Last Updated : 19 Apr, 2017 10:47 AM

 

Published : 19 Apr 2017 10:47 AM
Last Updated : 19 Apr 2017 10:47 AM

தினுசு தினுசா விளையாட்டு: சங்கிலிக் கட்டு!

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான தனித்திறன் நிச்சயம் உண்டு. எல்லாக் குழந்தைகளும் சேர்ந்து விளையாடும்போது, தனது தனித்திறனை வெளிப்படுத்த வேண்டும். இதையெல்லாம் விளையாடும்போது குழந்தைகளுக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. ஆனாலும், விளையாடும் போக்கிலேயே குழந்தைகள் இயல்பாய் இவற்றை அறிந்துகொள்கிறார்கள். அனைவரையும் அரவணைத்து, சேர்ந்து விளையாடி மகிழ்கிறார்கள்.

இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டின் பெயர் ‘சங்கிலிக் கட்டு’. இந்த விளையாட்டில் குழந்தையின் தனித் திறனும் வெளிப்படும். மற்ற குழந்தைகளையும் ஒன்றாக ஒருங்கிணைத்துச் செல்வதும் நடக்கும். எல்லாக் குழந்தைகளும் சேர்ந்து ஒத்துழைத்தால் மட்டுமே, இந்த விளையாட்டை ஆட முடியும்.

இருபால் குழந்தைகளும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. இருபது முதல் முப்பது குழந்தைகள் வரை சேர்ந்து விளையாடலாம். இந்த விளையாட்டை விளையாடுவதற்கான மைதானம், இடையே தடுப்புகள் ஏதுமற்ற பரந்த வெளியாக இருப்பது அவசியம்.

சரி, விளையாட்டைத் தொடங்குவோமா?

# விளையாட்டில் பங்கேற்கும் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து, ‘சாட், பூட், திரி…’ போடுங்கள். பிறகு விளையாட்டுக்கான முதல் போட்டியாளரைத் தேர்வு செய்யுங்கள்.

# விளையாடும் மைதானத்தின் ஏதாவது ஒரு மூலையில், முதல் போட்டியாளர் மட்டும் நில்லுங்கள். மற்றவர்கள் மைதானத்தின் பல பகுதிகளிலும் கலைந்து நிற்பார்கள்.

“சங்கிலிக்காரன் விரட்டி வாரான், மாட்டைப் புடிச்சு உள்ளே கட்டு..!” என்று எல்லாக் குழந்தைகளும் ஒன்றாக குரல் எழுப்புவார்கள். உடனே, முதல் போட்டியாளர் அவர்களைத் துரத்திச் செல்வார்.

# முதல் போட்டியாளர் யாரைத் தொடுகிறாரோ, அந்தப் போட்டியாளர் முதல் போட்டியாளரின் இடது கையோடு தனது வலது கையைச் சங்கிலிபோல் பின்னிக்கொள்ள வேண்டும்.

# இப்போது இருவரும் சேர்ந்து மற்றவர்களைத் துரத்திச் சென்று தொடுங்கள். இருவரும் யாரையாவது ஒருவரை இலக்காக வைத்து, ஒரே நோக்கில் துரத்திச்சென்று தொடுங்கள்.

# இவர்கள் யாரையெல்லாம் தொடுகிறார்களோ, அவர்கள் அனைவரும் இவர்களோடு சேர்ந்து சங்கிலிபோல் கைகளைப் பின்னிக்கொள்ள வேண்டும்.

# இப்படியாக, தொடப்பட்டவர்கள் அனைவரும் நீண்ட சங்கிலிபோல் விரட்டிச் சென்று, மற்றவர்களைத் தொடுங்கள். சங்கிலிப் பின்னலின் முதலிலும் கடைசியிலும் இருப்பவர் தொட்டால் மட்டுமே மற்றவர்கள் ‘அவுட்’. இடையில் இருப்பவர்கள் தொட்டால் ‘அவுட்’இல்லை.

# துரத்திச் செல்லும்போது, சங்கிலிப் பின்னல் அறுந்துவிடக் கூடாது. யாரும் தடுமாறி கீழே விழவும் கூடாது. அதே நேரத்தில்,அனைவரும் யாரையாவது குறி வைத்து ஒரே இலக்கோடு துரத்திச் சென்றால், சுற்றி வளைத்து சுலபமாகத் தொட்டு விடலாம்.

# கடைசிவரையில் ‘அவுட்’ ஆகாமல் யார் தப்பிக்கிறாரோ, அவரே இந்தப் போட்டியின் வெற்றியாளர்.

# அனைவரும் ஒன்றாக கைகளைக் கோர்த்து துரத்திச் செல்வதைப் பார்க்கையில், வானில் பறவைக்கூட்டம் ஒன்றாகச் சேர்ந்து பறப்பது போல் இருக்கும்.

‘சங்கிலிக் கட்டு’ விளையாட்டை ஒருமுறை விளையாடிப் பாருங்கள். அடுத்த முறையும் அதையே விளையாட நீங்கள் முன்னுரிமை தருவீர்கள்.

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x