Published : 21 Sep 2016 10:58 AM
Last Updated : 21 Sep 2016 10:58 AM
“குழந்தைகளே, பள்ளிக்கூடம் போயிட்டு, இப்பத்தானே வந்தீங்க? அதுக்குள்ளே எங்க அவசரமா கிளம்பிப் போறீங்க?”
ஓ… டியூஷனுக்கா? அங்கப் போயிட்டு வீட்டுக்கு வர ராத்திரி ஆயிடுமே. அப்போ எப்பத்தான் விளையாடுவீங்க? என்ன பதிலையே காணோம்? நல்லவேளை ‘விளையாட்டுன்னா என்ன?’ன்னு நீங்க யாரும் கேக்கலை. அந்த வரைக்கும் சந்தோஷம். ஆனா ஒண்ணு, விளையாட்டுன்னாலே வீடியோ கேம்ஸ், கிரிக்கெட் மட்டும்தான்னு நினைச்சிடாதீங்க. தமிழ்நாட்டுலே உங்களைப் போன்ற குட்டிப் பசங்க விளையாட நிறைய நிறைய விளையாட்டுகள் இருக்கு. உங்க தாத்தா, பாட்டி, அப்பா, அம்மால்லாம் சின்னப் பசங்களா இருந்தப்ப என்ன விளையாடினாங்கன்னு கேட்டுப் பாருங்க.
அவங்க சின்னப் பிள்ளைகளா இருந்தப்போ, பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் தினமும் விளையாடியிருப்பாங்க. அப்புறமா கொஞ்ச நேரம் படிச்சிருப்பாங்க. இப்பத்தான் உங்களுக்கு விளையாடவே நேரமில்லாமப் போச்சு! பள்ளிக்கூடங்கள்ல ‘பி.டி. பீரியடு’ன்னு ஒண்ணு இருக்கு இல்லையா? அப்போல்லாம் இந்தப் பீரியடு வந்தா பசங்கல்லாம் பள்ளி மைதானத்திலேயேதான் உருண்டு புரளுவாங்க. ஆனா இப்பத்தான், படிப்பைத் தவிர வேறெதுக்கும் நேரமே இல்லையே!
இந்த நேரத்துல மகாகவி பாரதியார் எழுதிய பாட்டு ஒண்ணு ஞாபகத்துக்கு வருது. நீங்களும் படிச்சிருப்பீங்க.
‘ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா…
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா…’
காலையிலே படிக்கணும்னு சொல்லியிருக்கிற பாரதிதான், மாலையில குழந்தைகளை விளையாடவும் சொல்றார். ஏன் தெரியுமா குழந்தைகளே? விளையாடுறதுங்கிறது வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்லை. விளையாடுறதுனாலே நம்ம உடலுக்கும் மனசுக்கும் புத்துணர்ச்சி கிடைக்குது. பலரோடு சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மூலமா, நம் அறிவுக்கும் உடலுக்கும் பல்வகைப் பயிற்சிகள் யாரும் சொல்லித் தராமலேயே கிடைக்குது.
நகரங்கள்ல மட்டுமில்ல; இப்பெல்லாம் கிராமங்கள்லேயும் குழந்தைகள் விளையாடுறது குறைஞ்சு போச்சு. அப்போதெல்லாம் தெருக்கள்ல குட்டிப் பசங்க கூடிக்கூடி விளையாடுவாங்க. ஒவ்வொரு விளையாட்டும் ஜாலியாவும் உடலுக்குப் புத்துணர்ச்சி தர்றதாகவும் இருக்கும். அந்தக் கால குட்டிப் பசங்க விளையாடின விளையாட்டை எல்லாம் நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா? இனி ஒவ்வொரு வாரமும் அந்த விளையாட்டுகளத்தான் நாம பார்க்கப் போறோம்.
இதை வாசிக்கிறதோட நிறுத்திடாதீங்க. கொஞ்சமாச்சும் நேரம் ஒதுக்கி, உங்க கூட்டாளிகளோடு சேர்ந்து இந்த விளையாட்டுகள விளையாடணும்.
இனி, வாரா வாரம் புதுசு புதுசா விளையாடுவோமா?
(அடுத்த வாரம்: கிச்சுக் கிச்சுத் தாம்பூலம்)
வாசகர்களே, அந்தக் காலச் சிறுவர், சிறுமிகள் விளையாட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறு ஏதாவது பெயரில், இன்னும் சில மாறுதல்களுடன் சேர்ந்து விளையாடப்பட்டிருக்கலாம். அதிலுள்ள சிறப்பான அம்சங்களை எங்களுக்குக் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். நீங்கள் எழுதும் அம்சங்கள் ‘மாயா பஜாரி’ல் இடம்பெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT