Published : 10 Aug 2016 11:12 AM
Last Updated : 10 Aug 2016 11:12 AM
ரியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இந்த நேரத்தில், பிரேசில் நாட்டைப் பற்றியும் ரியோ டி ஜெனிரோ நகரத்தைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்துகொள்வோமா?
ரியோ பெருமைகள்
# பிரேசில் தமிழகத்தைப் போல 65 மடங்கு பெரியது. மிக முக்கியமான வளரும் நாடு.
# தன்னுடைய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களைக் காட்டிலும் ரியோ மிகவும் அற்புதமானது' என்று பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வின் ரியோ டி ஜெனிரோ பற்றிக் கூறியுள்ளார்.
# ரியோவில் 90 கிலோ மீட்டர் நீளத்துக்குக் கடற்கரை இருக்கிறது. சார்லஸ் டார்வின் ரியோவைப் பற்றிக் கூறியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
# 1815 முதல் 1821 வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்துள்ள ரியோ, போர்ச்சுகல் நாட்டுக்கும் தலைநகராக இருந்திருக்கிறது. போர்த்துகீசிய இளவரசர் ஆறாம் ஜான் தாய்நாட்டிலிருந்து தப்பி, தன் அதிகார வர்க்கத்தினருடன் ரியோவில் குடியேறியதே இதற்குக் காரணம்.
# பூமிப்பந்தின் மேற்பகுதியை வடக்கு அரைக்கோளம், கீழ்பகுதியை தெற்கு அரைக்கோளம் என்று பிரித்தால், தெற்கு அரைக்கோளத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் நகரம் ரியோதான்.
# ‘ரியோ கார்னிவல்' எனப்படும் உலகப் புகழ்பெற்ற மாபெரும் கேளிக்கைத் திருவிழா, ஈஸ்டர் தவக்காலம் தொடங்குவதற்கு முன்பு மார்ச் மாதத்தில் ஆண்டுதோறும் ரியோவில் நடைபெறுகிறது.
# உலகின் மிகவும் பழமையான மின்சார டிராம் ரயிலான ‘சான்டா தெரசா டிராம்' ரியோவில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.
# புகழ்பெற்ற பிரேசில் நீலக்கிளிகளைப் பற்றிய 'ரியோ' என்ற அனிமேஷன் படத்தை இயக்கிய கார்லோஸ் சால்டானா, ரியோ நகரத்தைச் சேர்ந்தவர்தான். புகழ்பெற்ற 'ஐஸ் ஏஜ்' அனிமேஷன் படங்களின் மூன்று பாகங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
பிரேசிலும் விளையாட்டும்
# ஒலிம்பிக் போட்டிகள் தென்னமெரிக்கக் கண்டத்தில் நடைபெறுவது இதுவே முதன்முறை. ரியோவையும் சேர்த்து, பூமிப்பந்தின் கீழ் அரைக்கோளத்தில் (தெற்கு) உள்ள நகரங்கள் இதுவரை மூன்று ஒலிம்பிக் போட்டிகளை மட்டுமே நடத்தியுள்ளன. எஞ்சிய 25 ஒலிம்பிக் போட்டிகள் மேல் அரைக்கோளத்தில்தான் (வடக்கு) நடந்துள்ளன.
# கைப்பந்தாட்டம், படகு செலுத்தும் போட்டிகளில் பிரேசில் நாடு அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்றிருக்கிறது.
# இந்த முறை ஒலிம்பிக் தொடக்க விழாவும் நிறைவு விழாவும் நடைபெறும் இடம் ரியோவில் உள்ள மரகானா மைதானம். இங்கேதான் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளும் நடைபெற்றுள்ளன. 1950-ல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்காக மரகானா மைதானம் கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் இரண்டு லட்சம் பேர் உட்கார முடியும்.
# பிரேசிலில் மற்ற விளையாட்டுகளைவிட கால்பந்து மிகமிகப் பிரபலம். இதுவரை ஐந்து கால்பந்து உலகக் கோப்பைகளை பிரேசில் வென்றுள்ளது. பிரேசிலின் மிகப் பிரபலமான கால்பந்து வீரர்கள் பீலே, ரொனால்டோ, ரொனால்டினோ. இப்போது நெய்மார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT