Last Updated : 19 Feb, 2014 12:00 AM

 

Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM

நானும் பச்சோந்தியும்

எங்கள் குடும்பம் ரொம்ப சின்னது. அப்பா, அம்மா, நான், தங்கை என நான்கு பேர் கொண்டது. எனக்கு இப்போது ஒன்பது வயது. இன்னும் இரண்டு நாளில் எனக்குப் பத்தாவது பிறந்தநாள். நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன்.

புதர்கள் நிறைந்த ஏரியின் பக்கத்தில்தான் எங்கள் வீடு.

மழைக்காலத்துக்குப் பிறகு எங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் புதர்கள் எல்லாம் என்னைவிட உயரமாக வளர்ந்துவிடும்.

அன்று காலை ஏழு மணிக்குத்தான் எழுந்தேன். ஸ்கூல் பஸ்ஸைப் பிடிப்பதற்காக வேகமாகக் கிளம்பினேன். அவரசமாகப் பல் துலக்கி, குளித்தேன். சாப்பிடுவதுதான் மிகக் கஷ்டமான வேலை. அதையும் அம்மா சொல்லித்தந்த மாதிரி சாப்பிட்டுக் கிளம்பினேன்.

நான் பஸ் நிற்கும் இடத்தை நோக்கி வேகமாக ஓடினேன். அப்போது ஒரு அழகான பட்டாம்பூச்சி பறந்து சென்றது. நான் அதைத் துரத்தினேன்.

ஒரு பெரிய செடியின் உள்ள பூவின் மேல் அந்தப் பட்டாம்பூச்சி நின்றது. அதைப் பிடிப்பதற்காக நான் குதித்தேன்.

என் கைகளுக்குள் ஏதோ ஒன்று இருப்பதை உணர முடிந்தது. உள்ளே பட்டாம்பூச்சி இருக்கும் என்று நினைத்துக் கைகளை இறுக்காமல் மெதுவாக மூடி இருந்தேன்.

கையை மெதுவாகத் திறந்தேன். உள்ளே பட்டாம்பூச்சி இல்லை. அதற்குப் பதில் நான்கைந்து இலைகள்தான் இருந்தன. அதைப் பார்த்ததும் எனக்குக் கோபம் வந்தது.

உடனே பட்டாம்பூச்சி எங்கு சென்றிருக்கும் என்று இங்குமங்கும் தேடினேன். அங்கே ஒரு பெரிய பச்சோந்தி, பட்டாம்பூச்சியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் நான் பயந்துவிட்டேன்.

நான் உடனே கீழே கிடந்த கல்லை எடுத்தேன். அதைப் பச்சோந்தி மீது எறிந்தேன். அடிவாங்கிய பச்சோந்தி, அந்த மரத்தில் இருந்து மறைந்தது.

அது எங்கே போயிருக்கும் என்று தேடினேன். அது தரையில் இறந்து கிடந்தது. கல்லைக் கையில் எடுத்தபோது அதை அடிக்க வேண்டும் என்றிருந்த கோபம் இப்போது இல்லை. அது இறந்து கிடந்ததைப் பார்த்ததும் எனக்கு அழுகை வந்தது.

பயத்துடனும் குற்ற உணர்வுடனும் அதன் வாலைப் பிடித்து தூக்கினேன்.

பக்கத்தில் சின்னதாக ஒரு குழியைத் தோண்டினேன். அதில் பச்சோந்தியைப் புதைத்தேன். பக்கத்தில் இருந்த செடிகளில் இருந்த பூக்களைப் பறித்தேன். அவற்றைப் பச்சோந்தியைப் புதைத்த இடத்தில் தூவினேன். எனக்கு அழுகை அதிகமானது.

ஸ்கூல் பஸ் வரும் சத்தம் கேட்டது. உடனே ரோட்டுக்கு ஓடினேன். பஸ்ஸில் ஏறிப் பள்ளிக்குச் சென்றேன்.

பள்ளியில் அறிவியல் டீச்சர், உணவுச் சங்கிலி பற்றிப் பாடம் நடத்தினார். இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் உணவுக்காக இன்னொரு உயிரைச் சார்ந்தே இருக்கிறது என்று சொன்னார்.

வெட்டுக்கிளி புல்லைத் தின்னும். வெட்டுக்கிளியைப் பச்சோந்தி சாப்பிடும். பச்சோந்தியைக் கழுகு கொத்திச் செல்லும். உடனே நான் என்னைக் கழுகாக நினைத்துக்கொண்டேன். என் மனம் சோகத்தில் ஆழ்ந்தது.

மாலை வீடு திரும்பும் வழியில் பச்சோந்தியைப் புதைத்த இடத்துக்குச் சென்றேன். அங்கே குழியில் இருந்த மண்ணை யாரோ தோண்டி இருந்தார்கள். உள்ளே பச்சோந்தியைக் காணவில்லை. பக்கத்தில் ஒரு பறவையின் காலடித் தடங்கள் தெரிந்தன. ஒரு வேளை அது அறிவியல் டீச்சர் சொன்னதுபோல கழுகின் காலடித் தடமாக இருக்குமோ?

இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. எழுந்து வெளியே வந்தேன். அந்த இருட்டில் மரங்களும் செடிகளும் கண்ணுக்குத் தெரியவே இல்லை. அந்த இருட்டில் பச்சோந்தியின் ஆயிரக்கணக்கான கண்கள் மட்டும் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.

மறுநாள் காலை எனக்குப் பிறந்தநாள். அம்மா எனக்குப் பரிசு தந்து வாழ்த்து சொன்னார்.

அம்மா தந்த பரிசைப் பிரித்தேன். உள்ளே ஒரு அழகான சட்டை இருந்தது. அதில் பச்சோந்தியின் படம் இருந்தது. அன்று முதல் எனக்குப் பச்சோந்தி மீது பிரியம் வந்துவிட்டது.

நான் வளர்ந்து பெரியவன் ஆகிவிட்டேன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு சமயத்திலும் பச்சோந்தியைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்கிறேன், இருப்பேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x