Last Updated : 13 Jul, 2016 12:11 PM

 

Published : 13 Jul 2016 12:11 PM
Last Updated : 13 Jul 2016 12:11 PM

உலக மகா ஒலிம்பிக் 2: சந்தித்ததும் சாதித்ததும்

அஞ்சிய நடுங்கிய பிரிட்டன் இந்தியா விடுதலை பெறும்வரை (1928, 1932, 1936-ம் ஆண்டுகளில்) ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் பிரிட்டன் பங்கேறவில்லை.

இந்திய ஹாக்கி அணி வலுவாக இருந்ததுதான் இதற்கு முக்கியக் காரணம். எல்லா ஹாக்கிப் போட்டிகளிலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. தனது அடிமை நாடான இந்தியாவிடம் தோற்றுவிடுவோம் என்ற பயத்தினால்தான் பிரிட்டன் விளையாடவில்லை.

ஆனால், 1948-ம் ஆண்டில் தலைநகர் லண்டனில் ஒலிம்பிக்கை நடத்திய பிரிட்டன், வேறு வழியின்றிப் பங்கேற்க வேண்டிய நிலை. இறுதிப் போட்டிக்குப் பிரிட்டன் முன்னேறியது. ஆனால், என்ன பயன்?

இறுதிப் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது.

நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன?

ஜெய்பாலின் துரதிருஷ்டம்

- ஜெய்பால் சிங்

இந்திய ஹாக்கி அணி முதன்முறையாக 1928-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சென்றபோது, ஜார்கண்ட் பழங்குடி இளவரசர் ஜெய்பால் சிங் பிரிட்டனில் படித்துக் கொண்டிருந்தார்.

ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிக்குத் தலைமை வகிக்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். தொடர்ந்து விளையாடிவந்த அவரால், காயம் காரணமாக இறுதிப் போட்டியில் விளையாட முடியவில்லை. தற்காலிகக் கேட்பனாக எரிக் பென்னிகர் நியமிக்கப்பட்டார்.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கத்தைப் பெறும் வாய்ப்பு பென்னிகருக்குக் கிடைத்தது. போட்டி தொடர் முழுவதும் அணியை வழிநடத்திய ஜெய்பால் சிங்குக்கு, பதக்க மேடை கௌரவம் கிடைக்காதது சோகம்தான்.

இரட்டை சவாரி

- இஃப்திகார் அலி கான் பட்டோடி



இந்திய கிரிக்கெட் வீரர் இஃப்திகார் அலி கான் பட்டோடி (சீனியர்) ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டாலும், இரண்டு விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்திருக்கிறார். 1928-ம் ஆண்டு முதன்முதலாக ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்குச் சென்ற இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், தங்கம் வென்ற அணியில் அவரால் விளையாட முடியவில்லை.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் களம் கண்டார். 1946-ல் இந்தியக் கிரிக்கெட் அணிக்குக் கேப்டனான அவர், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

பயிற்சியாளரின் பிரசவ வேதனை

- ஸ்ரீ ராம் சிங்

1976 மான்ட்ரீல் ஒலிம்பிக் போட்டியின் 800 மீட்டர் ஓட்டப் பந்தய இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் ராம் சிங் தகுதி பெற்றார். இதை அறிந்தவுடன், தனது மாணவரின் திறனை நேரில் காண சொந்தச் செலவில் மான்ட்ரீல் விரைந்தார், அவருடைய பயிற்சியாளர் முகமது இலியாஸ் பாபர்.

மான்ட்ரீலில் கால்பதித்த அவர், அந்நகரிலேயே பெரிதாக இருந்த ஒரு மசூதியில் தஞ்சமடைந்தார். தனது பயிற்சியாளர் வந்துவிட்டதை அறிந்தவுடனேயே உற்சாகம் பெற்ற ராம், தனது வாழ்விலேயே மிக வேகமாக ஓடினார். ஆனால், தங்கம் வென்றது கியூபாவின் ஆல்பர்ட்டோ யுவான்டரெனா. ராம் சிங் ஏழாவது இடம்பிடித்தார். ஒருவேளை, பயிற்சியாளர் பாபரை முன்கூட்டியே அனுப்பித் தீவிரப் பயிற்சி அளித்திருந்தால், ராம் பதக்கம் வென்றிருக்கலாம்.

178 கோல்கள்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச சாதனை ஹாக்கி அணி வென்ற 8 தங்கப் பதக்கங்கள்தான். 1928 - 1956க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய ஹாக்கி அணி விளையாடிய 24 ஒலிம்பிக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிகளில் 178 கோல்களை அடித்தது இந்திய அணி. அதேநேரம், எதிரணிகளிடமிருந்து இந்தியா பெற்ற கோல்கள் வெறும் 7 மட்டுமே. இந்தக் காலத்தில் தொடர்ச்சியாக ஆறு தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றது.

சதமடித்த இந்தியா

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளை ரியோ ஒலிம்பிக்குக்கு இந்தியா அனுப்புகிறது. இவர்கள் 16 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.

ஜிம்னாஸ்டிக் இளவரசி

ஒலிம்பிக் போட்டிகளின் உச்சங்களைப் பெண்களால் தொட முடியும் எனக் காட்டியவர் ருமேனியாவின் நாடியா காமன்சி. 1976, 1980 ஒலிம்பிக் போட்டிகளில் 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை அவர் வென்றார்.

1976 மான்ட்ரீல் ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்றபோது, அவருக்கு வயது வெறும் 14. அசிமிட்ரிகல் பார் போட்டியில் 10-க்கு 10 எடுத்து, ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் முழுப் புள்ளிகளை அள்ளிய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். அந்த ஒலிம்பிக்கின் முடிவில் பங்கேற்ற 10 போட்டிகளில் 7-ல் முழுப் புள்ளிகளைப் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ரப்பர் பெண், ஜிம்னாஸ்டிக் போட்டிகளின் இளவரசி, துல்லியமாக ஜிம்னாஸ்டிக் கலையை வெளிப்படுத்துபவர் என்றெல்லாம் அவர் புகழப்பட்டார்.

1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் புகழைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி அவருக்கு இருந்தது. பதக்கங்களை வென்று குவிக்காவிட்டாலும், ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை. விளையாட்டு வரலாற்றில் தனிமுத்திரை பதித்த பெண்களின் முதல் வரிசையில் காமன்சியின் பெயருக்கு எப்போதும் இடம் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x