Published : 01 Jun 2016 11:32 AM
Last Updated : 01 Jun 2016 11:32 AM

சித்திரக்கதை: பாசக்கார தோழிகள்!

வகுப்பறை முழுவதும் ஒரே சந்தோஷம். மாணவிகள் எல்லோர் முகத்திலும் சிரிப்பு. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய களைப்பே யாரிடமும் தெரியவில்லை. அந்தப் பள்ளி, பத்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.

பதினொன்றாம் வகுப்பு படிக்க வேறு பள்ளிகளுக்குத்தான் போக வேண்டும். யார் எங்கு போவார்கள் என்று உறுதியாகத் தெரியாது. பள்ளித் தோழிகள் இனிமேல் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

அதனால் வகுப்பாசிரியைக்கு ஒரு யோசனை. மாணவிகள் எல்லோரையும் ஒரு மாலை வேளையில் கூப்பிட்டிருந்தார். சிற்றுண்டியும் தேநீரும் கொடுக்க முடிவு செய்தார்.

வகுப்பாசிரியை யோசனையின்படி எல்லா மாணவிகளும் வந்தார்கள். மாணவிகள் எல்லோரும் தாங்கள் கேட்ட, படித்த, பார்த்த விஷயங்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால், பிரியாவும் செல்வியும் சோகமாக உட்கார்ந்திருந்தார்கள். உம்மென்று முகத்தை வைத்திருந்தார் கள். இருவரையும் கவனித்த ஆசிரியை அவர்கள் அருகில் சென்றார்.

“நீங்க ரெண்டு பேரும் ஏன் சோகமா இருக்கீங்க? நிகழ்ச்சியில பங்கெடுத்துக்குங்க!” என்றார்.

இருவரின் கண்களும் கலங்கியிருந்தன.

“ஏன் கண் கலங்குறீங்க?” என்று ஆசிரியை கூறியதும், அழ ஆரம்பித்தார்கள்.

“மிஸ்… இவுங்க இதுவரைக்கும் பிரிஞ்சதே இல்லை. பதினொன்னாம் வகுப்பு படிக்க வேற ஸ்கூலுக்குத்தான் போகணும். ரெண்டு பேரும் வேறவேற ஸ்கூலுல சேர்ந்தா என்ன பண்றதுன்னு நினைச்சு சோகமா இருக்காங்க” என்றாள் பக்கத்தில் அமர்ந்திருந்தவள்.

“உங்க நட்பைப் பாராட்டறேன். ரெண்டு பேரும் ஒரே ஸ்கூலுல சேர்றதுக்கு வாழ்த்துகள்!” என்று வாழ்த்தினார் ஆசிரியை. அதன் பிறகும் கலகலப்பான நிகழ்ச்சியில் அவர்களால் பங்குகொள்ள முடியவில்லை.

சில நாட்கள் கழித்துத் தேர்வு முடிவுகள் வந்தன. பிரியா, சான்றிதழ் வாங்கத் தன் அப்பாவுடன் பள்ளிக்கு வந்திருந்தாள். நானூற்றி அறுபது மதிப்பெண் பெற்றிருந்தாள் பிரியா. செல்வியும் நானூற்றி ஐம்பது மதிப்பெண் பெற்றிருந்தாள்.

சான்றிதழ் வாங்கிவிட்டுச் செல்வியைத் தேடினாள். தோழிகளிடம் விசாரித்தாள்.

“செல்வி இன்னும் வரலை” என்றார்கள் தோழிகள். அப்பாவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டுச் செல்வியைப் பார்ப்பதற்காகப் பள்ளி நுழைவாயில் அருகே சென்றாள் பிரியா.

அப்போதுதான் செல்வியும், செல்வியின் அம்மாவும் பள்ளியின் உள்ளே நுழைந்தார்கள். செல்வியைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் பிரியா ஓடினாள். ஆனால், செல்வியின் முகம் வாடியிருந்தது. சோகமாக இருந்தாள்.

“ஏண்டி… சோகமா இருக்க? உடம்பு சரியில்லையா?” என்ற பிரியா, செல்வியின் கைகளை அன்புடன் பிடித்துக்கொண்டாள். செல்வியால் பேச முடியவில்லை. கண்களில் நீர் வழிந்தது.

“ஏண்டி அழற?” அதிர்ச்சியுடன் கேட்டாள் பிரியா.

கண்களைத் துடைத்துக்கொண்ட செல்வி, சிரமத்துடன் சிரித்துக்கொண்டு, “சர்டிபிகேட்டும் டிசியும் வாங்கிட்டியா?” என்று கேட்டாள்.

“ம்… வாங்கிட்டேன்!”

“எந்த ஸ்கூலுல சேரப் போற?”

நகருக்குள்ளே உள்ள ஒரு பள்ளியின் பெயரைச் சொன்னாள் பிரியா. “நீயும் வாடி, அந்த ஸ்கூலிலேயே சேர்ந்துரு” என்றாள்.

அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டே, “நான் வேலைக்குப் போகலாம்னு இருக்கேன். அப்பாவுக்கு உடம்புக்கு முடியல. படுத்த படுக்கையா கிடக்கறாரு.

இனிமே அவரால வேலைக்குப் போக முடியாது. அம்மா சித்தாள் வேலைக்குப் போறாங்க. அவங்களுக்கும் அடிக்கடி உடம்பு சரியில்லாமப் போகுது. அதான் படிப்பை நிறுத்திடலாம்னு இருக்கேன். ஜவுளிக்கடைக்கு வேலைக்குப் போனா, மாசம் நாலாயிரம் சம்பளம் கிடைக்கும்” என்றாள்.

அவளருகில் நின்றுகொண்டிருந்த செல்வியின் அம்மா, “ஆமாம்மா. செல்வி அப்பா படுத்த படுக்கையாயிட்டாரு!” என்றார்.

பிரியாவுக்கு அழுகை வந்தது. இந்தச் செய்தி பெரிய அதிர்ச்சியாக இருந்தது. கண்களில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்த பிரியாவின் அருகில் வந்த அவளுடைய அப்பா, “ஏம்மா அழற?” என்று பதற்றத்துடன் கேட்டார்.

“அப்பா, செல்வி படிப்பை நிப்பாட்டப் போறாளாம்” என்று அழுதுகொண்டே கூறினாள் பிரியா. அவள் தோளைத் தடவிக் கொடுத்த அப்பா, “நீங்க பேசிக்கிட்டு இருந்தப்பவே வந்துட்டேம்மா. என்ன பண்றது.

செல்வி சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு. வாம்மா போகலாம்!” என்று அழைத்துச் சென்றார். பிரியா சோகமானாள். செல்வியைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்றாள்.

புதிய பள்ளிக்குள் தன் அப்பாவுடன் நுழைந்தாள் பிரியா. அவளுக்குச் சந்தோஷமே இல்லை. நீண்ட நாள் தோழி, அருகில் இல்லையே!

ஏன் இல்லை? எதிரில் வருவது யார்? கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தாள் பிரியா. அட, செல்வி! அருகில் வந்தவளை அப்படியே கட்டிக்கொண்டாள் பிரியா.

“உன் ஆசை நிறைவேறிடுச்சு பிரியா. ரெண்டு பேரும் ஒரே குரூப். ஒரே கிளாஸ்!” என்றாள் செல்வி உற்சாகத்துடன்!

“படிப்பை நிப்பாட்டப் போறதா சொன்னியேடி. பொய் சொன்னியா? இத்தனை நாளா அதை நினைச்சு கவலைப்பட்டேன் தெரியுமா” என்றாள் பிரியா.

“என்னாலேயே இத நம்ப முடியலடி. தெய்வம் போல ஒருத்தர் எனக்கு உதவி செஞ்சார். எங்கம்மாகிட்ட பேசிச் சம்மதிக்க வைச்சார்!”

“யாருடி அவரு?, நான் அவருக்கு நன்றி சொல்லணும்” ஆர்வமாகக் கேட்டாள் பிரியா.

செல்வி விரலால் காட்டிய திசையில் அப்பா நின்றுகொண்டிருந்தார்.

“நானும் என்னோட நண்பர்களும் சேர்ந்து செல்வியை ஸ்கூலில் சேர்த்துவிட்டோம்மா, ஆளுக்கொரு செலவைப் பகிர்ந்துகிட்டோம்” என்றவர் மீண்டும் தொடர்ந்தார். “டி.சி. வாங்க வந்த நாளிலிருந்தே உன்னைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன். முகத்தை உம்முன்னு வச்சுக்கிட்டு இருந்தே.

எதுலேயும் ஆர்வம் காட்டாம இருந்தே. செல்வி படிப்பைப் பாதியில நிப்பாட்டப் போறத நினைச்சுத்தான் நீ கவலைப்பட்டுக்கிட்டு இருக்கறதா தோணுச்சு. உடனே செல்வியோட அம்மாவைப் பார்த்துச் சம்மதம் வாங்கி ஸ்கூலுல சேர்த்தாச்சு!”

“இத ஏம்பா முதலிலேயே என்கிட்ட சொல்லலே” என்று பொய்க் கோபத்துடன் கேட்டாள் பிரியா.

“சஸ்பென்ஸா இருந்தா அதுல ஒரு திரில் இருக்குமேன்னுதாம்மா சொல்லல. செல்வியையும் சொல்லச் சொல்லல!” என்றார்.

“ஸ்வீட் அப்பா!” என்று அப்பாவைக் கட்டிக்கொண்டாள் பிரியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x