Published : 11 Jan 2017 11:04 AM
Last Updated : 11 Jan 2017 11:04 AM
அம்மாவும் அப்பாவும் அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். சீருடை அணிந்து, ஷூவை மாட்டிக் கொண்டு பள்ளிக்குச் செல்லத் தயாராக இருந்த பிரியா, அம்மாவின் அருகில் சென்றாள்.
“அம்மா, நான் ஒண்ணு கேட்டா தருவீங்களா?” எனக் கொஞ்சலுடன் கேட்டாள்.
“என்னடா வேணும்? நீ கேட்டதை என்னைக்காவது வாங்கிக் குடுக்காம இருந்திருக்கேனா?” என்றார் அம்மா.
“சத்தியமா?” தயக்கத்துடன் திரும்பவும் உறுதி செய்துகொண்டாள் பிரியா.
“சத்தியமா!”
“எனக்கு, 1500 ரூபா வேணும்மா!”
அதிச்சியடைந்த அம்மா, “அவ்ளோ பணம் எதுக்கும்மா?” எனக் கேட்டார்.
“என்னோட ஃப்ரெண்டுக்கு இன்னைக்குப் பிறந்த நாள். அவங்களுக்கு பிறந்த நாள் பரிசு வாங்கிக் கொடுக்கணும்!”
“நல்லா வாங்கிக் கொடு. அதுக்காக 1,500 ரூபா செலவழிக்கணுமா?” எனக் கேட்ட அம்மா, “யாருக்கும்மா பிறந்த நாள்?” எனக் கேட்டார்.
“அது சஸ்பென்ஸ்! அவங்க என்னோட ஸ்பெஷல் ஃப்ரெண்ட்! அதனாலதான் அவ்ளோ பணம் கேட்டேன். இன்னைக்கு சாயங்காலம் நம்ம வீட்டுல தான் அவங்களுக்குப் பிறந்தநாள் கேக் வெட்டப் போறோம்!” உற்சாகமாகச் சொன்னாள் பிரியா.
சில நொடிகள் யோசித்த அம்மா, “சரிடா, அம்மா உனக்கு பணம் கொடுக்குறேன்” எனக் கூறிக் கொண்டே கைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கி பத்திரப்படுத்தி விட்டுப் பள்ளிக்குக் கிளம்பினாள் பிரியா.
அன்றைக்கு அரை நாள் விடுமுறை அறிவித்திருந்தார்கள். மதியமே வீடு திரும்பினாள் பிரியா. எதிர் வீட்டு அத்தையிடமிருந்து வீட்டுச் சாவியை வாங்கிக் கதவைத் திறந்து உள்ளே போனாள். மதிய உணவைச் சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கினாள். நான்கு மணிக்கு அம்மா கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
எதிரே மியா என்ற பூனை வந்தது. “இவ்ளோ வேகமா எங்கப் போற?” எனக் கேட்டது.
“பிறந்த நாள் கேக்கும், டிரஸ்சும் வாங்கப் போறேன்!”
“யாருக்கு?”
“அது சஸ்பென்ஸ்! இன்னைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு நீ அவசியம் வரணும்” எனச் சொல்லி விட்டு நடந்தாள்.
கொஞ்சம் தூரம் போனதும், பப்பி நாய் எதிரில் வந்தது. அதுவும் மியா கேட்ட அதே கேள்வியைக் கேட்டது. பிரியாவும் அதற்குப் பதிலளித்து விட்டு, “சாயங்காலம் ஆறு மணிக்கு வந்துடு!” என்றாள்.
இன்னும் கொஞ்சம் தூரம் போனதும், ஒரு வீட்டில் வளர்ந்திருந்த ரோஜா பூச்செடி பிரியாவைக் கூப்பிட்டு, “எங்கே கிளம்பிட்ட?” எனக் கேட்டது.
பிரியா அதற்குப் பதிலளித்து விட்டு, சாயங்காலம் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும்படி சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
அப்போது, அவளைச் சுற்றிச்சுற்றி வந்த பட்டாம்பூச்சியும், தேனீயும், அதே கேள்வியைக் கேட்டன. பிரியாவும் அதே பதிலைச் சொல்லிவிட்டு சாயங்காலம் வருமாறு கூறினாள்.
அப்போது எதிரே வந்த அவளது அத்தை “எங்கே போற?” எனக் கேட்டதும், “பிறந்த நாளுக்குக் கேக்கும் டிரஸ்ஸும் வாங்கப் போறேன்!” என்றாள் பிரியா.
“நீ மட்டும் தனியாவா போற?”
“ஆமா! என்னோட ஃப்ரெண்டோட அப்பாதான் துணிக்கடை வச்சிருக்கார். அவரே நல்ல துணியா செலக்ட் பண்ணிக் கொடுப்பார். பக்கத்துலயே கேக் வாங்கிட்டு வந்துடறேன். நீங்களும் சாயங்காலம் பிறந்த நாள் விழாவுல கலந்துக்குங்க ஆன்ட்டி” எனக் கூறி விட்டு துணிக்கடையை நோக்கிக் கிளம்பினாள்.
மாலை 6 மணி!
ஹாலின் நடுவே பெரிய அளவில் சதுரமான கேக் தயாராக இருந்தது. அதன் நடுவே ஒரே ஒரு மெழுகுவர்த்தி, விளக்கேற்றக் காத்துக்கொண்டிருந்தது.
பிரியாவின் அம்மாவும் அப்பாவும் அத்தையும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள். பிரியாவின் ஃபிரெண்ட்ஸ் சிலர் வாசலை நோக்கி ஆவலுடன் பார்த்தபடி நின்றார்கள். பட்டாம்பூச்சி, மியா, பப்பி, ரோஜாச் செடி, தேனீயும் காத்திருந்தன.
அப்போது நடுத்தர வயதுப் பெண் உள்ளே நுழைந்தார்.
பிரியா பலூனை வெடிக்க வைத்தாள். அதனுள்ளிருந்த ஜிகினாத் துகள்கள் அந்தப் பெண்ணின் மேல் மழை போல் பொழிந்தது.
“ஹாப்பி பர்த்டே மரகதம்மா!” என மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கூறினாள் பிரியா. அதைத் தொடர்ந்து எல்லோரும் “ஹாப்பி பர்த் டே!” என்றனர்.
தன் பள்ளித் தோழிகளிடம் திரும்பிய பிரியா, “இவங்கதான் எனக்குத் தேவையான எல்லாத்தையும் செஞ்சு கொடுக்கறவங்க! காலையில சீக்கிரமா எழுந்து டீ போட்டுக் கொடுக்கறதுலேர்ந்து இரவு தூங்கப் போகும் வரைக்கும் என்கூடவே துணையா இருக்கறவங்க இவங்கதான்! விதவிதமா சமைச்சுப் போடுவாங்க. சாப்பிட அடம் பிடிக்கிற நேரத்துல கதை சொல்லி ஊட்டிவிடுவாங்க. என்னோட துணியெல்லாம் துவைச்சுப் போடுவாங்க” எனக் கூறிக் கொண்டே சென்றவளை இடைமறித்துப் பள்ளித் தோழி கேட்டாள், “உங்க வீட்டு வேலைக்காரியா, இவங்க…?”
அவளை முறைத்துப் பார்த்த பிரியா, “நான் அவங்களை அப்படி நினைச்சதே இல்ல. ஏன்னா, அம்மாவும் அப்பாவும் ஆபீஸ் போயிட்டு ராத்திரி 8 மணிக்கு சோர்வா வருவாங்க. காலையில சீக்கிரமே கிளம்பிப் போயிடுவாங்க. என்னைப் பார்த்துக்கறதுக்கு நேரமே இருக்காது. அந்தக் குறையே தெரியாம அம்மா ஸ்தானத்துலேர்ந்து இவங்கதான் பார்த்துக்குறாங்க!” என்ற பிரியாவின் அருகில் வந்த அம்மா,
“நல்ல பொண்ணு” என்றவர், மரகதம்மா பக்கம் திரும்பி,
“ உங்களுக்குத்தான் நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். என் மகளை ரொம்ப நல்ல விதமா கவனிச்சுக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி!” எனக் கூறி அவரது கைகளை பிடித்துக் குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
“காலையில நீங்க, ‘எனக்குப் பிறந்த நாள்! கோயிலுக்குப் போயிட்டு வர்றேன்’னு என்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்ததை பிரியா கேட்டுருப்பான்னு நினைக்கிறேன். அதான் இந்த ஏற்பாடெல்லாம் பண்ணியிருக்கா! அவ பணம் கேக்கும்போதே எனக்கு உங்க நினைவுதான் வந்துச்சு. அதான் நான் மறுப்பு சொல்லாம பணம் கொடுத்தேன்!” என்றார் அம்மா.
மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து, கேக் வெட்டப்பட்டு, அனைவரும் சாப்பிட்டனர். பிரியா, தான் வாங்கி வந்த சேலையை அன்பளிப்பாக கொடுத்தாள். தேனீ, தான் கொண்டு வந்த தேனைக் கொடுத்தது. ரோஜாச் செடி ரோஜா மாலையை மரகதம்மாவின் கழுத்தில் அணிவித்தது.
பப்பி டிரம்ஸ் வாசிக்க, மியா பாட்டுப் பாட, வண்ணத்துப்பூச்சி நடனமாடியது.
மரகதம்மா, தான் காண்பது கனவா, நினைவா என்பது தெரியாமல் மகிழ்ச்சிப் பரவசத்தில் மூழ்கியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT