Last Updated : 10 May, 2017 11:24 AM

 

Published : 10 May 2017 11:24 AM
Last Updated : 10 May 2017 11:24 AM

சித்திரக் கதை: ரகசியக் கோழி 001

கரும்பூரில் முத்தம்மா என்ற அம்மாள் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்தாள். பெரிய பெண்ணின் பெயர் பெரியமாரி. அடுத்த பையனின் பெயர் சின்னமாரி. அவர்கள் வீட்டில் ஒரு சேவலும் நான்கு கோழிகளும் இருந்தன. கோழிகள் இடும் முட்டைகளை அருகில் இருந்த பெட்டிக்கடையில் கொடுத்துச் சமையலுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக்கொள்வாள் முத்தம்மாள்.

சிலசமயம் அவளுடைய பையன் சின்னமாரிக்கும் அவித்தோ, பொரித்தோ கொடுப்பாள். சின்னமாரி ரொம்ப அறிவாளி. பள்ளியில் நன்றாகப் படிப்பான். துப்பறியும் கதைகள், காமிக்ஸ் கதைகளை விழுந்து விழுந்து படிப்பான். துப்பறியும் நிபுணராக அவன் ஆசைப்பட்டான்.

அதனால் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டேயிருப்பான். ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வந்த சின்னமாரி, அம்மா கவலையோடு வாசலில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அம்மா வளர்க்கும் செவலைக் கோழி மட்டும் காலையில் திறந்துவிட்டதும் காணாமல் போய் விடுகிறது. ஆனால், சாயங்காலம் அடைகிற நேரம் வந்து சேர்ந்து விடும். முத்தம்மாவுக்கு இதுதான் கவலை. அது மட்டுமல்லாமல் முட்டை இடுவதுமில்லை. திறந்து விடும்போது முட்டை இருப்பதைப் பார்த்துத்தான் மேயவிடுவாள். மற்ற கோழிகள் முட்டையிடும் நேரம் எங்கே மேய்ந்துகொண்டிருந்தாலும் நேரே வீட்டுக்கு வந்துவிடும். ஆனால், செவலைக் கோழி மட்டும் வரவில்லை.

அன்று இரவு சின்னமாரியிடம் முத்தம்மா இதைச் சொல்லிக்கொண்டிருந்தாள். சின்னமாரியின் துப்பறியும் மூளை வேலை செய்தது. நாளை பள்ளி கிடையாது. அந்தச் செவலைக் கோழி எப்படிக் காணாமல் போய்த் திரும்பி வருகிறது என்று துப்பறிந்து பார்க்கலாம். உடனே அம்மாவிடம் ரகசியமான குரலில் தன்னுடைய திட்டத்தைச் சொன்னான்.

அம்மா காலையில் கோழிகளை அடைத்து வைத்திருக்கும் பஞ்சாரத்தைத் தூக்கிக் கோழிகளைத் திறந்து விட்டாள். கோழிகள் கேக்க்க்…கேக்க்…கேக்க்க்க்கே… என்று மாறிமாறி குரல் கொடுத்தன. தூக்கம் கலைந்து இறக்கைகளை விரித்து நீட்டி சோம்பல் முறித்தன. கறுப்புவெள்ளைக் கோழி, வெள்ளைக்கருப்புக் கோழி, சாம்பல் கோழி, செவலைக் கோழி, எல்லாம் முற்றத்தில் அம்மா வீசியிருந்த குருணை அரிசியை அவசர அவசரமாகக் கொத்தின. செவலைக் கோழி மட்டும் ரெண்டு வாய் சாப்பிட்டு விட்டு மெல்ல முற்றத்தை விட்டு இறங்கியது. அப்படியே தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே எதிரே இருந்த குப்பை மேட்டைப்பார்த்து போனது.

இப்போது சின்னமாரி குடிசை வாசலிலிருந்து செவலைக் கோழி போவதையே பார்த்துக்கொண்டு நின்றான். குப்பை மேட்டின் உச்சியில் நின்று திரும்பிப்பார்த்தது செவலைக் கோழி. சின்னமாரியைப் பார்த்ததும் அப்பாவி மாதிரிக் கீழே குனிந்து இரையைக் கொத்துவது போல நடித்தது. கண்ணை உருட்டி உருட்டி சின்னமாரி நிற்கிறானா என்று பார்த்தது. சின்னமாரி அதைப் பார்க்காத மாதிரி நின்றான். அப்படியே பராக்கு பார்ப்பது போலக் குப்பை மேட்டை நோக்கி நடந்தான். அந்த நேரம் பார்த்து, சின்னமாரியின் பின்னாலிருந்து இரண்டு கைகள் அவனுடைய கண்களைப் பொத்தின.

“யாருன்னு சொல்லு பாக்கலாம்…” என்று கரகரகுரலில் பரமசிவன் கத்தினான். மற்ற நேரம் என்றால் சின்னமாரியும் தெரியாத மாதிரி வேறுவேறு பெயர்களைச் சொல்லி விளையாட்டு காட்டுவான். ஆனால் இப்போது அவன் துப்பறிந்து கொண்டிருக்கும்போது அதை இடைஞ்சலாகவே நினைத்தான்.

“சரி... விடுறா பரமா” என்று கத்தினான். அதைக் கேட்ட பரமசிவனுக்கு ஏமாற்றம். ஆனால் கைகளை எடுக்காமல், “இல்லை...பரமசிவன் இல்லை...” என்று அடம் பிடித்தான். சின்னமாரிக்குக் கோபம் வந்தது. அவனுடைய கைகளைத் தட்டிவிட்டான். திரும்பிப்பார்த்தால் செவலைக் கோழியைக் காணவில்லை. வீட்டைச்சுற்றி ஓடிப் போய்ப் பார்த்தான். காணவில்லை. தெருவுக்கு ஓடிப் போய்ப் பார்த்தான். காணவில்லை. எப்படி மாயமானது என்று யோசித்தான்.

குப்பைமேட்டிலிருந்து பார்த்தால் தெருவில் நாலைந்து வீடுகள்தான் தெரியும். பரமசிவன் வீட்டில் மாடு வளர்க்கிறார்கள். அவனுடைய வீட்டில் வைக்கோல் போர் இருக்கும். வீட்டைச் சுற்றி கோட்டைச்சுவர் கட்டியிருப்பார்கள். அதைத் தவிர ஒளியவோ மறையவோ இடம் கிடையாது. சின்னமாரி அப்படியே தெருவுக்குள் மேலும் கீழும் நடந்தான். மற்ற வீடுகளை நோட்டம் விட்டான். எங்கும் காணவில்லை.

பரமசிவன் வீட்டுக்குப் போனான். அவன் இல்லை. கடைக்குப் போயிருந்தான். அவன் வரட்டும் என்று காத்திருந்தான். மற்ற கோழிகள் எல்லாம் தெருவில் உள்ள சாக்கடையில் கிண்டி மேய்ந்துகொண்டிருந்தன. செவலைக் கோழியை மட்டும்தான் காணவில்லை. இன்னிக்குக் கண்டுபிடிக்காமல் விடக் கூடாது என்று நாலா பக்கமும் பார்த்துக்கொண்டிருந்தான். பரமசிவன் வீட்டு வாசலில் ஒரு சின்ன இறகு கிடந்தது. அதைக் கையில் எடுத்தான். அது செவலைக் கோழி இறகு. இங்கேதான் பக்கத்தில் எங்கேயோ இருக்கிறது.

அப்போது பரமசிவன் வீட்டு வைக்கோல் போரிலிருந்து சிறகடிக்கும் சத்தம் மெல்லக் கேட்டது. சின்னதாகக் க்கெ என்ற கோழியின் சத்தமும் கேட்டது. சின்னமாரிக்குச் சந்தேகம். எல்லாக் கோழியும் மேய்ந்துகொண்டிருக்கும்போது இது மட்டும் ஏன் தனியாக அலைகிறது? ஆனால், கோழி இருக்கும்போது போய்க் கலவரப்படுத்தக் கூடாது என்று நினைத்தான். அப்படியே வீட்டுக்கு வந்து பாடங்களைப் படித்தான். அம்மா கேட்டதுக்கு “பொறு…பொறு.. சாயங்காலம் வரை பொறும்மா” என்று சொன்னான்.

மாலையில் சின்னமாரி, பரமசிவன் வீட்டுக்கு முன்னாடி எல்லோரையும் கூட்டி வைத்து விளையாடினான். வழக்கமாகக் கோழிகள் அடைகிற நேரம் வந்துவிட்டது. அப்போதும் செவலைக் கோழி வரவில்லை. மற்ற கோழிகள் எல்லாம் வீட்டைப் பார்த்துப் போய்க்கொண்டிருந்தன. இனியும் தாமதித்தால் இருட்டி விடும். இதுதான் சரியான சமயம் என விஷயத்தைப் பரமசிவனிடம் சொன்னான். இரண்டு பேரும் உள்ளே வைக்கோல்போர் இருந்த இடத்துக்குப் போனார்கள். ஒரு சத்தமும் இல்லை. அமைதியாக இருந்தது. வைக்கோல்போர் தெற்கு மூலையில் ஒரு சிறிய பொந்து மாதிரி இருந்தது. சின்னமாரி உற்றுப்பார்த்தான். கோழியின் கால்தடம் தெரிந்தது. அந்த இடத்துக்குப் பக்கத்தில் போய் நின்றான். பரமசிவன் வாயைத் திறந்தான். அவன் வாயில் சின்னமாரி கையை வைத்துப் பொத்தினான். இருவரும் அமைதியாக நின்றார்கள்.

என்ன ஆச்சரியம்? அந்தப் பொந்திலிருந்து கிய்யா… கிய்யா… என்ற சத்தம் கேட்டது. சின்னமாரி உட்கார்ந்து குனிந்து பார்த்தான். அந்தப் பொந்தின் நுழைவாயில் தாண்டி செவலைக் கோழி உட்கார்ந்திருந்தது. அதைச் சுற்றி அன்று பொரித்திருந்த ஏழு கோழிக்குஞ்சுகள் நின்று கொண்டிருந்தன. சின்னமாரிக்குச் சந்தோஷம். ஓடிப்போய் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்தான். அம்மாவுக்கு ஏகத்துக்கு மகிழ்ச்சி.

“அட! குஞ்சு பொரிக்கதுக்குத்தான் இப்படி ஒளிஞ்சி ஒளிஞ்சி போனியாக்கும்...” என்று செவலைக் கோழி கழுத்தைத் தடவிக்கொண்டு கொஞ்சினாள். செவலைக் கோழி ‘கெக்க்கேக்க்கேக்கே’ என்று சொல்லி ஒத்துக்கொண்டது. அன்று செவலைக் கோழிக்கு ‘ரகசியக் கோழி 001’ என்று சின்னமாரி பெயர் சூட்டு விழா நடத்தினான். எல்லோருக்கும் குருணை அரிசியும், கூடவே தவிடும் கஞ்சித்தண்ணியும் விருந்தாக அளித்தான். எல்லாக் கோழிகளும் போட்டி போட்டுக்கொண்டு விருந்தைச் சாப்பிட்டன. மகிழ்ச்சியில் கெக்கெக்க்கேக்க்கே… என்று மாறிச் மாறி செவலைக் கோழியை வாழ்த்தின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x