Last Updated : 20 Jul, 2016 11:56 AM

 

Published : 20 Jul 2016 11:56 AM
Last Updated : 20 Jul 2016 11:56 AM

உலக மகா ஒலிம்பிக் - 3: மறக்கப்பட்ட கி.மு. ஒலிம்பிக்

சாதனை கிரிக்கெட் தங்கம்

இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜே.டபிள்யு.ஹெச்.டி. டக்ளஸ் மட்டுமே ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 1908 ஒலிம்பிக் போட்டியில் ‘மிடில்வெயிட்’ குத்துச்சண்டைப் போட்டியில் அவர் தங்கம் வென்றார்.

இன்றைக்கு ஆங்கிலத்தில் மைதானங்கள் ‘ஸ்டேடியம்' (Stadium) எனப்படுகின்றன. இது ‘ஸ்டேடு' (Stade) என்ற வார்த்தையி லிருந்து வந்தது. ‘ஸ்டேடு' என்பது வேறொன்றுமில்லை, 192 மீட்டர் நீளம் கொண்ட பண்டைய ஒலிம்பிக் ஓட்டப்பாதைதான். அந்த வகையில் உலக விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு மைதானங்களுக்குத் தொடக்கமாகவும் ஒலிம்பிக் போட்டியே இருந்துள்ளது.

# பண்டைய கிரீஸ் என்பது பல்வேறு நகரங்களைத் தனித்தனி மாகாணங்களாகக் கொண்ட நாடாக இருந்தது. அந்த மாகாண ஆட்சி யாளர்கள் போரிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கிடையில்தான் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் நடைபெறும்போது வீரர்கள் அமைதியாகப் பயணிப்பதற்கு வசதியாக போர், சண்டைகள் நிறுத்தப்பட்டன.

# ஸீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றான ஸீயஸ் கடவுளின் மாபெரும் சிலை, ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக ஒலிம்பியாவில் எழுப்பப்பட்டது.

# ஒலிம்பிக் போட்டிகள் எப்போது தொடங்கின என்பது தொடர்பாக நிறைய புராணக் கதைகளும் கட்டுக்கதைகளும் நிலவுகின்றன. கிடைத்துள்ள பதிவுகளின்படி கி.மு. 776-ல் கிரீஸில் உள்ள ஒலிம்பியாவில் ஒலிம்பிக் போட்டிகள் முதலில் நடைபெற்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டதாலேயே ‘ஒலிம்பியாட்’ என்று அந்தப் போட்டி அழைக்கப்பட்டது.

# பண்டைக் காலத்தில் மிகக் குறைவான பிரிவுகளிலேயே போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் பங்கேற்பவர்கள் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது, கிரேக்கத்தில் பேச வேண்டும் என்பது மட்டுமே பங்கேற்பதற்கான அடிப்படை நிபந்தனை. இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் யாரும், எந்த நாட்டைச் சேர்ந்தவரும் போட்டிகளில் பங்கேற்கலாம்.

# எலிஸ் மாகாணத்தைச் சேர்ந்த கோரிபஸ் என்ற சமையல் நிபுணர்தான் ஒலிம்பிக் போட்டிகளின் முதல் வெற்றியாளராகக் கருதப்படுகிறார். போட்டிகளின் தொடக்கத்தில் நடைபெற்ற ‘ஸ்டேடு' என்ற ஓட்டப்பந்தயத்தில் அவர் வெற்றி பெற்றார்.

2016 ஒலிம்பிக்கில்… அழைக்கிறது தென்னமெரிக்கா

இதுவரை நடந்து முடிந்துள்ள 30 ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றுகூட தென்னமெரிக்கக் கண்டத்தில் நடத்தப்பட்டதில்லை. ரியோவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 31-வது ஒலிம்பிக் போட்டிதான், தென்னமெரிக்க கண்டத்தில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x