Published : 10 May 2017 11:25 AM
Last Updated : 10 May 2017 11:25 AM
விளையாடும்போது குழந்தைகள் சீக்கிரமாகச் சோர்ந்துவிட மாட்டார்கள். விளையாடும்போது எப்படி நேரம் போவது தெரியாதோ; அப்படியே சோர்வு ஏற்பட்டாலும் தெரியாது. நெடுநேரம் விளையாடிப் பசியெடுத் தாலும்கூட, விளையாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டுப் போகக் குழந்தைகளுக்கு மனசு வராது.
என்றாலும், விளையாடும்போது தேவையென்றால் கொஞ்சம் ஓய்வும் எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? விளையாடிக்கொண்டும் ஓய்வு எடுத்துக்கொண்டும் விளையாடும் விளை யாட்டுகளும் சில இருக்கின்றன. அதில் ஒன்று ‘தீக்கோழி பிடி’. இந்த வாரம் நாம் இந்த விளையாட்டைத்தான் விளையாடப் போகிறோம்.
என்ன! எல்லாரும் தயாரா?
எப்படி விளையாடுவது?
# இந்த விளையாட்டை எத்தனைக் குழந்தைகள் வேண்டுமானாலும் விளையாடலாம். எண்ணிக்கை ஏதுமில்லை. இருபால் குழந்தைகளும் சேர்ந்து விளை யாடலாம்.
# எப்போதும் போலவே, இந்த விளையாட்டுக்கான முதல் போட்டியாளரை ‘சாட், பூட், திரி…’ போட்டுத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
# விளையாடும் மைதானத்தைச் சுற்றிலும் குழந்தைகள் அவர்கள் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம்.
“திடலிலே திரியுது தீக்கோழி…
பிடிச்சுக்கோ, பிடிச்சிக்கோ ஓடிவந்து…”
என்று எல்லாக் குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு முறை குரல் கொடுங்கள்.
# குழந்தைகள் குரல் கொடுத்ததும், முதல் போட்டியாளர் மைதானத்துக்குள் வர வேண்டியதுதான்.
# மைதானத்திலிருக்கும் குழந்தைகளில் யாரையாவது இலக்காகக் குறி வைத்துத் துரத்திச் சென்று தொட முயற்சிப்பார். போட்டி யாளரின் கையில் சிக்காமல் குழந்தைகள் தப்பி ஓடுங்கள்.
# பக்கத்தில் தொடுவது மாதிரி வந்து விட்டால், சட்டென வலது கையை வலது காலுக்குள் கொடுத்து, வலது கையால் மூக்கைப் பிடித்துக்கொள்ளுங்கள். வலது கால் தரையில் படாத வகையில் இடது கையால் பிடித்துக்கொண்டு நில்லுங்கள். இப்படி நிற்பதைப் பார்க்கும் போது, தீக்கோழி போல இருப்பதால் இந்த விளையாட்டுக்கு அந்தப் பெயர் வந்தது.
# ஓடுபவர் இப்படி நின்றுவிட்டால், அவரைத் தொடக் கூடாது. மீறித் தொட்டாலும் அவர் ‘அவுட்’இல்லை.
# முதல் போட்டியாளர் தீக்கோழி போல நிற்பவர் அருகில் நின்று, அவர் எப்போது காலைத் தரையில் வைப்பார், அவரைத் தொடலாம் எனக் காத்திருப்பார்.
# அப்போது விளையாடும் மற்றக் குழந்தைகள் போட்டியாளர் அருகே வந்து ‘போக்கு’ காட்டுவார்கள். அவர்களைத் தொடும் வேகத்தில் போட்டியாளர் விலகி ஓட, தீக்கோழி போல இருப்பவர் தப்பித்துக் கொள்வார்.
# முதல் போட்டியாளர் யாரைத் தொடு கிறாரோ, அவரே அடுத்த போட்டியாளராக மாற வேண்டும்.
விளையாடிக்கொண்டே, இடையிடையே ஓய்வும் எடுத்துக் கொள்ளும் இந்த விளையாட்டை எவ்வளவு நேரம் விளையாடினாலும் சலிக்காது.
தீக்கோழி பிடி விளையாடிப் பார்ப்போமா?
இன்னும் விளையாடலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT