Published : 28 Jun 2017 11:12 AM
Last Updated : 28 Jun 2017 11:12 AM
‘கல்லை எடு; கோட்டைத் தொடு’ என்ற விளையாட்டைத்தான் விளையாடப் போகிறோம். இந்த விளையாட்டுக்கு 5 குழந்தைகள் தேவை.
மைதானத்தில், 20-க்கு 20 அடி அளவுள்ள பெரிய சதுரமொன்றை வரைந்துகொள்ளுங்கள். அந்தச் சதுரத்தை நான்கு சதுரங்களாக்கிக்கொள்ளுங்கள். நான்கு சதுரங்களும் சந்திக்கும் மையப்புள்ளியில், சிறிய வட்டம் வரைந்து, அதன் மையத்தில் நான்கு சிறு கற்களை வையுங்கள். விளையாடும் ஐந்து போட்டியாளர்களையும் ‘சாட், பூட், திரி…’ போட வைத்து, அதிலிருந்து முதல் போட்டியாளர் ஒருவரைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். இனி, விளையாட வேண்டியதுதான்.
நான்கு போட்டியாளர்களும் நான்கு சதுரங்களின் மூலைகளிலும் உள்ள இரண்டு கோடுகளிலும் கால் வைத்தபடி நின்று கொள்ளுங்கள். முதல் போட்டியாளர் சதுரத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி வருவார். முதல் போட்டியாளர் அருகே இல்லாத அல்லது கவனிக்காத நேரமாகப் பார்த்து, பிற போட்டியாளர்கள் வேகமாக ஓடிச்சென்று நடுவில் இருக்கும் கல்லை எடுத்துக்கொண்டு, நின்ற இடத்துக்கே மீண்டும் வந்து விடுங்கள். போட்டியாளர்கள் கல்லை எடுக்கச் செல்லும்போது, முதல் போட்டியாளர் அவர்களைத் தொடுவதற்கு ஓடி வருவார். அவர் தொட்டுவிட்டால் நீங்கள் ‘அவுட்’. தொட்டவருக்கு ஒரு ‘பாயிண்ட்’ கிடைக்கும். போட்டியாளர்கள் அவர்களது கட்டத்தைத் தாண்டி வெளியே சென்றாலோ, சதுரத்தின் பக்கவாட்டுக் கோடுகளைத் தொட்டுவிட்டாலோ ‘அவுட்’ ஆவார்கள்.
ஆனால், முதல் போட்டியாளர் சதுரத்தின் எந்தக் குறுக்குப் பகுதியிலிருந்தும் உள்ளே நுழைந்து, போட்டியாளரைத் தொடுவதற்கு ஓடி வரலாம். 5 பேர் கொண்ட நான்கைந்து குழுவாகப் பிரிந்து, ஒவ்வொரு குழுவும் இரண்டு மூன்று முறை இந்த விளையாட்டை விளையாடலாம்.
எந்தக் குழுவில் இருப்பவர் அதிகமாக பாயிண்ட்களை எடுக்கிறாரோ, அவரே வெற்றியாளர். உங்களில் யாரந்த வெற்றியாளர்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT