Published : 19 Mar 2014 12:00 AM
Last Updated : 19 Mar 2014 12:00 AM
நாம வீட்ல ஸ்வீட், சாக்லேட் சாப்பிடும்போது சிந்துற சின்னச் சின்ன துகளை எல்லாம் வேக வேகமா தூக்கிட்டுப் போற குட்டிக் குட்டி எறும்புகளை வேடிக்கை பாத்திருக்கீங்களா? சரி, அதுங்க அவ்ளோ வேகமா அதை எங்க தூக்கிட்டுப் போகுது? நமக்கு இருக்கிற மாதிரி அந்த எறும்புகளுக்கும் வீடு இருக்குமா? அந்த வீடுகள் எங்க இருக்கும்? இப்படியெல்லாம் நமக்குக் கேள்விகள் வரும்தானே. எறும்புகள் நாம வாழற வீட்டுக்குப் பக்கத்திலே குழி பறிச்சுக் கூட்டமா வாழும். அந்தக் குழியதான் எறும்புப் புற்றுன்னு அம்மா சொல்லிக்குடுத்திருப்பாங்க இல்லையா?
எறும்புகளின் வீடு
அந்த மாதிரியான எறும்புப் புற்று, லூகஸ் அப்படிங்கிற 10 வயதுக் குட்டிப் பையன் வீட்டுப் பக்கத்தில இருந்தது. குட்டி குட்டி எறும்புகள் சேர்ந்து ஒரு அழகான வசிப்பிடத்த, அதாவது புற்றைக் கட்டின. அந்தப் புற்றுக்குள்ள சாப்பிடத் தேவையான உணவுப் பொருள் வைக்கிறதுக்கான அறை, தங்குவதற்கான அறைன்னு நம்ம வீட்டில் இருக்கிற மாதிரியே இருக்கும். எறும்புகள் எல்லாம் கஷ்டப்பட்டு அதுங்களோட வீடைக் கட்டிட்டு இருந்தப்பதான் அந்த விபத்து நடந்தது.
நம்ம ஹீரோ லூகஸ் ஒரு குட்டிப் பையன் இல்லையா? அவனவிட உயரமான ஒரு பையன் லூகஸை அடிச்சுக் கீழ தள்ளிடுவான். லூகஸ் போய் அந்த எறும்புப் புற்றுக்குப் பக்கத்தில விழந்துடறான். எறும்புகள் எல்லாம் பயந்து ஓடுதுங்க. லூகஸுக்குக் கோவம் மூக்குக்கு மேல வருது.
தான் குட்டிப் பையனா இருக்கிறதாலதான் அந்தப் பெரிய பையன் நம்மளத் தள்ளிவிட்டுட்டான்னு நினைக்கிறான். கைல உள்ள தண்ணீர்த் துப்பாக்கிய வச்சுக் குட்டியா இருக்கிற எறும்புகள் மேல தண்ணிய அடிச்சிக்கிட்டே இருக்கான். நமக்கு வெறும் தண்ணீர்த் துப்பாக்கிதான். ஆனால் எறும்புகள் மேல அது வீடியோ கேமில் உள்ள குண்டு மாதிரி போய் விழுகுது. எல்லா எறும்புகளும் புற்றை விட்டு வெளியேறி வேகமா ஓடுதுங்க. லூகஸ் விடாம தண்ணிய துப்பாகி மூலமா பீய்ச்சி அடிக்கிறான். கடைசில தன் செருப்புக்கால வச்சி அந்தப் புற்றை ஓங்கி மிதிச்சுடுறான். எல்லா எறும்புகளும் தூரப் போய் விழுந்து புலம்புதுங்க.
லூகஸுக்கு என்ன ஆச்சு?
ஆனாலும் அந்த எறும்புகள் எப்டியோ சமாளிச்சு மறுபடியும் வீட்டைச் சரி பண்ணிடுதுங்க. அதுக்கு அப்புறம் அந்த எறும்புகள் எல்லாம் சேர்ந்து லூகஸுக்குத் தண்டனை கொடுக்கணும்னு முடிவு பண்ணுதுங்க. விஞ்ஞானியா இருக்கிற ஒரு எறும்பு அதுக்காக ஒரு மருந்து கண்டுபிடிக்குது. அந்த மருந்தை மனுஷங்க உடல்ல ஏத்துனா மனுஷங்க எறும்பு மாதிரி குட்டியா ஆயிடுவாங்க.
லூகஸ் தூங்கும்போது எறும்புகள் எல்லாம் சேர்ந்து அந்த மருந்தை அவன் காதுக்குள்ள ஊத்திடுதுங்க. அவன் சட்டுன்னு ரொம்ப ரொம்ப குட்டியா மாறிடுறான். உடனே எறும்புப் போலீஸ் எல்லாம் அவனக் கைது பண்ணிக் கூட்டுப் போறாங்க. ஆமா எறும்புகள்ட்டயும் போலீஸ் எல்லாம் இருக்காங்க. அவனை எறும்புப் புற்றுக்குள்ள கொண்டு போய் எறும்புகள் நீதிமன்றத்துல நிறுத்துறாங்க.
லூகஸ் செய்த குற்றங்களை எறும்பு நீதிபதி புக்கு மாதிரி இருக்கிற ஒரு இலையைத் திறந்து வாசிக்கிறார். லூகஸ் வீட்டுக்குப் போணும், வீட்டுக்குப் போணும்னு கத்துறான். ஆனால் புற்றுக்குள்ள ஆயிரக்கணக்கான எறும்புகள், லூகஸுக்குத் தண்டனை கொடுக்கணும்னு ஒண்ணாச் சேர்ந்து கத்துதுங்க. லூகஸுக்கு என்ன ஆனது, எறும்புகள் உலகத்தில் மாட்டியவன் திரும்பினானா? The Ant Bully படத்தைப் பாருங்கள், விடை தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT