Last Updated : 29 Oct, 2014 09:46 PM

 

Published : 29 Oct 2014 09:46 PM
Last Updated : 29 Oct 2014 09:46 PM

புத்திசாலிப் படகோட்டி - இந்தோனேசிய நாட்டுப்புறக் கதை

இந்தோனேசிய மன்னர் டோஜராவை ஒரு வியாபாரி ஒரு நாள் சந்தித்தார்.

“என் கப்பலில் உள்ள அனைத்து வெளிநாட்டுப் பொக்கிஷங்களையும் உங்களுக்கு அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கு முன் ஒரே ஒரு நிபந்தனை. உங்கள் குடிமக்களில் யாராவது ஒருவர் எனது இரண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்” என்றார்.

உடனே தன் அரசவையில் இருந்த அனைத்து அறிஞர் பெருமக்களையும் அந்த வியாபாரியைச் சந்திக்க அனுப்பினார் மன்னர்.

இரண்டு வாத்துகளை எடுத்துக் காட்டிய வியாபாரி, “ இதில் எது ஆண், எது பெண்?” என்று கேள்வி கேட்டார்.

அடுத்ததாக, நீள்உருளையான ஒரு குச்சியை எடுத்துக் காட்டி, “இதன் முன்முனை எது, பின் முனை எது என்று உங்களால் பதில் சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.

வியாபாரி கேட்ட இந்த இரண்டு கேள்விகளுக்கும் அறிஞர்களால் எந்த பதிலும் அளிக்க முடியவில்லை.

இதையடுத்து, தண்டோரா போடுபவர்கள் ஊரெங்கும் சென்று மன்னர் கூறிய அறிவிப்பை சொன்னார்கள்.

“இதனால் சகலமானவர்களுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நம் நாட்டுக்கு வந்துள்ள வியாபாரி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க குடிமக்களில் யாருக்காவது புத்திசாலித்தனம் இருந்தால், அவர் நம் தேசத்தின் அடுத்த இளவரசர்-இளவரசியாக அறிவிக்கப்படுவார்”

அப்போது படகு ஓட்டி கொண்டிருந்த இளம் படகோட்டி இந்த தண்டோரா அறிவிப்பைக் கேட்டான்.

இந்தக் கேள்விக்கு இந்த நாட்டில் உள்ள யாராலுமே பதில் அளி்க்க முடியவில்லையா? அப்படியானால் இந்த வாய்ப்பை நாம் தவறவிடக் கூடாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் அந்த படகோட்டி.

அடுத்த நாள்

“மேதகு மன்னர் அவர்களே! வியாபாரியின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால், அதற்கு நீங்கள் ஏரிக் கரைக்கு வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார் படகோட்டி.

இதையடுத்து மன்னர், அமைச்சர்கள், கேள்வி கேட்ட வியாபாரி அனைவரும் ஏரிக்கரைக்குச் சென்றார்கள். போகும்போது வாத்துகளையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.

வியாபாரியின் கையிலிருந்த கூண்டை வாங்கி, அந்த படகோட்டி வாத்துகளை வெளியே எடுத்தான்.

அதன் பிறகு, கரையில் அந்த இரண்டு வாத்துகளையும் மெதுவாக நிற்க வைத்தான். அப்போது கறுப்பாக இருந்த வாத்து நீரில் இறங்கி முதலில் நீந்திச் செல்லத் தொடங்கியது.

உடனே படகோட்டி, “இந்த கறுப்பு வாத்துதான் ஆண் வாத்து” என்று பதில் கூறினான்.

“அப்படியா, அதை எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று கரையில் நின்று கொண்டிருந்த மன்னர் கேள்வி கேட்டார்.

“மன்னா, எப்போதுமே ஆண் வாத்துதான் நீரில் முதலில் இறங்கும். அதனால் கறுப்பு வாத்துதான் ஆண்” என்று மீண்டும் கூறினான் படகோட்டி இளைஞன். பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் இதைக் கேட்டு வாயைப் பிளந்தனர்.

அந்த படகோட்டி இளைஞன், வியாபாரியின் கையில் இருந்த உருண்டைக் குச்சியை வாங்கி தண்ணீரை நோக்கி வீசினான்.

“அந்தக் குச்சி மூழ்கியுள்ள பகுதி, அந்த மரத்தின் அடிப்பகுதி. மேலே மிதக்கும் பகுதி அதன் நுனிப் பகுதி” அடுத்த கேள்விக்கான பதிலையும் கூறினான் படகோட்டி.

“இந்த இளைஞன் சொன்ன இரண்டு பதில்களும் சரியானவைதான். ஏற்கெனவே, நான் அளித்த வாக்குறுதிபடி, எனது கப்பலில் உள்ள வெளிநாட்டுப் பொக்கிஷங்களை உங்களுக்கு வழங்குகிறேன் மன்னரே” என்றார் வியாபாரி.

உடனே மன்னர், “ நீங்கள் மட்டுமல்ல, நான் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றியாக வேண்டும். நான் ஏற்கெனவே அறிவித்தபடி, இந்த இளைஞரை

எனது இளவரசராக அறிவிக்கிறேன்” என்று ஆணையிட்டார்.

இருந்தாலும் மன்னருக்கு மனதுக்குள் ஒரு சின்ன சந்தேகம்.

“சரி, எப்படி இந்த இரண்டு பதில்களையும் உன்னால் உறுதியாகச் சொல்ல முடிந்தது” என்று அந்த இளைஞனைப் பார்த்து கேட்டார் மன்னர்.

“அடிப்படையில் நான் ஒரு படகோட்டி. தண்ணீரில் எது மூழ்கும், எது மிதக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்புறம் ஏரியில்தானே நான் படகு ஓட்டுகிறேன். அங்கு சுற்றியிருக்கும் எல்லா விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்ததாலே, இந்தக் கேள்விகளுக்கு என்னால் எளிதாக பதில் சொல்ல முடிந்தது” என்று கூறினான் படகோட்டி இளைஞன்.

அந்த இளைஞனைப் பாராட்டிய மன்னர், அவனுக்கு இளவரசர் பட்டம் சூட்ட அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x