Last Updated : 22 Jun, 2016 12:35 PM

 

Published : 22 Jun 2016 12:35 PM
Last Updated : 22 Jun 2016 12:35 PM

குழந்தைகளைத் தேடும் நூலகம்

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இன்று படிப்படியாக மறைந்துவருகிறது. நூலகம் போவதும் சிறுவர் சிறுமிகளிடம் குறைந்துவருகிறது. அவர்கள் எப்போதும் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் கேம்ஸ்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த என்ன வழி என்று சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த கோபி யோசித்தார். அதன் விளைவு நடமாடும் நூலகம்!

அதென்ன நடமாடும் நூலகம்? தெருவில் காய்கறி, ஐஸ் போன்ற உணவுப் பொருட்களை வண்டியில் வைத்துக்கொண்டு விற்று வருவார்களே, அதுபோலத்தான் இதுவும். ஒரு வேன் நிறைய அலமாரிகள் அமைத்து நூல்களுடன் தெருக்களைச் சுற்றி வருகிறார் கோபி. ஐஸ்கிரீம் வண்டியைப் பார்த்தால் எப்படித் துள்ளிக்குதித்துச் சிறுவர்கள் வருவோர்களோ, அதேபோல நடமாடும் நூலக வண்டியைப் பார்த்ததும் சிறுவர் சிறுமிகள் ஆர்வத்தோடு ஓடுகிறார்கள்.

இப்படி பெரிய நகரான சென்னையை ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி வருகிறார் இவர். ஒவ்வொரு மாதமும் எப்படியும் ஒவ்வொரு பகுதிக்கும் கோபி சென்றுவிடுவார். தெருக்களைச் சுற்றும் அதேவேளையில், நாம் கேட்ட நேரத்தில் நம் வீட்டு முன்னே வந்தும் இந்த நூலகம் நிற்கும். சென்னையைச் சுற்றி வருவது எவ்ளோ கஷ்டம். அப்படியிருக்க எதற்காக இந்த நடமாடும் நூலகம்? இதுபற்றிக் கோபியிடம் கேட்போமா?

“நான் நூலகப் படிப்பு படித்தவன். கடந்த 15 வருடங்களாக ஹிக்கின்பாதம்ஸில் வெளிநாட்டுப் பத்திரிக்கைகளைப் பராமரிக்கும் வேலை பார்த்தேன். என் குழந்தைகளுக்கு நிறைய புத்தகங்களை வாங்கிக்கொடுப்பேன். ஒரு கட்டத்தில் என் வீட்டில் மலைப்போல் புத்தகங்கள் குவிந்துவிட்டன. என் பிள்ளைகள் மட்டுமல்லாமல் எல்லோரும் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கே.கே. நகரில் ‘புக் வார்ம்ஸ்’ என்ற பெயரில் நூலகம் தொடங்கினேன்” என்று சொன்னார்.

முதலில் நூலகமாகத் தொடங்கிய இவர், பலரும் கேட்டதால் நடமாடும் நூலகத்தைத் தொடங்கியிருக்கிறார். “கே.கே.நகரிலிருந்து வேறு இடங்களுக்கு வீடு மாறியவர்கள், அந்தந்தப் பகுதிகளில் நல்ல நூலகங்கள் இல்லை என்று என்னிடம் குறைப்பட்டார்கள். அவர்களது குறையைத் தீர்க்க, நடமாடும் நூலகத்தைத் தொடங்கினேன். இப்போது எனக்கு ஒரு போன் போட்டால் போதும், அவரவர் வீடு தேடிப் புத்தகம் வரும்” என்கிறார்.

இந்த நடமாடும் நூலகத்தில் பெரும்பாலும் குழந்தைகள் புத்தகம்தான். இந்த நூலகத்தில், பதிவு செய்தவர்கள் மாதம் ஒரு முறை 10 புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம். ஒரு மாதத்துக்குப் பிறகு புத்தகங்களைத் திரும்பித் தந்துவிட வேண்டும். ஜெரோநிமா ஸ்டின்சன், கூஸ்பம்ஸ் புத்தகங்கள், சிறுவர் நாவல்கள், அறிவியல் நூல்கள், வரலாற்று புத்தகங்கள் எனப் பல புத்தகங்கள் இங்குக் குவிந்து கிடக்கின்றன.

என் குழந்தை புத்தகங்களே படிப்பதில்லை என்று சலித்துக்கொள்ளும் பெற்றோரும், நூலகம் தூரமாக இருப்பதால் போக முடியவில்லை என்று வருத்தப்படும் குழந்தைகளும் கவலையேபட வேண்டாம். ஒரு போன் செய்தால் போதும், சிறுவர் புத்தகங்கள் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

நடமாடும் நூலகர் கோபியைத் தொடர்புகொள்ள: 9841028327

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x