Last Updated : 17 Aug, 2016 12:38 PM

 

Published : 17 Aug 2016 12:38 PM
Last Updated : 17 Aug 2016 12:38 PM

வாண்டு பாண்டு: கிரிக்கெட்டில் கலக்கும் குட்டிப் பையன்!

வாண்டு: என்னப்பா பாண்டு, மூஞ்சை சிடுசிடுன்னு வைச்சிருக்கே.

பாண்டு: ஸ்கூல் லீவு விட்டா, வீட்டுல அதை வாங்கிட்டு வா; இதை வாங்கிட்டு வான்னு கடைக்கு அனுப்பிக்கிட்டே இருக்காங்க. விளையாடப் போகவே முடியல.

வாண்டு: இதுதான் உன் சிடுசிடுப்புக்குக் காரணமா? இதுக்கே இவ்ளோ கோபப்படுறீயே. ஒரு நாட்டோட தலைவரு தன்னோட 15 வயசு மகளை ஸ்கூல் லீவுல ஓட்டல்ல வேலை செய்ய அனுப்பிட்டாரு தெரியுமா?

பாண்டு: அப்படியாப்பா? யாருப்பா அவரு?

வாண்டு: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாதான். அவருக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. இதுல ரெண்டாவது பொண்ணு சாஷாவுக்கு 15 வயசு ஆகுது. அவுங்களுக்கு ஸ்கூல்ல கோடை விடுமுறை விட்டுட்டாங்களாம். உடனே அவுங்கள கடல் உணவுகளை விக்கிற ஒரு ஓட்டல்ல சர்வரா வேலைக்கு சேர்த்துவிட்டுட்டாரு ஒபாமா.

பாண்டு: ஒரு நாட்டோட தலைவர் பொண்ணு சர்வரா வேலை பார்க்குறாங்களா? நம்பவே முடியலையே. ஏன் அனுப்புனாராம்?

வாண்டு: பெரிய தலைவரோட பொண்ணா இருந்தாலும், சாதாரணமா வாழ்றவங்களோட வாழ்க்கை அனுபவங்களத் தெரிஞ்சுக்கணும்னு அனுப்பியிருக்காங்க. அந்தப் பொண்ணும் மறுக்காம வேலைக்குப் போய்ட்டு இருக்காங்க. அங்க மத்தவங்க வேலை செய்யுற மாதிரிச் சர்வர் டிரஸ் போட்டுக்கிட்டு, தட்டு எடுக்குறது, மேஜையைச் சுத்தம் செய்யுறது, பில் போடுறதுன்னு எல்லா வேலையையும் பார்க்கிறாங்க. நீ என்னான்னா, உங்க வீட்டு வேலையைச் செய்யச் சொன்னா ஆத்திரப்படுறே.

பாண்டு: தப்புதான்பா. அவ்ளோ பெரிய நாட்டுத் தலைவரோட பொண்ணே ஓட்டல்ல வேலை செய்யுறாங்க. நானெல்லாம் வீட்டுக்கே செய்யுறதில்லை. இனி அம்மா வீட்டு வேலை சொன்னா தட்டாம செய்வேன்.

வாண்டு: இப்போதான் நீ நல்ல பையன். சரி, கிரிக்கெட்னா உனக்கு உசுருதானே. ஒரு குட்டிப் பையன் கிரிக்கெட்டுல கலக்குற செய்தி உனக்குத் தெரியுமா?

பாண்டு: யாருப்பா அந்தக் குட்டிப் பையன்?

வாண்டு: அவன் பேரு சயான் ஜமால். அவனுக்கு இப்போ 4 வயசுதான் ஆகுது. டெல்லியில கே.ஜி. வகுப்பு படிக்குறான். அதுக்குள்ள அவனை 12 வயசுக்குட்பட்ட ஸ்கூல் கிரிக்கெட் டீம்ல சேர்த்துருக்காங்க.

பாண்டு: என்னது, நாலு வயசுலேயேவா? இந்த வயசுல ஒழுங்கா பேட்டுகூடப் பிடிக்கத் தெரியாதேப்பா?

வாண்டு: நீ சொல்றது வாஸ்தவம்தான். ஆனா, இந்தக் குட்டிப் பையன் பேட்டை பிடிக்குறது மட்டுமில்லை; சச்சின் டெண்டுல்கர் மாதிரியே விளையாடவும் செய்யுறானே.

பாண்டு: அம்மாடியோவ்!

வாண்டு: இது என்ன ஆச்சரியம். அவன் மூணு வயசுலதான் டி.வி.யில கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சிருக்கான். இவனோட கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்து அவனைப் பயிற்சிக்கு அனுப்பியிருக்காங்க. ஒரு வருஷத்துக்குள்ள கிரிக்கெட் விளையாடக் கத்துக்கிட்டு ஸ்கூல் டீம்லையும் இடம் பிடிச்சுட்டான். இதைப் பார்த்து ஸ்கூலே மூக்கில விரலை வைக்குதாம். இந்தியாவுக்காக விளையாடணும்; அதுவும் விராட் கோலி மாதிரி விளையாடணும்னு அந்தக் குட்டிப் பையன் சொல்றான்பா.

பாண்டு: ஆச்சரியத்துக்கு மேலே ஆச்சரியமா இருக்கு. இதே வயசுலதான் சச்சின் டெண்டுல்கரும் பேட்டை பிடிக்க ஆரம்பிச்சாருன்னு எங்கப்பா ஒரு தடவை சொன்னாரு. யாரு கண்டா, இந்தப் பையன்கூடசச்சின் மாதிரி வந்தாலும் வருவான். சரி வாண்டு, வீட்டுக்குப் போய்ட்டு அம்மாவுக்கு உதவியா கடைக்குப் போறேன். நாம அப்புறம் பார்ப்போம்.

வாண்டு: ஓ.கே. டாட்டா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x