Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM
பால் பாயிண்ட் பேனாக்கள் குறைவான விலையில் எங்கு பார்த்தாலும் கிடைக்கின்றன. இவற்றை எப்படிக் கண்டுபிடித்தார்கள் தெரியுமா? முதன் முதலில் ஜான் லவ்ட் என்கிறவர்தான் 1888ஆம் ஆண்டு பால் பாயிண்ட் பேனாவுக்காக பேட்டண்ட் ரைட் எனப்படும் காப்புரிமை பெற்றார்.
அவர் ஒரு தோல் பதப்படுத்தும் தொழிலாளி. தான் தயாரிக்கும் தோல் பொருட்களில் சாதாரண இங்க் பேனாவால் எழுத முடியவில்லை என்பது இவருடைய வருத்தம். அதனால் தோல் பொருட்களில் எழுதுவதற்குத் தோதான வடிவில் இவரே ஒரு பேனாவைத் தயாரித்தார். அதன் நுனியில் உலோகத்தால் ஆன சிறிய பந்து இருக்கும். ஆனால் இவர் தயாரித்த பேனாவை அந்தக் காலத்தில் வேறு யாரும் தயாரிக்க முன்வரவில்லை.
அதற்கு அடுத்து வந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்டவர்கள் பால் பாயிண்ட் பேனா தயாரிப்புக்காக காப்புரிமை பெற்றிருந்தார்கள். ஆனால் அடர்த்தியில்லாத இங்க், ஒழுகியது. பேனாவை விட்டு வெளியே வராமல் கட்டிக்கொண்டது.
ஆசிரியரின் யோசனை
ஹங்கேரியைச் சேர்ந்த செய்தித்தாள் ஆசிரியர் லாஸ்லோ பைரோ.
இவர், தன்னுடைய ஃபவுண்டெய்ன் பேனாவில் அடிக்கடி இங்க் ஊற்றிக் கொண்டே இருப்பதையும், இங்க் கொட்டி வீணான பேப்பர்களைச் சுத்தம் செய்வதையும் எரிச்சல் தருகிற வேலையாக நினைத்தார். இதற்கு என்ன வழி என்று யோசித்தார்.
அப்போதுதான் செய்தித்தாளில் அச்சிடப்படுகிற இங்க், சீக்கிரமாகக் காய்ந்துவிடுவதையும், பேப்பரில் பரவாததையும் உணர்ந்தார். அது போன்ற ஒரு இங்கைக் கொண்டு செயல்படக்கூடிய பேனா உருவாக்கினால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. உடனே தன் சகோதரர் ஜியார்ஜியுடன் இணைந்து 1938ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட பால் பாயிண்ட் பேனாவைக் கண்டுபிடித்தார்.
வழுவழு பேனா
ஆரம்ப காலத்தில் பால் பாயிண்ட் பேனாக்களை நேராக நிமிர்த்திப் பிடித்தபடிதான் எழுதமுடியும். அப்போதுதான் அதனுள் இருக்கும் இங்க், முனை வழியாக வெளியே வரும். பிறகு அதைச் சமாளிக்க உள்ளே சிறிய பிஸ்டன் போன்ற அமைப்பை வைத்தார்கள். காலப்போகில் அவற்றில் பல மாற்றங்கள் செய்து, வெவ்வேறு வடிவிலும் அளவிலும் பால் பாயிண்ட் பேனாக்கள் உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்டன.
இங்க் லீக் ஆகாத, முறையான பேனாவை 1949ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பேட்ரிக் என்பவர் கண்டுபிடித்தார். ஆனால் அதை வைத்து எழுதுவது எளிதாக இல்லை. 1952ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மார்செல் பிச் என்பவர் கண்டுபிடித்த பேனாதான் தற்போது நடைமுறையில் உள்ள வழுவழு பால் பாயிண்ட் பேனா.
இந்த நவீன பால் பாயிண்ட் பேனாக்களின் உள்ளே பாகுநிலை போன்ற அடர்த்தியில் உள்ள இங்க் இருக்கும். பேனாவின் முனையில் உள்ள சிறிய பந்து உருளும்போது, உள்ளே இருக்கும் இங்க், வெளியே வரும். பொதுவாக எஃகு, பித்தளை, டங்ஸ்டன் கார்பைட் போன்ற உலோகங்களை வைத்துதான் இந்த பேனா முனை செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment