Last Updated : 18 Sep, 2013 02:59 PM

 

Published : 18 Sep 2013 02:59 PM
Last Updated : 18 Sep 2013 02:59 PM

தையல்சிட்டும் வானமும்

ஒரு நாள் காலையில் தையல்சிட்டு வானத்தை அண்ணாந்து பார்த்தது. பளிச்சென்ற வானத்தில் ஏதோ கோடுபோல் தெரிந்தது. அது என்ன?

தையல்சிட்டு உற்றுப் பார்த்தது. அது ஒரு கிழிசல். துணியில் கிழிசல் இருப்பது போல வானத்தில் கிழிசல்.

தையல்சிட்டு பதறிவிட்டது. அய்யய்யோ ஆபத்து வந்துவிட்டதே. வானம் கிழிய ஆரம்பித்திருக்கிறதே. என்ன செய்வது?

தையல்சிட்டுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எல்லாரிடமும் சொல்லி எச்சரிக்க வேண்டும் என்று அதற்குத் தோன்றியது.

அவரசமாகப் போய்க்கொண்டிருந்த தேன்சிட்டு ஒன்று, அதன் கண்ணில் பட்டது. செய்தியைச் சொல்வதற்காகத் தையல்சிட்டு அதைக் கூப்பிட்டது.

அதுவோ பறந்தபடியே, ‘எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ சொல்ற கதையை எல்லாம் நின்னு கேட்டேன்னா, எனக்கு முன்னாடியே தேனீக்கள் தேனைக் குடிச்சிட்டுப் போயிடும். நான் வர்றேன்’ என்று சொல்லி பாடிக்கொண்டே போனது.

நீண்ட தூரம் போக வேண்டும் டும் டும் டும்

நிறைய தேனைக் குடிக்க வேண்டும் டும் டும் டும்

அப்போதுதான் ஒரு மரங்கொத்தி வந்து, ஒரு மரத்தில் செங்குத்தாகத் தொற்றிக்கொண்டு புழுக்களைத் தேடி மரத்தைக் கொத்த ஆரம்பித்தது. மரங்கொத்தியிடம் தையல்சிட்டு விஷயத்தைச் சொன்னது.

‘வானம் கிழிஞ்சிடுச்சா? அப்படின்னா அதுலருந்து நெறய புழுக்கள் கீழே கொட்டுமா?’ என்று மரங்கொத்தி கேட்டுவிட்டு, ஒரு பாட்டுப் பாடியது.

பத்து நூறு ஆயிரம்

புழுக்கள் கொட்டும் நிறைய

நிறைய நிறைய

கொத்தி எடுத்துச் சென்று

கூட்டில் வைத்துத் தின்பேன்

வைத்து வைத்துத் தின்பேன்

சரி வேறு ஆளைப் பார்த்துச் செய்தியைச் சொல்வோம் என்று தையல்சிட்டு அங்கிருந்து புறப்பட்டது.

கிளைக்குக் கிளை தாவிக்கொண்டிருந்த அணில் கண்ணில் பட்டது. அணில் நமக்கு நல்ல நண்பனாயிற்றே. நாம் சொன்னால் அவன் கேட்பான் என்று நினைத்துக்கொண்டே அணிலிடம் போய் செய்தியைச் சொன்னது.

‘அப்படின்னா சூரியன் மேலேருந்து கீழே விழுந்துடும். அதை நான் கொறிச்சுத் தின்பேனே’ என்று சொல்லிவிட்டு, உற்சாகமாகக் கிளைக்குக் கிளை தாவி ஓடியது பாடிக்கொண்டே.

பறித்துப் பறித்துத் தின்பேன்

பாடிக்கொண்டு தின்பேன்

கொறித்துக்கொறித்துத் தின்பேன்

குதித்து ஓடித் தின்பேன்

சரி, இனிமேல் யாரிடமும் சொல்லிப் பயன் இல்லை. நாம்தான் ஏதாவது செய்து, வானத்தையும் பூமியையும் பூமியில் உள்ள உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்தது.

இலையைத் தைத்துத் தான் கூடுகட்டும் முறை தையல்சிட்டின் நினைவுக்கு வந்தது. இலையைத் தைப்பதுபோல் வானத்தையும் தைத்துவிடலாமே என்று தையல்சிட்டு நினைத்தது.

தான் எவ்வளவு சின்ன பறவை என்பது தையல்சிட்டுக்குத் தெரியும். இருந்தாலும் தன்னால் முடிந்த அளவு வானத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தது. தன்னால் முடிந்த அளவுக்கு நூலையும் நாரையும் எடுத்துக்கொண்டு, அடுத்த நொடியே வானை நோக்கிப் பறந்தது.

இரவு பகலாகப் பறந்தது. நாட்கணக்கில் பறந்தது. மாதக் கணக்கில் பறந்தது. வருடக் கணக்கில் பறந்தது. இறுதியாக, வானத்தில் கிழிசல் இருந்த இடத்தை அடைந்தது. அங்கே தையல்சிட்டு கண்ட காட்சி, அதன் மனதை உருக்கியது.

வானம் சோகமாக அழுதுகொண்டிருந்தது. தையல்சிட்டு அதன் அருகில் சென்று ‘வானமே வானமே ஏன் அழுகிறாய்?’ என்று கேட்டது.

‘இந்தப் பிரபஞ்சத்தையே இவ்வளவு நாளா நான்தான் தாங்கிக்கிட்டு இருந்தேன். எவ்வளவோ பறவைகள், என் மேலதான் பறக்குது. ஆனா எனக்கு வயசாயிட்டதுனால பாரம் தாங்காம கிழிய ஆரம்பிச்சிட்டேன். நான் என்னைப் பத்திக்கூடக் கவலப்படலை. நான் கிழிஞ்சி போயிட்டா பிரபஞ்சமே அழிஞ்சிடும். அதுக்கப்புறம் எந்தப் பறவையும் பறக்க முடியாது. நான் அதை நெனச்சுதான் அழுவுறேன். எனக்குப் பறவைகள் ரொம்பப் பிடிக்கும். எவ்வளவோ அழகழகான பறவைகள் கூட்டம்கூட்டமாகப் பறந்துபோவதைப் பார்க்கும்போது, மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும். நான் அதை நெனச்சுதான் அழுவுறேன்’ என்று வானம் அழுதுகொண்டே தையல்சிட்டுக்குப் பதில் சொன்னது.

‘கவலைப்படாதே வானம். நான் உன்னைத் தைக்கத்தான் இங்க வந்திருக்கேன்’ என்று தையல்சிட்டு வானத்துக்கு ஆறுதல் சொன்னது.

‘இவ்வளவு சின்ன பறவையா என்னைத் தைக்கப் போவுது?’ என்று தையல்சிட்டைப் பார்த்து வானம் வியப்புடன் நினைத்தது. இருந்தாலும் தனக்கு உதவ வேண்டுமென்று யாருமே நினைக்காதபோது இந்தத் தையல்சிட்டாவது உதவிசெய்ய வந்திருக்கிறதே, அதன் நல்ல மனதைப் புண்படுத்தக் கூடாது என்று நினைத்துக்கொண்ட வானம்,

‘உன்னோட நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி தையல்சிட்டு. ஆனா, நீ ரொம்ப கஷ்டப்பட வேணாம். மனுஷங்ககிட்டப் போய் சொல்லி ஏதாவது பண்ணச் சொல்லு’ என்றது.

அதற்குத் தையல்சிட்டு, ‘நான் எல்லார்கிட்டேயும் சொல்லிப் பாத்துட்டேன். யாரும் கேக்குறதா இல்ல. அதனாலதான் என்னால முடியிற உதவிய, நான் உனக்குச் செய்யலாம்னு வந்தேன். நான் ரொம்பச் சின்னவள்னு எனக்குத் தெரியும். ஆனா, எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்று சொல்லிவிட்டு தையல்சிட்டுத் தைக்க ஆரம்பித்தது.

நாள் கணக்கில்,

மாதக் கணக்கில்,

வருடக் கணக்கில்

தைத்துக்கொண்டே இருந்தது.

இப்போதும்கூட அது தைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அது தைக்கும் வேகத்தைவிட அதிக வேகத்தில் வானம் கிழிந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் விடாமுயற்சியோடு அந்தத் தையல்சிட்டு வானத்தைத் தைத்துக்கொண்டிருக்கிறது.

தைப்பதற்காக அது வானத்தில் போட்ட சின்னச்சின்ன ஓட்டைகள்தான் விண்மீன்கள். அது இரவில் தங்குவதற்காகத் தைத்துக்கொண்ட கூடுதான் நிலா.

நிலா நிலா ஓடிவா

நில்லாமல் ஓடிவா

தாவித் தாவி ஓடிவா

தையல்சிட்டைக் கொண்டுவா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon